தேடுதல்

Vatican News
உக்ரைனில், வாழ்வின் கடைசிநிலையில் உள்ளவருக்கு ஆறுதல் உக்ரைனில், வாழ்வின் கடைசிநிலையில் உள்ளவருக்கு ஆறுதல் 

கருணைக்கொலையை நோக்கிய ஆபத்தான போக்கு

மற்றவர் உதவியோடு மேற்கொள்ளப்படும் தற்கொலை, மருத்துவர்களை, உதவியாளர்கள் என்ற நிலையிலிருந்து, மரணதண்டனை நிறைவேற்றுபவர்கள் என்ற நிலைக்கு உட்படுத்தும் - உலக மருத்துவ கழகத்தின் தலைவர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஜெர்மனியில், மற்றவர் உதவியோடு மேற்கொள்ளப்படும் தற்கொலை, கருணைக்கொலையைச் சட்டமுறைப்படி அனுமதிப்பதற்கு இட்டுச்செல்லும், மற்றும், அதற்கு எதிராக, அந்நாட்டு கத்தோலிக்கத் திருஅவையும், பெருமளவான நலவாழ்வுப் பணியாளர்களும் மேற்கொண்டுவரும் முயற்சிகளைப் பின்னடையச் செய்யும் என்று, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.

ஏப்ரல் 17, இச்சனிக்கிழமையன்று, ஜெர்மனியில், வாழ்வுக்கு ஆதரவான 26வது கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் துவக்கப்பட்டுள்ளதையொட்டி, வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டியளித்த, ஜெர்மனியின் பவேரிய நன்னெறி குழுவின் உறுப்பினரான, Augsburg துணை ஆயர் Anton Losinger அவர்கள், இவ்வாறு கூறியுள்ளார்.

கருணைக்கொலைக்கு எதிரான திருஅவையின் நிலைப்பாடு பற்றியும் எடுத்துரைத்த ஆயர் Losinger அவர்கள், இடர்செறிந்த வாழ்வுச் சூழல்களை முடித்துக்கொள்வதற்கு, மற்றவர் உதவியோடு மேற்கொள்ளப்படும் தற்கொலை, சரியான பதில் கிடையாது என்றும் கூறினார்.

மற்றவர் உதவியோடு மேற்கொள்ளப்படும் தற்கொலை, மருத்துவர்களை, உதவியாளர்கள் என்ற நிலையிலிருந்து, மரணதண்டனை நிறைவேற்றுபவர்கள் என்ற நிலைக்கு உட்படுத்தி, அவர்களின் பணியில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொணர வழியமைக்கும் என்று,  உலக மருத்துவ கழகத்தின் தலைவர் Frank Ulrich Montgomery அவர்கள், எச்சரிக்கை விடுத்துள்ளதையும், ஆயர் Losinger அவர்கள், தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

கடுமையான நோயில், தற்கொலை எண்ணத்தோடு இருப்பவர்களில் பெரும்பான்மையினோர், மிகப்பெரும் உளவியல் சார்ந்த துயரத்தில் இருப்பவர்கள் என்று, ஜெர்மனியின் தேசிய தற்கொலை தடுப்புத் திட்ட அமைப்பு மேற்கொண்ட ஆய்வறிக்கை கூறுவதையும் குறிப்பிட்ட ஆயர் Losinger அவர்கள், தீராத நோயில், இறக்கும் நிலையில் இருப்பவர்களுக்கு, தகுந்த மருத்துவக் கருவிகளோடு, பராமரிப்பு அவசியம் என்பதையும் வலியுறுத்திக் கூறினார்.

ஜெர்மனியில், “இறந்துகொண்டிருக்கும்போது வாழ்வு” என்ற தலைப்பில் சிறப்பிக்கப்படும், வாழ்வுக்கு ஆதரவான 26வது கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம், Augsburg பேராலயத்தில் இச்சனிக்கிழமை, உள்ளூர் நேரம் காலை 10.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.

1994ம் ஆண்டிலிருந்து, ஜெர்மன் கத்தோலிக்க ஆயர் பேரவையும், அந்நாட்டு இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ அவையும் இணைந்து சிறப்பித்துவரும், மனித வாழ்வுக்கு ஆதரவான கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தில், திருஅவையிலும், சமுதாயத்திலும், மனித வாழ்வின் மாண்பு பற்றிய விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.

17 April 2021, 15:33