தேடுதல்

Vatican News
ஆண்டவரே! எங்கள் தலைவரே! உமது மாட்சி வானங்களுக்கு மேலாகவும் உயர்ந்துள்ளது. (திருப்பாடல் 8:1) ஆண்டவரே! எங்கள் தலைவரே! உமது மாட்சி வானங்களுக்கு மேலாகவும் உயர்ந்துள்ளது. (திருப்பாடல் 8:1) 

விவிலியத்தேடல்: திருப்பாடல் 8–இறை மாட்சியும் மானிட மேன்மையும் 1

வானத்தில் ஆண்டவரின் மாட்சியைக் கண்ட தாவீதின் அனுபவம், பின்னொரு காலத்தில் அவர் உருவாக்கிய 8ம் திருப்பாடலில் வெளிப்பட்டது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

திருப்பாடல் 8 - இறை மாட்சியும் மானிட மேன்மையும் 1

வானியலில் மிகவும் புகழ்பெற்ற அறிவாளி ஒருவர், ஆடுமேய்க்கும் ஆயர் ஒருவரைச் சந்தித்தார். தன்னிடம் இருக்கும் வானியல் தொலைநோக்கு கருவியின் சக்தியைப்பற்றி, அவர், ஆயரிடம், நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தார். "என் தொலைநோக்கியின் வழியாக, பல்லாயிரம் விண்மீன்களை என்னால் துல்லியமாக அடையாளம் கண்டுகொள்ளமுடியும்" என்று, அந்த வானியல் ஆய்வாளர் சொன்னார். ஆயர் அவரிடம், "நீங்கள் பல்லாயிரம் விண்மீன்களை மட்டுமே காண்கிறீர்கள். நானோ, ஒரு சில விண்மீன்களையும், அவற்றிற்குப் பின்னிருக்கும் கடவுளையும் காண்கிறேன்" என்று சொன்னார்.

பாலஸ்தீனாவின் பெத்லகேமில், தன் தந்தையின் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த இளைஞர் தாவீது, இரவு வானில் தெரிந்த விண்மீன்களைக் கண்டபோது, அவற்றின் பின்புலத்தில், அவற்றைப் படைத்த இறைவனையும் கண்டார். வானத்தில் ஆண்டவரின் மாட்சியைக் கண்ட அந்த அனுபவம், பின்னொரு காலத்தில் அவர் உருவாக்கிய ஒரு பாடலில் வெளிப்பட்டது. தாவீது உருவாக்கிய அந்தப் பாடலில், இன்று நாம் விவிலியத் தேடலை மேற்கொண்டுள்ளோம்.

இதுவரை நாம் சிந்தித்து வந்துள்ள 7 திருப்பாடல்களில் இல்லாத மகிழ்வு, "இறைவனின் மாட்சியும், மானிடரின் மேன்மையும்" என்று தலைப்பிடப்பட்டுள்ள 8ம் திருப்பாடலில் வெளிப்படுகிறது. 9 இறைவாக்கியங்களைக் கொண்ட இத்திருப்பாடல், ஒரு பாடலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு, இப்பாடலின் முன்குறிப்பு ஒரு காரணம். “பாடகர் தலைவர்க்கு: ‘காத்து’ நகர்ப் பண்; தாவீதின் புகழ்ப்பா” என்ற முன்குறிப்பில் கூறப்பட்டுள்ள 'காத்து' என்ற சொல்லுக்கு, விவிலிய விரிவுரையாளர்கள் இருவேறு விளக்கங்கள் கூறியுள்ளனர். 'காத்து' என்பது ஒரு நகரம் என்று கூறுவோரும் உண்டு. அல்லது, 'காத்து' என்பது, ஓர் இசைக்கருவி என்று கூறுவோரும் உண்டு. எனவே, இந்தப் பாடல், 'காத்து' என்ற நகரில் பயன்படுத்தப்பட்ட ஒரு இராகத்தின் அடிப்படையில் பாடப்பட்ட ஒரு பாடலாகவோ, அல்லது, 'காத்து' என்ற இசைக்கருவியின் உதவியுடன் பாடப்பட்ட ஒரு பாடலாகவோ இருந்தது என்பது விரிவுரையாளர்கள் தரும் விளக்கம்.

8ம் திருப்பாடல், யூதர், கத்தோலிக்கர், லூத்தரன், ஆங்கிலிக்கன் ஆகிய அனைத்துப் பிரிவினராலும் பாடலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திருப்பாடலை அடித்தளமாகக் கொண்டு, ஆங்கில மொழியில் எழுதப்பட்ட "How Great Thou Art" என்ற பாடல், "Amazing Grace" என்ற ஆங்கிலப்பாடலுக்கு அடுத்தபடியாக, அதிகப் புகழ்பெற்ற பாடலாக இருந்து வருகிறது.

