தேடுதல்

ஆப்ரிக்காவின் மலாவி  நாட்டில் பள்ளிக்குழந்தைகள் ஆப்ரிக்காவின் மலாவி நாட்டில் பள்ளிக்குழந்தைகள் 

மகிழ்வின் மந்திரம் : குழந்தை வளர்ப்பு, பெரியதொரு சவால்

தங்கள் குழந்தைகளுக்குத் தகுந்த கல்வி வழங்குவதன் வழியே, பெற்றோர், திருஅவையைக் கட்டியெழுப்புகின்றனர் என்பதை, அவர்கள் உணரவேண்டும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

திருமணம், குடும்ப வாழ்வு ஆகியவற்றின் மேன்மையை உணர்த்தும்வண்ணம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கியுள்ள 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் மூன்றாம் பிரிவு, ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில், “வாழ்வை வழங்குதல், மற்றும், பிள்ளைகள் வளர்ப்பு” என்று தலைப்பிடப்பட்டுள்ள 5வது பகுதியில், குழந்தைகளுக்கு வழங்கப்படவேண்டிய கல்வியைக் குறித்து, 84,85 ஆகிய இரு பத்திகளில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்:

இன்றையக் கலாச்சார உண்மைநிலை, ஊடகத்தின் தாக்கம் ஆகியவற்றால் உருவாகியுள்ள கடினமானச் சூழலில், குழந்தை வளர்ப்பு பெரும் சவாலாக மாறியுள்ளது. கிறிஸ்தவ மறையில் குழந்தையை அறிமுகம் செய்துவைப்பதிலிருந்து, திருஅவை, குடும்பங்களுக்கு உறுதுணையாக உள்ளது.

குழந்தைகளுக்குக் கல்வி வழங்குவது, பெற்றோரின் முக்கியக் கடமை என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்திக்கூற விழைகிறேன். பெற்றோரிடமிருந்து யாராலும் பறித்துக்கொள்ள முடியாத ஓர் உரிமை இது. தங்கள் மத நம்பிக்கைக்கு ஏற்ப, பெற்றோர் தெரிவுசெய்யும் கல்விமுறைக்கு, அரசு ஆதரவு வழங்கவேண்டும். பெற்றோர் வகிக்கும் இடத்தை, பள்ளிகள், தங்களுக்கு உரிமையாக்கிக்கொள்ளாமல், அவர்களுக்கு அடுத்த நிலையிலிருந்து உதவி செய்யவேண்டும். குழந்தைகளின் கல்வியில், பெற்றோரின் சம்மதத்தைப் பெற்றபின்னரே, வேறு எந்த சமுதாய அமைப்பும், தன் பங்கை வழங்கவேண்டும் என்பதே, அடிப்படை கொள்கை.

இன்று, குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் இடையே ஒரு பிளவு உருவாகியுள்ளது. இதனால், கல்வியைப் பொருத்தவரை, குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் இடையே நிலவவேண்டிய ஒப்பந்தத்தில் நெருக்கடியான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. (84)

இத்தகையக் கடினமானச் சூழலில், பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு ஆற்றும் கல்விப்பணியில், திருஅவை, அவர்களுடன் இணைந்து உழைக்க அழைக்கப்பட்டுள்ளது. திருமணம் எனும் அருளடையாளத்தின் வழியே, பெற்றோர் பெறும் கடமைகளை நிறைவேற்ற, திருஅவை, அவர்களுக்கு உதவி செய்யவேண்டும். தங்கள் குழந்தைகளுக்குத் தகுந்த கல்வி வழங்குவதன் வழியே, பெற்றோர், திருஅவையைக் கட்டியெழுப்புகின்றனர் என்பதை, அவர்கள் உணரவேண்டும். (85) (அன்பின் மகிழ்வு 84,85)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 April 2021, 14:36