தேடுதல்

Vatican News
திருமணம் எனும் அருளடையாளம் திருமணம் எனும் அருளடையாளம் 

மகிழ்வின் மந்திரம் : தம்பதியரின் அருள் வாழ்வு

ஒருவர் ஒருவரை ஏற்று, ஒருவரை மற்றவருக்கு முற்றிலுமாக வழங்கி, தங்களை முற்றிலுமாக பகிரும் இசைவு திருமணத்தில் கொடுக்கப்படுகிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

2016ம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெளியிட்ட 'அன்பின் மகிழ்வு' (Amoris Laetitia) திருத்தூது அறிவுரை மடலில், “இயேசுவை நோக்கிப் பார்த்தல்: குடும்பத்தின் அழைப்பு” என்ற தலைப்பில் துவங்கும் மூன்றாவது பிரிவின், 6 துணைத் தலைப்புக்களுள், 'திருமணம் எனும் அருளடையாளம்' என்ற மூன்றாவது துணைத் தலைப்பின் கீழ், 74ம் பத்தியில், திருத்தந்தை பகிரும் கருத்துக்கள் இதோ:

அன்பின் துணையுடன் அனுபவிக்கப்படுவதும், மற்றும், அருளடையாளத்தின் வழியாக புனிதப்படுத்தப்படுவதுமான, பாலியல் உறவின் ஒன்றிப்பு  என்பது, தம்பதியரின் அருள் வாழ்வு வளர்ச்சியின் பாதையாகும். இது மணவாழ்வு மறையுண்மை. உடலளவிலான ஒன்றிப்பின் அர்த்தமும் அதன் மதிப்பும், திருமண ஒப்பந்தத்திற்கு அவர்கள் கொடுத்த இசைவின் வார்த்தைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, அவர்கள், ஒருவர் ஒருவரை ஏற்று, ஒருவரை மற்றவருக்கு முற்றிலுமாக வழங்கி, தங்களை முற்றிலுமாக பகிரும் இசைவு அது.   இந்த இசைவின் வார்த்தை, அவர்களின் பாலியல் உறவுகளுக்கு அர்த்தத்தைக் கொடுப்பதுடன், தெளிவின்மைகளையும் விலக்குகின்றது. கணவன் மனைவிக்கிடையே நிலவும் பொதுவாழ்வு, மற்றும், தங்கள் குழந்தைகளோடும் தங்களைச் சுற்றியிருக்கும் உலகோடும் அவர்கள் உருவாக்கும் உறவுச் சங்கிலிகள்,  திருமண அருளடையாளத்தின் அருளால் உயர்த்தப்பட்டு, பலம்பெறுகின்றன. நமக்கான முழுமையான அன்பை வெளிப்படுத்த, நம்மைப்போல் ஒருவராக உருவெடுத்த இறைவன், மனுவுரு எடுத்ததிலும், மற்றும் பஸ்கா மறையுண்மையிலிருந்தும் திருமணம் எனும் அருளடையாளம் வழிந்தோடுகிறது. குடும்ப வாழ்வில் எவ்வித பிரச்சனைகள் வந்தாலும், தம்பதியர் தனியாக இல்லை. அர்ப்பணம், படைப்பாற்றல், உறுதியுடன் நிலைத்திருத்தல், மற்றும் தினசரி முயற்சிகளில் இறைவனின் கொடைக்கு பதிலுரை வழங்கும்படி அவர்கள் இருவரும் அழைப்புப் பெற்றுள்ளார்கள். அவர்களின் திருமண ஒன்றிப்பை ஆசீர்வதித்த தூய ஆவியாரை நோக்கி அவர்கள் எப்போதும் வேண்டுதல் செய்யமுடியும். அதன்வழியாக, தூய ஆவியார் வழங்கும் அருள், அவர்கள் எதிர்கொள்ளும் அனைத்து சுழல்களிலும் துணையாக நிற்கும்.  (அன்பின் மகிழ்வு 74).

 

09 April 2021, 14:57