தேடுதல்

Vatican News
இலங்கையின் ஆலயங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு (21042019) இலங்கையின் ஆலயங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு (21042019) 

மூன்றில் ஒரு நாட்டில், மத உரிமை மீறல்கள் - ACN எச்சரிக்கை

இன்றைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, மத வன்முறைகள் பரப்பப்படுகின்றன. இவ்வகை வன்முறை, சீனாவில் மிக அதிகமாக நிலவிவருகிறது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலக நாடுகளில் மூன்றில் ஒரு பகுதி நாடுகளில், மத உரிமைகள் மிக அதிகமாக பறிக்கப்பட்டுள்ளன என்று, Aid to the Church in Need (ACN) என்ற பெயரில் இயங்கிவரும், மேய்ப்புப்பணிகளுக்கு நிதி உதவிகள் செய்யும் கத்தோலிக்க நிறுவனம் ஒன்று, தன் ஆண்டறிக்கையில் கூறியுள்ளது.

ACN நிறுவனம் வெளியிட்ட 15வது ஆண்டறிக்கையில், உலக நாடுகளில் மூன்றில் ஒன்று மத உரிமைகளை மீறிவருகின்றன என்றும், இவற்றில், 26 நாடுகளில் மிகக் கொடுமையானச் சூழல் நிலவுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆப்ரிக்க கண்டத்தின் பல நாடுகள் அடிப்படைவாதக் கொள்கைகளுக்குப் பலியாகி வருகின்றன என்று கூறும் இவ்வறிக்கையில், அடிப்படைவாதிகளான ஜிகாதி குழுக்கள், ஆப்ரிக்க கண்டத்தின் 42 விழுக்காட்டு நாடுகளில் உள்ளனர் என்றும், இவர்களால், பெரும்பாலான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

வெளிப்படையான, உடல் சார்ந்த வன்முறைகளுடன், அண்மைய நாள்களில், இன்றைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, மத வன்முறைகள் பரப்பப்படுகின்றன என்றும், இவ்வகை வன்முறை, சீனாவில் மிக அதிகமாக நிலவிவருகிறது என்றும் ACN நிறுவனத்தின் ஆண்டறிக்கை கூறுகிறது.

சிறுபான்மையினத்தைச் சேந்தவர்கள், ஆள் கடத்தல், கட்டாய மத மாற்றம், பாலியல் கொடுமை மற்றும் நவீன அடிமைத்தனம் ஆகிய கொடுமைகளுக்கு உள்ளாவதையும் இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

கோவிட்-19 நெருக்கடியை அடிப்படையாகக் கொண்டு, பல நாடுகளில், மத நடவடிக்கைகள் பெருமளவு தடை செய்யப்பட்டுள்ளன என்றும், இதே நாடுகளில், ஏனைய வர்த்தக, கேளிக்கை நடவடிக்கைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன என்றும் ACN நிறுவனம் கூறியுள்ளது.

21 April 2021, 14:40