தேடுதல்

மியான்மாரில் உரையாடலுக்கு அழைப்பு விடுக்கும்  பங்களாதேஷ் ஆயர்கள் மியான்மாரில் உரையாடலுக்கு அழைப்பு விடுக்கும் பங்களாதேஷ் ஆயர்கள் 

மியான்மார் பிரச்சனையைத் தீர்க்க உரையாடல் அவசியம்

அப்பாவி மக்களைச் சுடவேண்டாம் என, மியான்மார் இராணுவத்தின் முன்பாக மண்டியிட்டு மன்றாடிய அருள்சகோதரி Ann Nu Thawng அவர்களோடு இணைந்து பங்களாதேஷ் ஆயர் பேரவையும் மக்களுக்காக மன்றாடுகிறது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மியான்மாரில், இவ்வாண்டு பிப்ரவரி முதல் தேதியிலிருந்து நிலவும் பிரச்சனைகளுக்கு, கலந்துரையாடல் வழியாகத் தீர்வுகாணப்படுமாறு, பங்களாதேஷ் கத்தோலிக்க ஆயர்கள், தாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

மியான்மாரில் இடம்பெறும் இராணுவ ஆட்சி முடிவுக்குவர வேண்டும் என்று பேரார்வம் கொள்ளும் அந்நாட்டு மக்களோடு தங்களின் தோழமையுணர்வை வெளிப்படுத்தியுள்ள பங்களாதேஷ் ஆயர்கள், அந்நாட்டில் இடம்பெறும் வன்முறைக்கு எதிரான தங்களின் வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.

மியான்மாரில் இடம்பெற்ற இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பை எதிர்த்து, தேசிய அளவில் அமைதியான முறையில் போராட்டங்களை மேற்கொண்டுவரும் பொதுமக்கள் மீது இராணுவம் நடத்திவரும் வன்முறையில், தொடர்ந்து உயிர்ப்பலிகள் இடம்பெறுவதையும், ஆயர்கள், தங்கள் அறிக்கையில் கவலையோடு குறிப்பிட்டுள்ளனர்.

பங்களாதேஷ் கத்தோலிக்க ஆயர் பேரவையின் நீதி மற்றும், அமைதி பணிக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், மியான்மார் இராணுவம் தனது குடிமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதை நிறுத்தி, நாட்டின் அரசியல் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு, தகுதியான மக்களோடு அறிவுப்பூர்வமான கலந்துரையாடலை மேற்கொள்ளுமாறு  வலியுறுத்தப்பட்டுள்ளது.

மியான்மார் ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள், கொரியத் திருஅவையிடம் உதவிகேட்டு விண்ணப்பித்திருந்ததையடுத்து, பங்களாதேஷ் ஆயர்கள், மியான்மார் மக்களோடு தங்களின் ஒருமைப்பாடு, மற்றும், இறைவேண்டல்களை அறிவித்து, இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 April 2021, 14:51