தேடுதல்

Vatican News
இங்கிலாந்தில் பெருந்தொற்று காலத்தில் திருப்பலி நிறைவேற்றும் பேராயர் Stephen Cottrell இங்கிலாந்தில் பெருந்தொற்று காலத்தில் திருப்பலி நிறைவேற்றும் பேராயர் Stephen Cottrell  (AFP or licensors)

இறைமக்கள், திருப்பலியை, வாழ்வின் மையமாக அமைக்க...

பெருந்தொற்றைத் தொடர்ந்துவரும் காலங்களில், திருஅவை அனைவருக்கும் வழங்கியுள்ள விலைமதிப்பற்ற கருவூலமான திருப்பலி, மீண்டும் மக்களின் நேரடி பங்கேற்புடன் நடைபெறவேண்டும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பெருந்தொற்றைத் தொடர்ந்துவரும் காலங்களில், இறைமக்கள், திருப்பலியை தங்கள் வாழ்வின் மையமாக அமைக்கவேண்டும் என்ற விண்ணப்பத்தை, இங்கிலாந்து, மற்றும் வேல்ஸ் ஆயர்கள் விடுத்துள்ளனர்.

தங்கள் வசந்தகாலக் கூட்டத்தை அண்மையில் நிறைவு செய்த இங்கிலாந்து, மற்றும் வேல்ஸ் ஆயர்கள், 'ஆண்டவரின் நாள்' என்ற தலைப்பில் வெளியிட்ட ஒரு மடலில், மக்கள், திருஅவைக்கும், அருள்சாதன வாழ்வுக்கும் திரும்பவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்தப் பெருந்தொற்று காலத்தில், மருத்துவமனைகளில், வயது முதிர்ந்தோர் இல்லங்களில், பள்ளிகளில், சிறைச்சாலைகளில், சோர்வின்றி பணியாற்றிய குடும்பத்தினர், பங்கு அவை உறுப்பினர்கள், மற்றும், அவர்களை வழிநடத்திய அருள்பணியாளர்கள், துறவியர் அனைவருக்கும், இம்மடலின் துவக்கத்தில், ஆயர்கள் தங்கள் நன்றியை வெளிப்படுத்தியுள்ளனர்.

மக்களின் துயர் துடைக்கவும், பசியைப் போக்கவும் தாராள மனதுடன் உதவி செய்தவர்கள் அனைவரும் கிறிஸ்தவ விழுமியங்களை இவ்வுலகிற்கு வெளிச்சமிட்டு காட்டியுள்ளனர் என்று ஆயர்களின் மடல் சுட்டிக்காட்டுகிறது.

இந்த நெருக்கடி வேளையில் மக்கள் தங்கள் நம்பிக்கையை கைவிடாமல் இருந்ததற்கு நன்றி கூறும் ஆயர்கள், பெருந்தொற்றைத் தொடர்ந்துவரும் காலங்களில், திருஅவை அனைவருக்கும் வழங்கியுள்ள விலைமதிப்பற்ற கருவூலமான திருப்பலி, மீண்டும் மக்களின் நேரடி பங்கேற்புடன் நடைபெறவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.

28 April 2021, 15:57