தேடுதல்

Vatican News
இந்தியாவில் குருத்தோலை ஞாயிறு இந்தியாவில் குருத்தோலை ஞாயிறு  (AFP or licensors)

தமிழ், சிங்கள இளையோர் இணைந்து சிலுவைப்பாதை

கிறிஸ்துவின் துன்பங்களைத் தியானித்ததன் பயனாக இளையோர், தாங்கள் வேலைசெய்யும் தேயிலைப் பண்ணையில் தினமும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி சிந்தித்தனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இலங்கையின் Welimada பங்குத்தளத்திற்கு அருகில் தேயிலைப் பண்ணைகளில் வேலைசெய்யும் தமிழ் மற்றும், சிங்கள இளையோர் இணைந்து, மார்ச் 28, இஞ்ஞாயிறன்று சிலுவைப்பாதை பக்தி முயற்சியை மேற்கொண்டனர்.

Keklis தேயிலைப் பண்ணையில் வேலை செய்யும் இந்த இளையோர், தங்களின் கிறிஸ்தவ நம்பிக்கை மற்றும், ஒன்றிப்பை வலுப்படுத்துவதற்கு உதவியாக, இயேசு அடைந்த துன்பங்களை தியானித்து இந்த பக்தி முயற்சியை மேற்கொண்டனர்.

இந்நிகழ்வை ஏற்பாடு செய்த, நாசரேத்து திருக்குடும்ப சபையின் அருள்சகோதரி கிரேஸ் பெர்னான்டோ அவர்கள் கூறுகையில், இயேசு, கல்வாரியில் சிலுவையில் அறையுண்டு இறந்ததன் நினைவாக, இளையோர் கடினமான பாதைகளில், நீண்டதொரு பயணத்தை மேற்கொண்டனர் என்று, ஆசியச் செய்தியிடம் கூறினார்.

கிறிஸ்துவின் துன்பங்களைத் தியானித்ததன் பயனாக இளையோர், தாங்கள் வேலைசெய்யும் தேயிலைப் பண்ணையில் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி சிந்தித்தனர் என்றும் கூறிய அருள்சகோதரி கிரேஸ் அவர்கள், சிலுவைப்பாதையின் முதல் நிலையை இளையோர் எவ்வாறு தியானித்தனர் என்று விளக்கினார்.

ஒவ்வொருவரும் தங்களின் தனிப்பட்ட வாழ்வில் சந்திக்கும் சிலுவைகள், மற்றும், மற்றவரின் சிலுவைகளை தங்களது சிலுவைகள் போன்று உணர்வது ஆகியவற்றைத் தியானித்த இளையோர், சிலவேளைகளில், தங்களின் தவறான நடைமுறையால் பெற்றோருக்கு, சிலுவைகளாக மாறுவதுபற்றி உணர்ந்ததோடு, தங்களுக்கிடையே உறவை வளர்த்துக்கொள்வதற்கும் உறுதி எடுத்தனர் என்று, அருள்சகோதரி கிரேஸ் அவர்கள் கூறியுள்ளார். (AsiaNews)            

30 March 2021, 14:39