தேடுதல்

குற்றம் சுமத்தப்பட்டவர், விண்ணை நோக்கி குரல் எழுப்புதல் குற்றம் சுமத்தப்பட்டவர், விண்ணை நோக்கி குரல் எழுப்புதல் 

விவிலியத்தேடல்: திருப்பாடல் 7 – நீதி வழங்குமாறு வேண்டல் 2

தன்மீது இறைக்கப்பட்ட புழுதியை மட்டும் தாவீது உற்று நோக்காமல், அவரது கண்கள் வானகத்தை நோக்கி, இறைவனை நோக்கி திரும்பியதால், 7ம் திருப்பாடல் உருவானது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

திருப்பாடல் 7 – நீதி வழங்குமாறு வேண்டல் 2

கிராமத்தில் வாழ்ந்த விவசாயி ஒருவர், பல ஆண்டுகள் வளர்த்துவந்த கழுதையொன்று, ஒரு நாள், அக்கிராமத்தில் இருந்த பாழும் கிணற்றில் தவறி விழுந்துவிட்டது. கிணற்றிலிருந்து கழுதையை வெளியே கொண்டுவருவது மிகவும் கடினமான காரியம் என்று கிராமத்தினருக்குப் புரிந்தது. அக்கழுதை, வயதில் முதிர்ந்தது என்பதால், அதை மேலே கொண்டுவந்தாலும் பயனில்லை என்று அந்த விவசாயி உணர்ந்தார். அத்துடன், எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துக்கள் நடக்காமல் தடுக்க, அந்தப் பாழும் கிணற்றை மூடிவிடுவது நல்லதென்று கிராமத்தினர் முடிவெடுத்தனர்.

எனவே, கிராமத்தினர் அனைவரும், அக்கிணற்றில் மண்ணைக் கொட்ட ஆரம்பித்தனர். கிராம மக்கள் தன்னை உயிரோடு புதைக்கப்போவதை அறிந்த அக்கழுதை, அதிக அச்சம் கொண்டு அலறியது. ஆயினும், கிராம மக்கள் தங்கள் வேலையைத் தொடர்ந்தனர். சிறிது நேரம் சென்று, கழுதையின் அலறல் நின்றுபோனது. உள்ளே எட்டிப்பார்த்த கிராமத்து மக்கள், வியப்பில் ஆழ்ந்தனர். அவர்கள் அக்கழுதை மீது கொட்டிய மண்ணை, கழுதை முதுகிலிருந்து கீழே தள்ளிவிட்டு, அந்த மண்ணின் மீது ஏறி நின்றது. இவ்வாறு, கிராமத்தினர், தன் மீது எறிந்த மண்ணின் உதவியுடன், அக்கழுதை, கிணற்றிலிருந்து வெளியே வந்தது.

இந்தக் கதையை ஓர் உவமையாகக் கருதி, இதை, நாம், தற்போது தேடலை மேற்கொண்டுள்ள 7ம் திருப்பாடலுடன் இணைத்து சிந்திக்கவும், இதிலிருந்து நமக்குத் தேவையான பாடங்களைக் கற்றுக்கொள்ளவும் முயல்வோம்.

நாம் ஒவ்வொருவரும் நெருக்கடியான சூழல்களில் சிக்கிக்கொள்ளும்போது, நம்மை அந்த நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு, மற்றவர்கள் வரக்கூடும்; அல்லது, நம்மை அந்த நெருக்கடியில் இன்னும் ஆழமாகப் புதைப்பதற்கும் ஒரு சிலர் வரக்கூடும். குறிப்பாக, அந்த நெருக்கடிக்குக் காரணம், நாம் செய்த தவறுகள் என்று, அவதூறான பழிகளை நம்மீது அள்ளிவீசும்போது, நாம் இருவழிகளில் பதிலிறுப்பு தரலாம். ஒன்று, நம்மீது வீசப்படும் பழிகள், அவதூறுகள் என்ற குப்பையில் புதையுண்டு போகலாம்; அல்லது, அந்த அவதூறுகளை காலடியில் தள்ளி, அவற்றின் மீது ஏறிநின்று, அந்த நெருக்கடியிலிருந்து வெளியேறலாம்.

