தேடுதல்

Vatican News
பாகிஸ்தான் காரித்தாஸ் : மரம் நடும் முயற்சியில் பள்ளிச் சிறார் - கோப்புப் படம் பாகிஸ்தான் காரித்தாஸ் : மரம் நடும் முயற்சியில் பள்ளிச் சிறார் - கோப்புப் படம் 

கிராம மக்களின் முகங்களில் புன்னகையை காண்பதே குறிக்கோள்

நீண்ட காலப் பயன்களை மனதில் கொண்டதாக, 'மேலும் 10 இலட்சம் மரங்கள்' என்ற திட்டத்தின் கீழ், பாகிஸ்தான் கிராமங்களில் மரங்களை நட்டுவருகிறது, கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் நீரின்றி வாடிய கிராமம் ஒன்றிற்கு குடிநீர் வசதியை செய்து கொடுத்திருப்பதுடன், 'மேலும் 10 இலட்சம் மரங்கள்' என்ற திட்டத்தையும் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது அந்நாட்டு காரித்தாஸ் அமைப்பு.

Ahsas Raza Goth என்ற கிராமத்தின் குடிநீர் குழாய்கள் அனைத்தையும், அக்கிராம மக்களின் விண்ணப்பத்தின்பேரில் சரிசெய்து உதவியுள்ள பாகிஸ்தான் காரித்தாஸ் அமைப்பு, பசுமைத்திட்டத்தின் கீழ் மரம் நடும் பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.

நீர் வழங்கும் குழாய்கள் பழுதடைந்ததால், நீரின்றி பல மைல்கள் நடந்துசென்று தண்ணீரைக்கொண்டு வந்த பெண்களின் துயர் நிலைகளை போக்கும் நோக்கத்தில் உதவிகளை வழங்கியுள்ள பாகிஸ்தான் காரித்தாஸ் அமைப்பு, விழிப்புணர்வுத் திட்டங்கள் வழியாக சமுதாய வளர்ச்சித் திட்டங்களுக்கும் உதவிவருகின்றது.

கிராமப்புற மக்களுக்கு நீர் வழங்கும் WASH என்ற திட்டத்தின் வழியாக உதவிவரும் கத்தோலிக்க பிறரன்பு நிறுவனமான காரித்தாஸ் அமைப்பு, கிராமப்புற மக்களின் முகங்களில் புன்னகையைக் காண்பதை தன் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டுவருவதாக அதன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாற்காலிகத் திட்டங்களுக்கு உதவுவதுடன், நீண்டகாலப் பயன்களை மனதில் கொண்டதாக, 'மேலும் 10 இலட்சம் மரங்கள்', என்ற திட்டத்தின் கீழ், பாகிஸ்தானின் கிராமங்களில், வேப்பமரங்களையும், பழமரங்களையும் நட்டுவருகிறது, அந்நாட்டு கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு. (AsiaNews)

19 April 2021, 14:17