தேடுதல்

Vatican News
ஹெய்ட்டி நாட்டிற்காக இறைவேண்டல் ஹெய்ட்டி நாட்டிற்காக இறைவேண்டல் 

ஹெய்ட்டி நாட்டிற்காக செபிக்கும் பிரேசில் திருஅவை

ஒரு நாட்டின் மறைப்பணி நடவடிக்கைகளுக்காக சிறப்பாக இறைவேண்டல் செய்யும் விசுவாசிகள், செபிப்பதன் வழியாக, அவர்களும், மறைப்பணியாளர்களாக மாறுகின்றனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

ஹெய்ட்டி நாட்டில் அமைதி நிலவவும், அந்நாட்டின் மறைப்பணிகளுக்கும் இறைவேண்டல் செய்யும் சிறப்பு நாளாக மே மாதம் முதல் தேதியை அறிவித்துள்ளனர், பிரேசில் ஆயர்கள்.

உலகம் முழுவதும் துன்புறும் கிறிஸ்தவர்களுக்கு ஆறுதலாக உதவி வரும் திருப்பீடத்தின் Aid to the Church in Need (ACN) என்ற அமைப்புடன் இணைந்து, திட்டமிடப்பட்டுள்ள இந்த இறைவேண்டல் நாளில், இயற்கை பேரழிவுகளாலும், அரசியல் மற்றும் சமுதாய பதட்ட நிலைகளாலும், பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கும் ஹெய்ட்டி நாட்டில், அமைதி திரும்ப, சிறப்பு செபங்கள் எழுப்பப்படும் என்று பிரேசில் ஆயர்கள் கூறியுள்ளனர்.

2010ம் ஆண்டில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தாலும், 2016ம் ஆண்டின் கடும் புயலாலும் பாதிக்கப்பட்டு, இன்னும் அவற்றின் பாதிப்புகளிலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஹெய்ட்டி நாட்டில், தற்போது, அரசியல் பதட்டநிலைகளும், மனிதர்கள் குற்றக் கும்பல்களால் கடத்தப்படுவதும் அதிகரித்துவரும் நிலையில், மக்களனைவரும் தொடர்ந்து அச்சத்திலேயே வாழ்ந்துவருவதாக ஹெய்ட்டி நாட்டு ஆயர் Jean Désinord அவர்கள், ஏற்கனவே, தன் கவலையை வெளியிட்டுள்ளார்.

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று ஒவ்வொரு நாட்டிற்கு என்று குறிப்பிட்டு, விசுவாசிகளை இறைவேண்டல் செய்ய அழைக்கும் பிரேசில் ஆயர்கள், ஏற்கனவே ஏப்ரல் 1ம் தேதியை, மியான்மார் நாட்டில் அமைதி நிலவ செபிக்குமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.

ஒவ்வொரு மாதமும் முதல் தேதி இயேசுவின் புனித குழந்தை தெரேசாவின் பரிந்துரையால், ஒவ்வொரு நாட்டிற்கும் இறைவேண்டல் செய்வதற்கென துவக்கப்பட்டுள்ள இத்திட்டம், இறைவேண்டல் செய்வது மறைப்பணி நடவடிக்கை என்ற நோக்கத்தைக் கொண்டுள்ளது.

ஒரு நாட்டின் அமைதிக்காகவும், அந்நாட்டின் மறைப்பணி நடவடிக்கைகளுக்காகவும், சிறப்பாக இறைவேண்டல் செய்யும் விசுவாசிகள், அவ்வாறு செபிப்பதன் வழியாக, அவர்களும், மறைப்பணியாளர்களாக மாறுகின்றனர் என உரைத்துள்ளனர், பிரேசில் ஆயர்கள்.

29 April 2021, 14:21