தன்மீது வீசப்பட்ட அவதூறுகளை தாவீது எவ்வாறு சந்தித்தார் என்பதை, 7ம் திருப்பாடலில் சிந்தித்துவருகிறோம். சவுலின் குடும்பத்தையும் வீட்டையும் சார்ந்த சிமயி என்ற மனிதர், தாவீதை பழித்து, சபித்த நிகழ்வை, சென்ற விவிலியத்தேடலில் சிந்தித்தோம். அவரைத் தடுக்கமுயன்ற மற்றவர்களை, தாவீது தடுத்து நிறுத்தி, ‘அவன் பழிக்கட்டும்’ என்று கூறினார். அதற்குப்பின், தாவீது தன் ஆள்களோடு பயணத்தை தொடர்ந்தார். சிமயி அவருக்கு எதிராகப் பழித்துரைத்து கல்லெறிந்து, புழுதியை வாரித் தூற்றிக்கொண்டு மலையோரமாகச் சென்றான் (2 சாமு. 16:13) என்று சாமுவேல் 2ம் நூலில் வாசிக்கிறோம்.

சிமயி வாரி இறைத்த புழுதியை மட்டுமே தாவீது உற்று நோக்கியிருந்தால், ஒருவேளை, அவரது கண்கள் அந்தப் புழுதியால் நிறைந்திருக்கும். அதற்குப் பதிலாக, தாவீதின் கண்கள் வானகத்தை நோக்கி, இறைவனை நோக்கி திரும்பியதால், 7ம் திருப்பாடல் உருவானது.

திருஅவையின் நீதிப்பணிகளுக்கு, விண்ணை நோக்கி உயர்த்தப்பட்ட கண்கள் அழகிய அடையாளம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிய சொற்களையும், சென்ற தேடலில் நாம் சிந்தித்தோம். திருஅவையின் நீதிப்பணிக்கும், இறைவேண்டலுக்கும் உள்ள நெருங்கியத் தொடர்பைக் குறித்து திருத்தந்தை பேசியபோது, "இறைவேண்டல் புரியும்போது கிடைக்கும் தெளிவு, உன்னதம், தொலைநோக்குடன் கூடிய கண்ணோட்டம் ஆகியவை, நீதிப்பணிகளுக்கு அவசியம். பொதுவாக, நீதியைக் குறிக்க, இவ்வுலகம் பயன்படுத்தும் அடையாளம், கட்டப்பட்டக் கண்கள். ஆனால், கிறிஸ்தவ நீதியின் அடையாளமோ, வானை நோக்கி உயர்த்தப்பட்ட கண்கள். ஏனெனில், விண்ணகத்தில் மட்டுமே, உண்மையான நீதி நிலைத்துள்ளது" என்று கூறினார்.

விண்ணை நோக்கி தன் கண்களையும், எண்ணங்களையும் உயர்த்தி, இறைவனிடம் 'நீதி வழங்குமாறு வேண்டி' தாவீது எழுப்பிய மன்றாட்டு, 7ம் திருப்பாடல். 17 இறைவாக்கியங்களைக் கொண்ட இத்திருப்பாடலில், ஆறு பிரிவுகளை நம்மால் காணமுடிகிறது:

  • முதல் இரு இறைவாக்கியங்களில், (1-2) தன்னைக் காப்பாற்ற இறைவனிடம் தாவீது வேண்டுதல்,
  • அடுத்த மூன்று இறைவாக்கியங்களில் (3-5) தான் தவறு செய்திருந்தால், எதிரிகள் தனக்கு எந்த தண்டனையும் வழங்கட்டும் என்று தாவீது கூறுதல்,
  • அடுத்த நான்கு இறைவாக்கியங்களில் (6-9), நீதி வழங்கும் கடவுள், பொல்லாரின் தீமைகளை முடிவுக்கு கொணரவேண்டும் என்று மன்றாடுதல்,
  • அடுத்த நான்கு இறைவாக்கியங்களில் (10-13), கடவுள் பொல்லாரை எவ்வாறெல்லாம் தண்டிக்கக்கூடும் என்ற எச்சரிக்கையை வழங்குதல்,
  • அடுத்த மூன்று இறைவாக்கியங்களில் (14-16), பொல்லார், எவ்வாறு தங்களையே அழிவுக்கு உள்ளாக்குகின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டுதல்,
  • இறுதியாக, 17ம் இறைவாக்கியத்தில், ஆண்டவர் வழங்கிய நீதிக்கு நன்றி கூறுதல்,

