தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஈராக் திருத்தூதுப் பயணம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஈராக் திருத்தூதுப் பயணம்   (AFP or licensors)

ஈராக்கிற்கு மன்னிப்பு, ஒப்புரவு தேவைப்படுகின்றன

சமயச் சார்பற்ற ஓர் அரசு, அனைத்து மதங்கள், கலாச்சாரங்கள், குழுக்கள், மற்றும், மொழிகளை ஏற்கின்றது - பாக்தாத் கர்தினால் சாக்கோ

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தன் குடிமக்கள் ஒவ்வொருவரையும், நியாயமான முறையில் நடத்தும், பண்பட்ட ஒரு  நிர்வாக அமைப்பைக் கொண்டிருக்கும் நாடுகள் போன்று, ஈராக் நாடும், உலகத் தளத்தில் தன்னை தக்கவைத்துக்கொள்வதற்கு, அந்நாட்டிற்கு, சமயசார்பற்ற, மற்றும், உறுதியான மக்களாட்சி அரசு தேவைப்படுகின்றது என்று, ஈராக் கத்தோலிக்கத் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈராக்கிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டு ஒரு மாதம் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு, பாக்தாத் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் லூயிஸ் இரஃபேல் சாக்கோ அவர்கள், ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

திருத்தந்தையின் திருத்தூதுப் பயணத்திற்குப்பின் அந்நாட்டில் இடம்பெற்றுள்ள மாற்றங்கள் பற்றி பகிர்ந்துகொண்டுள்ள கர்தினால் சாக்கோ அவர்கள், உடன்பிறந்த உணர்வும், பன்மைத்தன்மையை ஏற்பதும், ஒருங்கிணைந்த வாழ்வுக்கு அடிப்படை என்றும், ஈராக்கிற்கு மன்னிப்பும், ஒப்புரவும் தேவைப்படுகின்றன என்றும் எடுத்துரைத்துள்ளார்.

வருகிற அக்டோபர் 10ம் தேதி, ஈராக்கில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்கள் குறித்தும் பேசியுள்ள கர்தினால் சாக்கோ அவர்கள், அனைத்துக் குடிமக்களுக்கும் சம உரிமைகளுக்கும், மாண்புடைய ஒரு வாழ்வுக்கும் உறுதி வழங்குவதே, சனநாயக அரசுக்கு அடிப்படையான தேவை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு நாட்டில் நிலவும் சமயச்சார்பற்ற அமைப்புமுறை, மதத்திற்கு எதிரி அல்ல, மாறாக, அத்தகைய அரசு, குடிமக்கள் ஒவ்வொருவரும் தங்களின் மதநம்பிக்கையை  நடைமுறைப்படுத்துவதற்கு உறுதியளிக்கிறது என்றும், அதேநேரம், ஒரு குறிப்பிட்ட மதத்தைத்தான் பின்பற்றவேண்டும் என கட்டாயப்படுத்துவதில்லை என்றும், கர்தினால் சாக்கோ அவர்கள் எடுத்துரைத்தார்.

சமயச் சார்பற்ற ஓர் அரசு, அனைத்து மதங்கள், கலாச்சாரங்கள், குழுக்கள் மற்றும், மொழிகளை ஏற்கின்றது என்றும், பொதுநல விவகாரங்களை நியாயமாக கையாண்டு, அதற்கு எதிரான ஆபத்துக்களிலிருந்து பாதுகாக்கிறது என்றும், பாக்தாத் கர்தினால் சாக்கோ அவர்கள் கூறினார்.

ஈராக்கில், வருகிற ஜூன் மாதம் நடைபெறுவதாய் இருந்த நாடாளுமன்றத் தேர்தல்கள், அக்டோபருக்கு மாற்றி  வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் 328 உறுப்பினர்கள், வருங்கால அரசுத்தலைவர் மற்றும், பிரதமரைத் தேர்ந்தெடுத்து, புதிய அரசை அமைப்பார்கள். (AsiaNews)

10 April 2021, 15:14