தேடுதல்

Vatican News
அமேசான் காலநிலை மாற்றம் - உச்சிமாநாடு பற்றிய அறிவிப்பு அமேசான் காலநிலை மாற்றம் - உச்சிமாநாடு பற்றிய அறிவிப்பு 

அமேசான் பருவமழைக் காடுகளைப் பாதுகாக்க வலியுறுத்தல்

அரசுத்தலைவர் ஜோ பைடன் அவர்களின் முயற்சியினால், ஏப்ரல் 22, 23, ஆகிய இரு நாள்களில், காலநிலை மாற்றம் குறித்த இணையம்வழி உச்சிமாநாடு நடைபெறவுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அமேசான் பருவமழைக் காடுகளையும், அப்பகுதி மக்களையும் பாதுகாப்பதற்கு அரசுகள் அக்கறை காட்டுமாறு, அமெரிக்க ஐக்கிய நாடு, மற்றும், அமேசான் பகுதி கத்தோலிக்க ஆயர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், உலகத்தலைவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.  

அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் ஜோ பைடன் அவர்களின் முயற்சியினால், ஏப்ரல் 22, வருகிற வியாழன், 23, வெள்ளி ஆகிய இரு நாள்களில், காலநிலை மாற்றம் குறித்த உலகத்தலைவர்களின் இணையம்வழி உச்சிமாநாடு நடைபெறவிருப்பதையொட்டி, கத்தோலிக்கத் தலைவர்கள், இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

மனித சமுதாயத்திற்கும், வாழ்வுக்கும், அமேசான் பகுதி மிகவும் முக்கியமானது என்றும், அப்பகுதியைப் பாதுகாப்பது, காலநிலையை சமநிலையில் வைத்திருக்க உதவும் என்றும், REPAM எனப்படும், அமெரிக்க அமேசான் பகுதி பாதுகாப்பு அமைப்பின் தலைவர், பெரு நாட்டு கர்தினால் Pedro Barreto Jimeno அவர்கள் கூறியுள்ளார்.

அமேசான் பருவமழைக் காடுகளை, முறைகேடாக கைக்கொள்வது, அப்பகுதியில் வாழ்கின்ற பழங்குடி இன மக்களை மட்டுமல்லாமல், அவர்களின் கலாச்சாரத்தையும், பூர்வீக இடத்தையும் அழிப்பதாக அமையும் என்றும், பெரு நாட்டு கர்தினால் Jimeno அவர்கள் கூறியுள்ளார்.

இந்த பழங்குடி இன மக்களே, அமேசான் பருவமழைக் காடுகளின் பாதுகாவலர்கள் என்றும், தங்களின் கலாச்சாரத்தால் பேணிப் பாதுகாத்துவரும் அப்பகுதி, அவர்களின் மிகப்பெரும் ஆன்மீக கருவூலம் என்றும், கர்தினால் Jimeno அவர்கள் கூறியுள்ளார்

அமேசான் பகுதியை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து, நாற்பதுக்கும் மேற்பட்ட  உலகத் தலைவர்கள் விவாதிக்கப்படவிருப்பதைக் குறிப்பிட்டுள்ள, கத்தோலிக்கத் தலைவர்கள், அமேசான் பகுதியில் ஒன்றோடொன்று தொடர்புடைய அம்சங்கள் பற்றி, கொள்கை அமைப்பாளர்கள் சிந்திக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

அமேசான் பகுதி பாதுகாவலர்கள்

இதற்கிடையே, அமேசான் பகுதியில், பழங்குடி இனத்தவரின் உரிமைகள் பாதுகாக்கப்பட உழைக்கும் ஆர்வலர்கள், இரண்டு நாள்களுக்கு ஒருவர் என, கொலைசெய்யப்படுவதாக கூறப்படுகின்றது. 

2019ம் ஆண்டைவிட, 2020ம் ஆண்டில், பழங்குடி இனத் தலைவர்கள் கொலைசெய்யப்படுவது, 67 விழுக்காடு அதிகரித்துள்ளது. 2020ம் ஆண்டில் 202 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

20 April 2021, 15:32