என்று, பல்வேறு எண்ணங்களையும், உணர்வுகளையும், தாவீது, இந்தத் திருப்பாடலில் வெளிப்படுத்தியுள்ளார்.

இப்பாடலில், மன்னன் தாவீது பயன்படுத்தியுள்ள பல்வேறு உருவகங்கள், நம் சிந்தனைகளைத் தூண்டுவதோடு, ஒரு சில வாழ்க்கைப் பாடங்களையும் புகட்டுகின்றன. தன்னைத் துரத்திவரும் எதிரிகளிடமிருந்து இறைவன் தன்னைக் காக்கவேண்டும் என்று, முதல் இரு இறைவாக்கியங்களில், தாவீது வேண்டும்போது, தன் எதிரிகளை, சிங்கத்திற்கு ஒப்புமைப்படுத்தியுள்ளார். ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது, மந்தையைத் தாக்க வந்த சிங்கத்திடமிருந்து மந்தையைக் காத்தவர் தாவீது (காண்க 1 சாமுவேல் 17:34-36). அந்த அனுபவத்தின் அடிப்படையில், தற்போது, இறைவனிடம் தன்னைக் காக்கும்படி மன்றாடும் தாவீது, "இல்லையெனில், என் எதிரிகள் சிங்கம்போல என்னைப் பீறிக் கிழித்துப் போடுவார்கள்" (தி.பா. 7:2) என்று, தன் அனுபவத்திலிருந்து பேசுகிறார்.

பென்யமினியனான கூஸ் என்பவர் தன் மீது குற்றம் சமத்தியதையடுத்து, தாவீது இறைவனிடம் மேல்முறையீடு செய்வதை, 3 முதல் 5 முடிய உள்ள இறைவாக்கியங்கள் கூறுகின்றன: என் கடவுளாகிய ஆண்டவரே, என் கை தவறிழைத்திருந்தால், என்னோடு நல்லுறவு கொண்டிருந்தவனுக்கு நான் தீங்கிழைத்திருந்தால், என் பகைவனைக் காரணமின்றிக் காட்டிக்கொடுத்திருந்தால் — எதிரி என்னைத் துரத்திப் பிடிக்கட்டும்; என்னைத் தரையில் தள்ளி மிதித்து நசுக்கட்டும்; என் பெருமையைப் புழுதியில் புதைக்கட்டும். (தி.பா. 7:3-5)

தான் தவறு செய்திருந்தால், அதற்குரிய தண்டனைகளை அடைவதற்கு தயாராக இருப்பதாக தாவீது கூறும் இச்சொற்கள், மன்னன் சவுலுடன் அவருக்கு ஏற்பட்ட இரு அனுபவங்களை நினைவுறுத்துகின்றன.

மன்னன் சவுல் தன்னைக் கொல்வதற்கு துரத்திவந்த இரு தருணங்களில், தாவீது, உறங்கிக்கொண்டிருந்த சவுலைக் கொல்லாமல், முதல்முறை, அவரது ஆடையின் ஒரு விளிம்பையும், இரண்டாவது முறை அவரது ஈட்டியையும் எடுத்துக்கொண்டு வந்த நிகழ்வை, சாமுவேல் முதல் நூல், 24, மற்றும் 26 ஆகிய பிரிவுகளில் வாசிக்கிறோம். இந்த இரு தருணங்களிலும், தாவீது, சவுலை உறக்கத்திலிருந்து விழித்தெழச் செய்து, தான் அவரைக் கொல்லாமல் விட்டுவந்ததைச் சுட்டிக்காட்டுகிறார். இருமுறையும், அவர், தனக்கும், சவுலுக்கும் இடையே, ஆண்டவரே நடுவராய் இருக்கட்டும் என்பதை அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறார்:

