தேடுதல்

வத்திக்கானில் திருத்தந்தை நிறைவேற்றிய திருமணம் எனும் அருளடையாளம் வத்திக்கானில் திருத்தந்தை நிறைவேற்றிய திருமணம் எனும் அருளடையாளம் 

மகிழ்வின் மந்திரம்: திருமணம், சாட்சிகளின் முன்பாக பொதுவில்...

திருமணம் செய்துகொள்ளும் தம்பதியரே, திருமணம் எனும் அருளடையாளத்தை நிறைவேற்றுகின்றவர்கள் (அன்பின் மகிழ்வு 75)

மேரி தெரேசா: வத்திக்கான் 

"அன்பின் மகிழ்வு" திருத்தூது அறிவுரை மடலின் 75வது பத்தியில், திருமணச் சடங்கு பற்றி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ள கருத்துக்கள் இதோ...

திருஅவையின் இலத்தீன் வழிபாட்டு மரபில், திருமணம் புரிந்துகொள்ளும் ஆணும் பெண்ணுமே, திருமணம் எனும் அருளடையாளத்தை நிறைவேற்றும் திருப்பணியாளர்கள் ஆவர். அந்நிகழ்வின்போது அவர்கள் தங்களின் ஒப்புதலை வெளிப்படையாக அறிக்கையிடுவதன் வழியாக,  அவர்கள் மிகப்பெரும் கொடையைப் பெறுகின்றனர். தம்பதியர், திருமுழுக்கு அருளடையாளத்தில் பெற்ற அருளால், ஆண்டவரின் திருப்பணியாளர்களாக, திருமணத்தில் இணையவும், கடவுளின் அழைப்புக்கு பதிலளிக்கவும் அவர்களால் இயலுகின்றது. இதனால், கிறிஸ்தவர் அல்லாத இரு தம்பதியர் திருமுழுக்குப் பெறும்போது, அவர்கள் தங்களின் திருமண வாக்குறுதியைப் புதுப்பிக்கவேண்டிய அவசியமில்லை. அதேநேரம், அவர்கள், அதைப் புறக்கணிக்கவேண்டியதும் இல்லை. ஏனெனில் திருமுழுக்கை ஏற்பதன் வழியாக, அவர்களின் திருமணப்பிணைப்பு, அருளடையாளமாக மாறுகின்றது. அருள்பணியாளர்களின் பிரசன்னம் இன்றி, நடைபெறும் சில திருமணங்களை திருஅவை சட்டம் அங்கீகரிக்கின்றது. திருமணம், சாட்சிகளின் முன்பாக பொதுவில் நடைபெறவேண்டும் என்று திருஅவை விரும்புகிறது. இதன் மற்ற நிபந்தனைகள், காலப்போக்கில் மாறுகின்றன. ஆயினும், இது, திருமணம் செய்துகொள்ளும் தம்பதியரே, அந்த அருளடையாளத்தை நிறைவேற்றுகின்றவர்கள் என்ற உண்மையைக் குறைக்காது. அதோடு, ஆணும் பெண்ணும் வழங்கும் ஒப்புதலின் மையக்கூறையும் இது பாதிக்காது. ஏனெனில், இந்த ஒப்புதலே, அருளடையாள ஒன்றிப்பை உருவாக்குகிறது. திருமணச் சடங்கில், கடவுளின் செயல்பாடு பற்றி மேலும் சிந்திக்கவேண்டிய தேவை உள்ளது என்று சொல்லப்பட்டு வருகிறது. தம்பதியர் பெறுகின்ற ஆசிர்வாதங்கள், தூய ஆவியின் கொடையின் ஓர் அடையாளமாக உள்ளது என்பது, கீழை வழிபாட்டுமுறை திருஅவைகள் நிறைவேற்றும் திருமணச் சடங்குகளில் தெளிவாக வெளிப்படுத்தப்படுகின்றன. (அன்பின் மகிழ்வு 75)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 April 2021, 14:51