தேடுதல்

Vatican News
அன்பின் சின்னம் அன்பின் சின்னம் 

மகிழ்வின் மந்திரம் : அன்பு பொறாமை கொள்ளாது

ஒவ்வொருவரும் வேறுபட்டக் கொடைகளைப் பெற்றுள்ளனர், தங்களுக்கென்று தனி வழிகளைக் கொண்டுள்ளனர் என்பதை அங்கீகரிக்க உதவுகிறது, அன்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஒன்பது பிரிவுகளைக் கொண்டதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில், 'திருமணத்தில் அன்பு' என்ற 4ம் பிரிவில் கூறியுள்ள கருத்துக்களை, அண்மைய நாட்களில் நம் மகிழ்வின் மந்திரம், நிகழ்ச்சியில் சிந்தித்துவருகிறோம். இப்பிரிவின் துவக்கத்தில், புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமடலின் 13ம் பிரிவில் அன்பு குறித்து எடுத்துரைப்பவைகளில், 'அன்பு பொறுமையுள்ளது', 'அன்பு நன்மை செய்யும்' என்ற இரு பண்புகளுக்கு விளக்கமளித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'அன்பு பொறாமை கொள்ளாது' என்ற மூன்றாவது பண்பு குறித்து, 95, 96 ஆகிய இரு பத்திகளில் விவரித்துள்ளவை இதோ:

பிறர் நன்றாக இருப்பதையும், அவர்களது மகிழ்ச்சியையும் குறித்து நாம் வருத்தம் அடைவது என்பது, மற்றவர்களின் மகிழ்ச்சி குறித்த நம் அக்கறையின்மையும், நம் சுக வாழ்வு குறித்தே நாம் கவலைப்படுவதையும் வெளிப்படுத்துகின்றது.

அன்பு என்பது, நம்மையும் தாண்டி, மேலெழுந்துவர உதவும் வேளை, பொறாமையோ நம்மை நமக்குள்ளேயே மூடிவிடுகிறது. உண்மை அன்பு என்பது, மற்றவர்களின் வெற்றிக்கு மதிப்பளிக்கிறது. மற்றவர்களை, அச்சம் தரும் கூறாக நோக்குவதில்லை. பொறாமையின் விரும்பத்தகாத சுவையிலிருந்து நமக்கு விடுதலையளிக்கிறது. ஒவ்வொருவரும் வேறுபட்டக் கொடைகளைப் பெற்றுள்ளனர், தங்களுக்கென்று தனி வழிகளைக் கொண்டுள்ளனர் என்பதை அங்கீகரிக்க உதவும் அன்பு, தனி மனிதர்கள், தங்கள் மகிழ்வின் பாதையை கண்டுகொள்ளவும், மற்றவர்கள் தங்கள் பாதையில் நடக்க அனுமதிக்கவும் செய்கிறது (அன்பின் மகிழ்வு 95).

பிறர் வீட்டைக் கவர்ந்திட விரும்பாதே; பிறர் மனைவி, அடிமை, அடிமைப்பெண், மாடு, கழுதை, அல்லது பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே (வி.ப. 20:17), என்ற இறைவனின் இரு கட்டளைகளைக் கடைப்பிடிப்பதே, அன்பு என்ற சொல்லின் பொருளாகும். மற்றவர்களுக்கு உண்மையான மதிப்பளித்து, அவர்கள் மகிழ்வுடன் இருப்பதற்குரிய உரிமையை மதித்துச் செயல்பட, அன்பு தூண்டுதலாக உள்ளது. நம்முடைய இன்பத்திற்காக எல்லாவற்றையும் நிறைவாக அளிக்கும் கடவுளின் (1 திமோ 6:17) கண்களுடன் நாம், அன்பு கூர்பவர்களைப் பார்ப்போம்.  அப்போது, நாம், மகிழ்ச்சி, மற்றும் அமைதியின் ஆழமான உணர்வைப் பெறுவோம். ஆழமாக வேரூன்றியுள்ள அன்பு என்பது, பலர் வெகு அதிகமாகவும், ஏனையோர்  மிகக் குறைவாகவும், கொண்டிருக்கும் அநீதியை ஒதுக்கித் தள்ளவும் நம்மை இட்டுச்செல்லும். சமுதாயத்தில் ஓரந்தள்ளப்பட்டுள்ளோர் மகிழ்வை அனுபவிக்க உதவும் வழிகளை கண்டுகொள்ள அன்பு நம்மை இட்டுச்செல்கிறது. இது பொறாமையல்ல, மாறாக, சரிநிகர் நிலைகளுக்கான ஆவல். (அன்பின் மகிழ்வு 96).

28 April 2021, 15:11