தாவீது சவுலிடம், “நீர் என் உயிரைப் பறிக்கத் தேடினாலும், உமக்கெதிராக நான் ஒரு குற்றமும் செய்யவில்லை... ஆண்டவர் நடுவராயிருந்து உமக்கும் எனக்கும் நீதி வழங்குவாராக! அவரே எனக்காக வழக்காடி உம் கையினின்று என்னை விடுவிப்பாராக!” என்றார். (1 சாமு. 24:11,15)

தாவீது சவுலிடம், “அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் ஏற்ப ஆண்டவர் உம்மை ஒப்புவித்தும் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர் மேல் நான் கை வைக்கவில்லை. இன்று உம் உயிர் என் கண்களில் மிகவும் மதிப்பு மிகுந்ததாக இருந்ததுபோல் என் உயிரும் ஆண்டவர் கண்களுக்கு அருமையாய் இருப்பதாக! அவரே என்னை எல்லா இக்கட்டிலிருந்து விடுவிப்பாராக!” என்றார். (1 சாமு. 26:23-24)

தான் தவறு செய்திருந்தால், தண்டனை பெறுவதற்குத் தயார் என்று, இறைவன் முன் அறிக்கையிடும் தாவீது, அதைத் தொடர்ந்து, 7ம் திருப்பாடலின் மற்றொரு பகுதியில், பொல்லார் எவ்வாறு தாங்கள் செய்யும் தீமையால், அவர்களே அழிவைக் காண்பர் என்பதை கடுமையான உருவகங்களின் உதவியுடன் குறிப்பிட்டுள்ளார்:

பொல்லார் கொடுமையைக் கருக்கொள்கின்றனர்; அவர்கள் தீவினையைக் கருத்தாங்கி, பொய்மையைப் பெற்றெடுக்கின்றனர். அவர்கள் குழியை வெட்டி ஆழமாகத் தோண்டுகின்றனர்; அவர்கள் வெட்டிய குழியில் அவர்களே விழுகின்றனர்; அவர்கள் செய்த கேடு அவர்கள் தலைக்கே திரும்பும். அவர்கள் செய்த கொடுமை அவர்கள் உச்சந்தலையிலேயே விழும். (தி.பா. 7:14-16)

தாவீது கூறும் இச்சொற்கள், தன் வினை தன்னைச் சுடும், கெடுவான் கேடு நினைப்பான், வினைவிதைத்தவன் வினை அறுப்பான் என்று, தமிழில் நாம் பயன்படுத்தும் பல்வேறு பழமொழிகளை நினைவுறுத்துகின்றன. மனதளவிலும் பிறரது குடியைக் கெடுக்க நினைப்பவர் தானே கெடுவர் என்ற கருத்தை, தண்டலையார் சதகத்திலிருந்து ஒரு பாடல் இவ்வாறு கூறுகிறது:

  • மண்ணுலகில் பிறர் குடியை வஞ்சனையிற்
  • கெடுப்பதற்கு மனத்தினாலே
  • உன்னிடினும் உரைத்திடினும் அவன் தானே

கெடுவன் என்பதுண்மையன்றோ

இறுதியாக, இதுவரை நாம் சிந்தித்த ஏனையத் திருப்பாடல்களைப் போலவே, 7ம் திருப்பாடலும், ஆண்டவர் மீது தாவீது கொண்டிருக்கும் நம்பிக்கையைப் பறைசாற்றும் சொற்களுடன் நிறைவடைகிறது.

ஆண்டவர் வழங்கிய நீதிக்காக அவருக்கு நன்றி கூறுவேன்; உன்னதரான ஆண்டவரின் பெயரைப் போற்றிப்பாடுவேன். (தி.பா. 7:17)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 April 2021, 14:43