இதுவரை நாம் சிந்தித்த 7 திருப்பாடல்களில், முதலிரு திருப்பாடல்களைத் தவிர, ஏனைய 5 திருப்பாடல்களும், 'ஆண்டவரே', அல்லது 'கடவுளே' என்ற விளிச்சொற்களுடன், இறைவனிடம் நேரடியாகப் பேசுவதுபோல் துவங்குகின்றன. ஆயினும், இந்த 5 திருப்பாடல்களிலும், தாவீது, ஆங்காங்கே, தன் உள்ளத்தில் எழுந்த எண்ணங்களை, ஓர் அறிக்கையாக, ஓர் எச்சரிக்கையாக வழங்கியுள்ளதையும் நாம் காணலாம். எடுத்துக்காட்டாக,

"நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்; ஏனெனில், ஆண்டவரே எனக்கு ஆதரவு. என்னைச் சூழ்ந்திருக்கும் பல்லாயிரம் பகைவருக்கு நான் அஞ்சமாட்டேன்." (தி.பா. 3:5-6) என்பது, ஓர் அறிக்கையாக,

"சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்; படுக்கையில் உங்கள் உள்ளத்தோடு பேசி அமைதியாயிருங்கள். முறையான பலிகளைச் செலுத்துங்கள்; ஆண்டவரை நம்புங்கள்." (தி.பா.4:4-5) என்பது, ஓர் அறிவுரையாக,

"தீங்கிழைப்போரே! நீங்கள் அனைவரும் என்னை விட்டு அகன்று போங்கள்; ஏனெனில், ஆண்டவர் என் அழுகுரலுக்குச் செவி சாய்த்துவிட்டார்." (தி.பா. 6:8) என்பது, ஓர் எச்சரிக்கையாக ஒலிக்கின்றன. 8ம் திருப்பாடல் முழுவதுமே, இறைவனிடம் நேரடியாகப் பேசப்படும் உரையாடலாக, இறைவேண்டலாக அமைந்துள்ளது.

இப்பாடலின் ஆரம்பத்தில், இறைவனை, தாவீது, "ஆண்டவரே!" என்றும், "எங்கள் தலைவரே!" என்றும் அழைக்கிறார். இஸ்ரயேல் மக்கள், இறைவனைக் குறிக்க பயன்படுத்திய 'Yahweh' மற்றும் 'Adonai' என்ற இருவகை சொற்கள் இந்த வரியில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில், 'Yahweh' என்பது, 'உடன்படிக்கையின் கடவுள்' என்ற கருத்தை வலியுறுத்தும் சொல். 'Adonai' என்பது, 'மாட்சியுடன் வீற்றிருக்கும் கடவுள்' என்ற கருத்தை வெளிப்படுத்தும் சொல்.

இறைவனை, இவ்வாறு, உறவுகொள்ளும் உடன்படிக்கையின் கடவுளாகவும், அனைத்து மாட்சிக்கும் உரிய மேன்மை மிகு கடவுளாகவும் அழைத்து, தாவீது துவங்கும் இந்த இறைவேண்டல் கவிதையின் முதல் இறைவாக்கியம் இதோ:

ஆண்டவரே! எங்கள் தலைவரே! உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது! உமது மாட்சி வானங்களுக்கு மேலாகவும் உயர்ந்துள்ளது. (திருப்பாடல் 8:1)

ஆடுகளை மேய்த்துவந்த இளைஞனாக, தாவீது, பெரும்பாலான நேரங்களில் இயற்கையுடன் இணைந்த வாழ்வை அனுபவித்தவர். மலைகள், பள்ளத்தாக்குகள், பசும்புல்வெளிகள், தெளிந்த நீரோடைகள் என்று, இறைவனின் கைவண்ணத்தை பல வழிகளில் உணர்ந்த தாவீது, "உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது!" என்று தன் இறைவேண்டல் கவிதையைத் துவங்குவதில் வியப்பு எதுமில்லை.

அடுத்த வரியில், தாவீதின் உள்ளம் இவ்வுலகைத் தாண்டி, வானங்களைக் கடந்துசெல்கிறது. பகல் நேரங்களைவிட, இரவு நேரங்களில் விண்மீன்களும், நிலவும் ஒளிரும் வானத்தைக் கண்டு தாவீது வியந்திருக்கவேண்டும். அந்த வியப்பு, "உமது மாட்சி வானங்களுக்கு மேலாகவும் உயர்ந்துள்ளது" என்ற சொற்களில் வெளிப்படுகிறது.

Steven J.Cole என்ற விவிலிய விரிவுரையாளர், இத்திருப்பாடலின் முதல் இறை வாக்கியத்தைக் குறித்து தன் கருத்துக்களைத் தொகுத்து வழங்கியுள்ளார். அங்கு அவர் கூறும் அழகிய எண்ணங்கள் இதோ:

