தேடுதல்

Vatican News
புதன் மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ் புதன் மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ்   (Vatican Media)

மகிழ்வின் மந்திரம்: வாழ்வு, அனைத்து நிலைகளிலும் மதிக்கப்பட...

இயற்கையான மரணம் அடைவதற்கு மனிதருக்குள்ள உரிமையை திருஅவை வலியுறுத்துகிறது. அதோடு, மரணதண்டனையையும் உறுதியாகப் புறக்கணிக்கின்றது (அன்பின் மகிழ்வு 83)

மேரி தெரேசா: வத்திக்கான் 

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில், “வாழ்வை வழங்குதல், மற்றும், பிள்ளைகள் வளர்ப்பு” என்ற தலைப்பின்கீழ், 83ம் பத்தியில் மனித வாழ்வு, அதன் அனைத்து நிலைகளிலும் மதிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். அந்த 83ம் பத்தியில், திருத்தந்தை வெளிப்படுத்தியுள்ள அவரின் சிந்தனைகள்....

மனித வாழ்வு, உருவாக்கப்பட்டு, பராமரிக்கப்படுகின்ற இடமாகிய குடும்பம், அந்த வாழ்வு, மறுக்கப்படுகின்ற, மற்றும், அழிக்கப்படுகின்ற இடமாக மாறும்போது, அது, தன் புனிதத்தன்மைக்குப் பயங்கரமான முரணாக உள்ளது. தன் தாயின் உதரத்தில் வளரும் ஒரு மாசற்ற குழந்தை வாழ்வதற்கு உள்ள உரிமையை மறுக்கமுடியாத அளவிற்கு, ஒரு மனித வாழ்வு மிகவும் மதிப்புமிக்கது. எனவே, ஒருவர், தன் வாழ்வை முடித்துக்கொள்வதற்குத் தீர்மானம் எடுப்பது, தனது சொந்த உடலுக்கு உரிமை உள்ளது என்று சொல்வதை, எவராலும் நியாயப்படுத்த முடியாது. ஒருவரின் வாழ்வு, மற்றொரு மனிதரின் சொத்தாக ஒருபோதும் கருதப்படக் கூடாது. குடும்பம், மனித வாழ்வை அதன் இறுதிவரை, எல்லா நிலைகளிலும் பாதுகாக்கவேண்டும். அதேபோல், நலவாழ்வு மையங்களில் பணியாற்றுகின்றவர்களும், தங்களின் மனச்சான்றுக்கு கட்டுப்பட்டு, மனித வாழ்வை அதன் அனைத்து நிலைகளிலும் பாதுகாக்கவேண்டிய அறநெறிக் கடமையைக் கொண்டிருக்கின்றனர் என்பது அவர்களுக்கு நினைவுறுத்தப்படுகின்றது. அதேநேரம், கடுமையான சிகிச்சைகள் மற்றும், கருணைக்கொலைகள் இன்றி, இயற்கையான மரணம் அடைவதற்கு உள்ள உரிமையை திருஅவை வலிறுத்தவேண்டிய அவசரத் தேவையை உணர்வது மட்டுமல்ல, மரணதண்டனையையும், அது உறுதியாகப் புறக்கணிக்கின்றது. (அன்பின் மகிழ்வு 83)

19 April 2021, 14:37