தேடுதல்

Vatican News
கொழும்புவின் புனித அந்தோனியார் திருத்தலத்தில் 2ம் ஆண்டு நினைவாக கூடிவரும் மக்கள் கொழும்புவின் புனித அந்தோனியார் திருத்தலத்தில் 2ம் ஆண்டு நினைவாக கூடிவரும் மக்கள்  (AFP or licensors)

ஏப்ரல் 21 – இலங்கை தாக்குதல்களின் 2ம் ஆண்டு நினைவு

சாட்சிய மரணமடைந்த கிறிஸ்தவர்களின் நினைவாக, நீர்கொழும்பு கல்லறையில் கட்டப்பட்டுள்ள ஒரு சிற்றாலயம் ஏப்ரல் 21, இப்புதனன்று திறந்து வைக்கப்பட்டது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

2019ம் ஆண்டு ஏப்ரல் 21 உயிர்ப்புப் பெருவிழா ஞாயிறன்று, இலங்கையின் ஆலயங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல்களின் இரண்டாம் ஆண்டு நினைவாக, ஏப்ரல் 21, இப்புதனன்று, கத்தோலிக்கப் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என்றும், இப்புதன் காலை 8.45 மணிக்கு, இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்படும் என்றும் கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் இச்செவ்வாயன்று அறிவித்திருந்தார்.

இந்த தாக்குதலுக்குப் பின்புலத்தில் இருப்பவர்களைக் கண்டுபிடிப்பதில் அரசு காட்டிவரும் தயக்கமும், ஒளிவுமறைவான செயல்பாடுகளும் மக்களின் நம்பிக்கையைக் குலைத்துள்ளன என்று கூறிய கர்தினால் இரஞ்சித் அவர்கள், உண்மை, முழுமையாக வெளிவரும் வரையில், கிறிஸ்தவ மக்களின் போராட்டம் தொடரும் என்றும் எடுத்துரைத்தார்.

கர்தினால் இரஞ்சித் அவர்களின் அழைப்பிற்கிணங்க இலங்கையின் இஸ்லாமியர்கள் ஏப்ரல் 21ம் தேதி காலையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலியில் கலந்துகொள்வார் என்று, MCSL என்ற இஸ்லாமிய அமைப்பின் உதவித் தலைவர், ஹில்மி அகமத் அவர்கள் கூறியுள்ளார்.

அத்துடன், உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அரசிடம் தாங்கள் வலியுறுத்தி வருவதாகவும், உண்மையான இஸ்லாமியர் எவரும் வன்முறைக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என்றும் கூறிய ஹில்மி அகமத் அவர்கள், இந்த தாக்குதலில் ஈடுபட்ட இஸ்லாமியரை அடக்கம் செய்வதற்கு மறுத்துவிட்டதையும் சுட்டிக்காட்டினார்.

சாட்சிய மரணமடைந்த கிறிஸ்தவர்களின் நினைவாக, நீர்கொழும்பு கல்லறையில் கட்டப்பட்டுள்ள ஒரு சிற்றாலயம் ஏப்ரல் 21, இப்புதனன்று இலங்கையின் 15 ஆயர்கள், அருள்பணியாளர், துறவியர், பொதுநிலையினர் ஆகியோர் பங்கேற்ற ஒரு நிகழ்வின்போது திறந்து வைக்கப்பட்டது என்று பீதேஸ் செய்தி கூறுகிறது.

பாப்பிறை மறைபரப்புப்பணி சங்கங்கள் வழங்கிய நிதி உதவியுடன் கட்டப்பட்ட இந்த நினைவுச் சிற்றாலயத்தின் திறப்பு விழாவையடுத்து, அமைதி ஊர்வலம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது என்றும், இந்த ஊர்வலம், தாக்குதலுக்கு உள்ளான கட்டுவப்பிட்டியா புனித அந்தோனியார் திருத்தலத்தில் முடிவுற்று, அங்கு இறந்தோரின் நினைவாக திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது என்றும் பீதேஸ் செய்தி கூறுகிறது. (AsiaNews/ Fides)

21 April 2021, 14:33