"கண்ணுக்கெட்டிய தூரம் வரை நிலப்பரப்பின் மீது காணப்படும் இயற்கையின் அழகை, தன் ஊனக்கண்களால் கண்டு இரசித்ததோடு நில்லாமல், தாவீது, தன் விசுவாசக் கண்கொண்டு, வானத்தையும் கடந்து பார்க்கிறார். இந்த வான்வெளி எவ்வளவு பெரியதென்று காண்பதற்கு, அவரிடம், தொலைநோக்கு கருவி எதுவும் இல்லை. இன்று, வான்வெளியைக் குறித்து நமக்குத் தெரிந்தவை, அவருக்குத் தெரிந்திருந்தால், அவர் இன்னும் எவ்வாறெல்லாம் நினைத்திருப்பார்!" என்ற வியப்பை, Cole அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, வானியல், புவியியல் ஆய்வுக்கட்டுரைகளை வெளியிடும் 'National Geographic' என்ற நிறுவனம், சில ஆண்டுகளுக்கு முன், விண்வெளியைக் குறித்து வெளியிட்ட ஒரு கட்டுரையின் சில கருத்துக்களை, Cole அவர்கள் தொகுத்து வழங்கியுள்ளார். 8ம் திருப்பாடலின் ஆழத்தைப் புரிந்துகொள்ள, இந்தக் கருத்துக்களை நாமும் அசைபோடுவது பயனளிக்கும்.

ஒளியானது, ஒரு நொடிக்கு, 186,000 மைல்கள், அல்லது, 300,000 கி.மீ.கள் வேகத்தில் பயணம் செய்கிறது என்பதை நாம் அறிவோம். இத்தகவலின் அடிப்படையில், வான்வெளி எவ்வளவு விரிவானது என்பதை 'National Geographic' இதழ் இவ்வாறு விவரித்துள்ளது:

"ஒளியின் வேகத்தில் நாம் பயணித்தால், பூமியின் மையத்திலிருந்து, சூரியனை அடைவதற்கு 8 நிமிடங்கள், அதாவது, 480 நொடிகள் ஆகும். சூரியனின் மையத்திலிருந்து, 'Milky Way' என்றழைக்கப்படும் 'பால்வெளி' மையத்தை ஒளியின் வேகத்தில் அடைய 33,000 ஆண்டுகள் ஆகும். இதை நாம் 33,000 ஒளி ஆண்டுகள் என்று கூறுகிறோம். 'பால்வெளி'யைப்போல 20 விண்மீன் தொகுப்புகள் உள்ளன. அவை அனைத்தும் சேர்ந்த அமைப்பை, 'Local Group', அதாவது, 'அண்மையக் (உள்ளூர்) குழு' என்றழைக்கிறோம். இந்த 'அண்மையக்குழு'வைக் கடந்து செல்ல, 20 இலட்சம் ஒளி ஆண்டுகள் ஆகும்...."

இவ்வாறு, தன் விளக்கங்களைக் கூறும் 'National Geographic' கட்டுரை, தொடர்ந்து, அண்மையக்குழு, 'Virgo Cluster' என்ற குழுவின் ஓர் அங்கம் என்றும், அக்குழு, 'Local Supercluster' என்ற குழுவின் அங்கம் என்றும், தன் விளக்கங்களைத் தொடர்கிறது. இந்தக் குழுக்களையெல்லாம் கடந்து செல்ல, 2000 கோடி ஒளி ஆண்டுகள் ஆகலாம் என்று இக்கட்டுரையில் கணிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு பிரம்மாண்டமாக பரந்து விரிந்திருக்கும் வான்வெளியைப்பற்றி, ஆயிரக்கணக்கான வானியல் ஆய்வாளர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களில் வெகு சிலரே, இந்த அற்புதப் படைப்பிற்குப் பின்புலத்தில், இதை உருவாக்கியவர் ஒருவர் இருக்கிறார் என்ற உண்மையை உணர்ந்துள்ளனர். அவ்வாறு உணர்ந்தவர்களில், அந்தப் படைப்பாளி கடவுள் என்று கூறத்துணிந்தவர்கள் மிக, மிகக் குறைவானவர்கள். அத்தகைய துணிவு கொண்டவர்களில் ஒருவர், உலகப் புகழ்பெற்ற இயற்பியல் மேதை, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அவர்கள். இவர், அறிவியலையும், வான்வெளியையும் இணைத்துக் கூறிய ஒரு கூற்று இது:

"இந்த வான்வெளியின் விதிகளுக்குப் பின்புலத்தில், மனிதரைக் காட்டிலும் மிக, மிக உயர்ந்த ஓர் ஆன்மா உள்ளது என்பதை, அறிவியலை ஆர்வமுடன் தொடரவிழைவோர் உணர்கின்றனர். இந்த சக்திக்குமுன் நாம் பணிவு கொள்வது மட்டுமே தகுதியான பதில்"

இத்தகையப் பணிவுடன் வான்வெளி அதிசயங்களைக் காண, குழந்தைகளின் உள்ளம் தேவை. அதையே, தாவீது இத்திருப்பாடலின் 2வது இறைவாக்கியத்தில் இவ்வாறு கூறியுள்ளார்: பாலகரின் மழலையிலும் குழந்தைகளின் மொழியிலும் வலிமையை உறுதிப்படுத்தி உம் பகைவரை ஒடுக்கினீர்; எதிரியையும் பழிவாங்குவோரையும் அடக்கினீர். (திருப்பாடல் 8:2)

இத்திருப்பாடல் வழியே, தாவீது நமக்கு உணர்த்த விழையும் ஆழமான உண்மைகளை நாம் அடுத்தத் தேடலில் தொடர்ந்து சிந்திப்போம்.

27 April 2021, 15:14