தேடுதல்

Vatican News
இப்தார் மாலை உணவருந்தும் குடும்பம் இப்தார் மாலை உணவருந்தும் குடும்பம் 

மகிழ்வின் மந்திரம் : குடும்பம், ஒரு விலைமதிக்க முடியாத கொடை

திருமணத்தில் இறைவன் வழங்கியுள்ள கொடையை பாதுகாப்பது, தனிப்பட்ட குடும்பங்களுக்கு மட்டுமல்ல, அனைத்து கிறிஸ்தவ சமூகத்திற்கும் அவசியம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின், “இயேசுவை நோக்கிப் பார்த்தல்: குடும்பத்தின் அழைப்பு”, என்ற மூன்றாம் பிரிவில், ஆறு பகுதிகளின் கீழ் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். அந்த மூன்றாம் பிரிவின் இறுதியில், 'திருஅவையும் குடும்பமும்' என்ற பகுதியில் காணப்படும் மூன்று பத்திகளில் [86-88], முதல் இரண்டு பத்திகளில் அவர் பகிர்ந்துள்ள கருத்துக்கள் இதோ:

நற்செய்தி படிப்பினைகளுக்கு விசுவாசமாக இருக்கும் குடும்பங்களை உள்மன மகிழ்வுடனும், ஆழமான மனதிருப்தியுடனும் நோக்கும் திருஅவை, அவர்கள் வழங்கும் சான்று வாழ்வில், அவர்களுக்கு ஊக்கமளிப்பதோடு, நன்றியையும் வெளியிடுகிறது. ஏனெனில், திருமணம் என்பது முறிக்கப்பட முடியாதது என்பதை உணர்ந்தவர்களாக, பிறர் நம்பத்தகும்வகையில் அதற்கு விசுவாசமாக, செயல்படுகின்றனர் இவர்கள். இல்லத்திருஅவை என அழைக்கப்படும் குடும்பங்களுக்குள் ஒவ்வொரு தனி நபரும், தங்களுக்குள் ஒன்றிப்பு எனும் திருஅவை அனுபவத்தை இறையருளின் வழியாகப் பெறுவது, தூய மூவொரு கடவுளின் மறையுண்மையை பிரதிபலிப்பதாக உள்ளது. குடும்பத்தில் நாம் ஒவ்வொருவரும், பொறுமை, பணி வழி மகிழ்வு, உடன்பிறந்த உணர்வு தரும் அன்பு, தாராளமனப்பான்மை, திரும்பத் திரும்ப வழங்கப்படும் மன்னிப்பு, இறைவேண்டலில் இறைவழிபாடு, ஒருவரின் வாழ்வையே மற்றவருக்காக கையளித்தல் என்பவைகளை கற்றுக் கொள்கிறோம். குடும்பங்களை இணைத்து உருவாகும் திருஅவை என்ற குடும்பம், இந்த இல்லத் திருஅவைகளால் வளப்படுத்தப்படுகின்றது. திருமணம் எனும் அருளடையாளம் வழியாக ஒவ்வொரு குடும்பமும் திருஅவையின் நன்மையாக மாறுகின்றது. குடும்பம் என்பது திருஅவைக்கு விலைமதிக்க முடியாத ஒரு கொடை. திருஅவையால் குடும்பத்திற்கும், குடும்பத்தால் திருஅவைக்கும் நன்மைகள் விளைகின்றன. திருமணம் எனும் அருளடையாளத்தில் இறைவன் வழங்கியுள்ள கொடையை போற்றி பாதுகாப்பது, தனிப்பட்ட குடும்பங்களுக்கு மட்டுமல்ல, அனைத்து கிறிஸ்தவ சமூகத்திற்கும் முக்கியத்துவம் நிறைந்தது. (அன்பின் மகிழ்வு 86,87)

21 April 2021, 14:12