தேடுதல்

ஐரோப்பிய ஆயர்களின் ஒரு பகுதி ஐரோப்பிய ஆயர்களின் ஒரு பகுதி 

பசுமைத் திட்டங்களுக்கு முதலிடம் - ஐரோப்பிய ஆயர்கள் விண்ணப்பம்

எந்த ஒரு நிவாரணத் திட்டத்திலும் குடும்பங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என விண்ணப்பிக்கும் ஐரோப்பிய ஆயர்கள்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு, நிவாரணத் திட்டம் ஒன்றை, ஐரோப்பிய ஒன்றிய அவை கொணர்ந்துள்ளது குறித்து, தங்கள் பாராட்டுக்களை வெளியிட்டுள்ளனர், ஐரோப்பிய ஆயர்கள்.

கோவிட்-19 பெருந்தொற்றினால், பொருளாதாரம், பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு உதவும் நோக்கத்தில், 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ம் தேதி, ஒரு இலட்சத்து 10 ஆயிரம் கோடி யூரோக்களை 2021 முதல் 2027 வரையான திட்டங்களுக்கென ஒதுக்கியுள்ள ஐரோப்பிய ஒன்றிய அவை, தற்போது, அடுத்த தலைமுறை ஐரோப்பா என்ற சிறப்புத் திட்டத்தின்கீழ் 75 ஆயிரம் கோடி டாலர்களை ஒதுக்கியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், இயற்கை பாதுகாப்பு, நவீன தொழில் நுட்பம், வேலை வாய்ப்பும் வளர்ச்சியும், கல்வி, நல ஆதரவு என பல்வேறு செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திட்டங்களுக்கு இவ்வுதவித்தொகை வழங்கப்படும் என கூறியுள்ள இந்த அவை, ஒருமைப்பாட்டுடன் செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்த பெருந்தொற்று கற்றுத்தந்துள்ளது என அறிவிக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இத்திட்டங்கள் குறித்து தங்கள் பாராட்டுக்களை வெளியிட்டு வரவேற்றுள்ள ஐரோப்பிய ஆயர்கள், நமது பொதுவான இல்லமாகிய இப்பூமியின் பசுமைத்திட்டங்களுக்கு முதலிடம் கொடுத்து செயல்படுவதுடன், ஏழை நாடுகளின் இயற்கை அழிவிற்கு காரணமான பணக்கார நாடுகள், அந்தக் கடனை செலுத்தும்வண்ணம் திட்டங்களை தீட்டி, ஏழை நாடுகளுக்கு உதவவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளனர்.

கோவிட் பெருந்தொற்றால் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள இந்நிலைக்கு, அனைத்துலக அளவில் தீர்வு காணப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் தங்கள் அறிக்கையில் முன்வைத்துள்ள ஆயர்கள், எந்த ஒரு நிவாரணத் திட்டத்திலும், குடும்பங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகள், இந்த நெருக்கடியிலிருந்து, பலத்துடனும், ஒன்றிணைந்த செயல்பாடுகளுடனும், விவேகமுடனும், ஒருமைப்பாட்டுடனும், இயற்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனநிலையுடனும் வெளிவருவதோடு, முழு உலகையும், சகோதரத்துவ உணர்வுடன் முன்னோக்கி எடுத்துச்செல்ல உதவுவார்களாக என்ற நம்பிக்கையையும் விடுத்துள்ளனர், ஐரோப்பிய ஆயர்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 April 2021, 14:38