தேடுதல்

Vatican News
திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களின் பெற்றோர், திருமண நாளன்று... திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களின் பெற்றோர், திருமண நாளன்று... 

மகிழ்வின் மந்திரம் : இறைவனின் சாயலாகத் திகழும் குடும்பம்

இயேசு அனைத்தையும் தன்னுடன் ஒப்புரவாக்கி, நம்மை, பாவத்திலிருந்து மீட்டபோது, திருமணம், மற்றும் குடும்பத்தை, அவற்றின் ஆரம்ப வடிவத்திற்குக் கொணர்ந்தார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் மூன்றாம் பிரிவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'குடும்பத்தின் அழைப்பு' என்ற கருத்தை விளக்கும் வேளையில், விவிலியம், திருஅவை, மற்றும் திருத்தந்தையர் குடும்பத்தைக் குறித்து கூறியள்ள எண்ணங்களை, இப்பிரிவின் முதல் இரு பகுதிகளில் பதிவு செய்துள்ளார். 'திருமணம் எனும் அருளடையாளம்' என்ற தலைப்பில், இப்பிரிவின் மூன்றாம் பகுதியில் அவர் வழங்கியுள்ள கருத்துக்களில் (71-75), திருமணம், மற்றும், குடும்ப உறவில், மூவொரு இறைவனிடம் விளங்கிய பிணைப்பு வெளிப்படுகிறது என்ற கருத்தை, 71ம் பத்தியில், இவ்வாறு விளக்கிக் கூறியுள்ளார்:

மறைநூல், மற்றும், பாரம்பரியத்தின் வழியே, மூவொரு இறைவனைக் குறித்த புரிதலை நாம் பெறுகிறோம். அந்தப் புரிதல், குடும்பத்தின் பண்புகளில் வெளிப்படுகிறது. மூன்று தனித்தனி ஆள்களின் ஒருங்கிணைப்பாக விளங்கும் இறைவனின் சாயல், குடும்பத்தில் வெளிப்படுகிறது. இயேசுவை, தன் அன்பார்ந்த மகன் என்று கூறிய தந்தையின் குரல், அவரது திருமுழுக்கின்போது கேட்கப்பட்டது. அந்த அன்பை, தூய ஆவியார் என்று நாம் ஏற்றுக்கொள்கிறோம் (காண்க. மாற். 1:10-11).

இயேசு அனைத்தையும் தன்னுடன் ஒப்புரவாக்கி, நம்மை, பாவத்திலிருந்து மீட்டபோது, திருமணம், மற்றும் குடும்பத்தை, அவற்றின் ஆரம்ப வடிவத்திற்குக் கொணர்ந்தார். அத்துடன், தான் திருஅவையின் மீது கொண்டுள்ள அன்பின் வழியே, திருமணத்தை, அருளடையாள நிலைக்கு உயர்த்தினார் (காண்க. மத். 19:1-12; மாற். 10:1-12; எபே 5:21-32).

கிறிஸ்துவில் ஒன்றாகச் சேர்க்கப்பட்ட மனித குடும்பத்தில், தூய்மைமிகு மூவொரு இறைவனின் சாயல் நிலைநாட்டப்பட்டது. இந்த மறையுண்மையிலிருந்து அனைத்து உண்மையான அன்பும் வெளிப்படுகிறது. இறையன்பின் நற்செய்திக்கு சான்று பகரும்வண்ணம், திருஅவையின் வழியே, திருமணமும், குடும்பமும் தூய ஆவியாரின் வரங்களைப் பெறுகின்றன. (அன்பின் மகிழ்வு 71)

06 April 2021, 14:29