தேடுதல்

Vatican News
பிறந்த குழந்தையுடன் தாய் பிறந்த குழந்தையுடன் தாய் 

மகிழ்வின் மந்திரம் : குழந்தைப் பிறப்பை திட்டமிடுவதில்...

பல்வேறு குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளை ஏற்று, வளர்த்து, அவர்களுக்கு அன்பை ஊட்டும் குடும்பங்களுக்கு, திருஅவை சிறப்பான நன்றியுடன் ஆதரவு வழங்குகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின், “இயேசுவை நோக்கிப் பார்த்தல்: குடும்பத்தின் அழைப்பு” என்ற, மூன்றாம் பிரிவின், ஐந்தாவது பகுதி, “வாழ்வை வழங்குதல், மற்றும், பிள்ளைகள் வளர்ப்பு” குறித்த கருத்துக்களைப் பகர்கின்றது. அதன் 82ம் பத்தியில் திருத்தந்தை கூறியுள்ள கருத்துக்கள் இதோ:

மனித உயிர்களை உருவாக்குதல் என்ற முடிவில், தனிப்பட்டவர்களும், தம்பதியரும் முடிவெடுத்தால் போதும் என்று சொல்லும் மனநிலை தற்போது வளர்ந்துள்ளது என்று மாமன்றத் தந்தையர் கூறியுள்ளனர். கணவன் மனைவி இருவரும், தங்களின் ஆழ்ந்த ஒன்றிப்பை, தெளிவாகப் புரிந்துகொண்டு, இணக்கமுடனும், முழுமையாகவும், அனுபவிப்பதோடு, மனிதவாழ்வின் இனப்பெருக்கத்திற்கும் அவர்கள் கடமைப்பட்டுள்ளனர் என்பதை திருஅவைப் போதிக்கின்றது. திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களின் Humanae Vitae திருமடல் கூறும் கருத்துக்கு நாம் திரும்பிச்செல்ல கடமைப்பட்டுள்ளோம். குழந்தை பிறப்பைத் திட்டமிடுவதில், மனித மாண்பு மதிக்கப்பட வேண்டிய தேவை, அத்திருமடலில் வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டுள்ளது. திருமண வாழ்வின் பலன், குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதிலும் வெளிப்படுகிறது. பல்வேறு குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளை ஏற்று, வளர்த்து, அவர்களுக்கு அன்பை ஊட்டும் குடும்பங்களுக்கு, திருஅவை சிறப்பான நன்றியுடன் ஆதரவு வழங்குகிறது. (அன்பின் மகிழ்வு 82)

16 April 2021, 13:53