தேடுதல்

Vatican News
பாக்தாத்தில் தீ விபத்துக்கு உள்ளான கோவிட்-19 மருத்துவமனை பாக்தாத்தில் தீ விபத்துக்கு உள்ளான கோவிட்-19 மருத்துவமனை  

கோவிட்-19 மருத்துவமனை தீ விபத்து, கர்தினால் சாக்கோ கவலை

பேரிடர்களைத் தவிர்ப்பதற்கு, அரசு, மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு திருஅவை தன் முழு ஆதரவையும் வழங்கும் - கரத்னால் சாக்கோ

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 பெருந்தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கிவந்த, பாக்தாத் மருத்துவமனையில் இடம்பெற்ற தீ விபத்திற்கு, பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய, ஊழல்நிறைந்த அரசு அதிகாரிகளைக் குறை கூறியுள்ளார், பாக்தாத் கர்தினால் இரபேல் லூயிஸ் சாக்கோ.

ஏப்ரல் 24, இச்சனிக்கிழமை இரவில் பாக்தாத் நகரிலுள்ள Ibn Al-Khatib மருத்துவமனையில் இடம்பெற்ற தீ விபத்தில், இதுவரை 82 பேர் உயிரிழந்துள்ளது மற்றும், 110 பேர் காயமடைந்துள்ளது குறித்து, பாக்தாத் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை, கர்தினால் சாக்கோ அவர்கள், மிகுந்த வேதனையோடு, இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததால், இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறியுள்ளவேளை, குடிமக்களுக்குப் போதிய வசதிகளைச் செய்துகொடுப்பதற்கு நிதியைப் பயன்படுத்தாமல் இருக்கும் அரசு அதிகாரிகளின் நடவடிக்கையே இதற்குக் காரணம் என்று கூறியுள்ளார், கர்தினால் சாக்கோ.

இந்த பெருந்துயரத்திற்குப் பின்னால், அதிகாரிகளின் ஊழல் மறைந்துள்ளது என்றும், இந்த விபத்து, ஒரு தேசிய பேரிடர் என்றும் கூறியுள்ள கர்தினால் சாக்கோ அவர்கள், இத்தகைய வெட்கத்துக்குரிய பேரிடர்களைத் தவிர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, அனைவரும் ஒன்றிணையவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

இதில் அரசு, பாதுகாப்புப் படைகள், மற்றும், மருத்துவப் பணியாளர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு திருஅவை தன் முழு ஆதரவையும் வழங்கும் என்றும் உறுதியளித்துள்ள கரத்னால் சாக்கோ அவர்கள், அமைதி, நிலையானதன்மை, ஒற்றுமை போன்றவற்றை, நாட்டில் கட்டியெழுப்ப, ஈராக் மக்கள் அனைவரும் ஒன்றிணையுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், இந்த தீ விபத்தில் பலியானவர்கள், மற்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு, தன் செபங்களையும், அருகாமையையும் தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈராக் திருத்தூதுப்பயணத்தின்போது, போர் மற்றும், பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கென, அந்நாட்டு கல்தேய திருஅவைக்கு 3,50,000 டாலர்களை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

27 April 2021, 15:13