தேடுதல்

Vatican News
இறைவேண்டலில் குழந்தைகள் இறைவேண்டலில் குழந்தைகள் 

மகிழ்வின் மந்திரம் : இயேசுவின் கண்களுடன் அணுகுதல்

திருஅவை மேய்ப்பர்கள், உண்மைக்கு பணிபுரியும் ஆவலில், ஒவ்வொரு சூழலையும் பகுத்தறிந்து, விவேகமுடன் செயல்பட வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் மூன்றாம் பிரிவில், 'இறைவார்த்தையின் விதைகளும், குறைபாடு உள்ள சூழல்களும்' என்ற 4வது பகுதியின், இறுதி இரு பத்திகளில் (78,79) பகிர்ந்திருக்கும் எண்ணங்கள் இதோ:

கிறிஸ்துவின் ஒளி அனைவரையும் ஒளிர்விக்கின்றது. இயேசுவின் கண்களுடன் பார்ப்பது என்பது, இணைந்து வாழும், அல்லது,  பதிவுத்திருமணம் செய்துகொண்டு வாழ்வோர், அல்லது மணவிலக்குப் பெற்று மீண்டும் திருமணம் செய்துள்ளோர், ஆகிய விசுவாசிகள் குறித்த நம் மேய்ப்புப்பணிக் கண்ணோட்டங்களுக்கும் தூண்டுதலாக உள்ளது. திருஅவையும், தன் வாழ்வில் பங்குபெறும் விசுவாசிகள் குறைபாடுடையவர்களாக இருக்கும் நிலையில், இறைவன் கற்பித்துள்ள முறைகளைப் பின்பற்றி, அவர்களின் மனமாற்றத்தின் அருளுக்காக வேண்டுவதோடு, அவர்கள் நன்மைச் செய்யவும், ஒருவருக்கொருவர் அக்கறை எடுத்து செயல்படவும், தாங்கள் வாழும் சமுதாயத்தில் நன்முறையில் பணியாற்றவும் ஊக்கமளிக்கிறது. திருஅவையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிக்கு புறம்பாக இணைந்து வாழும் தம்பதியர், தங்களுக்குள் ஆழமான அன்புடனும், குழந்தைகளை வளர்ப்பதில் பொறுப்புணர்வுடனும், பிரச்சனைகளை எதிர்நோக்கும்போது, இணைந்து பொறுப்புடனும் செய்லபடுவது என்பது, அவர்களை திருமணம் எனும் அருளடையாளம் நோக்கி நாம் அழைத்துச் செல்ல நமக்கு நல்லதொரு வாய்ப்பாக மாறமுடியும். பிரச்சனை நிறைந்த சுழல்களையும், காயம்பட்ட குடும்பங்களையும் எதிர்நோக்கும்போது, ஒரு பொது விதியை நாம் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும். அதாவது, திருஅவை மேய்ப்பர்கள், உண்மைக்கு பணிபுரியும் ஆவலில், ஒவ்வொரு சூழலையும் பகுத்தறிந்து, விவேகமுடன் செயல்பட வேண்டும். எல்லாச் சூழல்களிலும் பொறுப்புணர்வு என்பது, ஒரே வகையில் இருப்பதில்லை, மற்றும், சூழல்கள் குறித்த சரியான முடிவுகளை எடுப்பதில், தடைகளைத் தரும் நிலைகளும் இருக்கலாம். ஆகவே, திருஅவையின் படிப்பினைகளை, தெளிவாக எடுத்துரைக்கும் அதேவேளை, பல்வேறு சுழல்கள் உருவாக்கும் சிக்கல்களை கருத்தில்கொள்ளாமல் எடுக்கும் முடிவுகளை தவிர்க்க முயலவேண்டும். மற்றும், தம்பதியர் தாங்கள் இருக்கும், குறைபாடான நிலையினால் அடையும் துயர்களையும் கவனத்தில்கொண்டு, செயல்பட வேண்டும். (அன்பின் மகிழ்வு 78-79)

14 April 2021, 14:46