தேடுதல்

பொலிவியா நாட்டில் புனிதவார வழிபாட்டு நிகழ்வு பொலிவியா நாட்டில் புனிதவார வழிபாட்டு நிகழ்வு 

வாழ்வு, நம்பிக்கை, அமைதி என்ற மீட்பின் அடையாளங்கள்

அநீதியும் வன்முறைகளும் காணப்படும் இடங்களில் அமைதியின் சான்றுகளாகவும், அமைதியின் கருவிகளாகவும் செயல்பட, கிறிஸ்தவருக்கு அழைப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

அநீதியும் வன்முறைகளும் காணப்படும் இடங்களில் அமைதியின் சான்றுகளாகவும், அமைதியின் கருவிகளாகவும் செயல்பட, ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார், பொலிவியா நாட்டு பேராயர் Sergio Gualberti.

பொலிவியாவின் சாந்தா குரூஸ் பெருமறைமாவட்டப் பேராயர் Gualberti அவர்கள், மனிதகுல வரலாற்றை நிரந்தரமாக மாற்றியுள்ள இயேசுவின் உயிர்ப்புக்கு சாட்சிகளாக விளங்கும் நாம், அச்செய்தியை அனைவருக்கும் எடுத்துரைக்கும் கடமையை கொண்டுள்ளோம் என, தன் உயிர்ப்பு ஞாயிறு மறையுரையில் எடுத்தியம்பினார்.

அமைதி நிறைந்த ஒரு சமுதாயத்தை கட்டியெழுப்பும் நோக்கத்தில், ஒவ்வொரு மனிதரின் மாண்பையும், வாழ்வின் புனிதத்துவத்தையும் மதிப்பவர்களாக, அமைதியின் கருவிகளாக ஒவ்வொரு கிறிஸ்தவரும் செயல்படவேண்டும் என்ற அழைப்பை முன்வைத்த பேராயர் Gualberti அவர்கள், ஏழ்மை, பெருந்தொற்று, வன்முறை, மோதல்கள், வேதனைகள், ஒதுக்கிவைத்தல், பிரிவினைகள் போன்றவை காணப்படும் இடங்களில்,  அமைதி மற்றும் ஒப்புரவின் கருவிகளாகச் செயல்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இறைவனைக் குறித்த அக்கறை ஏதுமின்றி, சிலவேளைகளில், அவருக்கு எதிராகவும் செயல்படும் இன்றைய உலகில், சுயநலன்களைக் கைவிட்டு, பிறரன்பு மற்றும் நம்பிக்கையின் மகிழ்வை மக்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டிய கிறிஸ்தவர்களின் கடமையையும் எடுத்தியம்பினார், பொலிவியாவின் சாந்தா குரூஸ் பேராயர்.

வாழ்வு, நம்பிக்கை, அமைதி என, உயிர்த்த கிறிஸ்து, நமக்குப் பெற்றுத்தந்துள்ள மீட்பின் அடையாளங்களை, நாம் நம் தினசரி வாழ்விலும், பணியிலும், குடும்பங்களிலும், சமுதாய வாழ்விலும் கண்டுகொள்ளவேண்டும் என்ற அழைப்பையும் விடுத்தார் பேராயர் Gualberti

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 April 2021, 11:37