தேடுதல்

Vatican News
வெர்ஜீனியாவில் மரண தண்டனை சட்டம் இரத்து, பிளாரன்ஸ் நகரில் வரவேற்பு வெர்ஜீனியாவில் மரண தண்டனை சட்டம் இரத்து, பிளாரன்ஸ் நகரில் வரவேற்பு  (ANSA)

வெர்ஜீனியா மாநிலத்தில் மரண தண்டனை சட்டம் இரத்து

அமெரிக்க ஐக்கிய நாட்டின் மற்ற மாநிலங்களும், வெர்ஜீனியா மாநிலத்தின் இந்நடவடிக்கையைப் பின்பற்றி, மரண தண்டனை சட்டத்தை இரத்து செய்ய அழைப்பு - பேராயர் Coakley

மேரி தெரேசா:வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் வெர்ஜீனியா மாநிலம், மரண தண்டனை நிறைவேற்றும் நடவடிக்கையை இரத்து செய்திருப்பது, வாழ்வுக் கலாச்சாரத்தை நோக்கி எடுத்துவைத்திருக்கும் துணிச்சலான முதல் முயற்சி என்று, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.

மார்ச் 24, இப்புதனன்று கையெழுத்திடப்பட்ட, வெர்ஜீனியா மாநிலத்தின் இந்த புதிய சட்டத்தை வரவேற்று, அம்மாநிலத்தின் Arlington ஆயர் Michael F. Burbidge அவர்களும், Richmond ஆயர் Barry C. Knestout அவர்களும், இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நம்பிக்கை நிறைந்த இந்த புதிய துவக்கத்தை, மகிழ்வோடு ஏற்பதாகக் கூறப்பட்டுள்ளது.

சமுதாய நட்பு பற்றிக் கூறும், "அனைவரும் உடன்பிறந்தோர்" என்ற தன் திருமடலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மரண தண்டனைக்கு எதிராக, கடுமையாய்ப் பேசியிருப்பது பற்றிக் குறிப்பிட்டுள்ள ஆயர்கள், ஒவ்வொரு மனிதருக்கும் உரிய மறுக்கவியலாத மாண்பை ஏற்பது இயலக்கூடியது என்பதையே, அது காட்டுகிறது என்று கூறியுள்ளனர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் உள்நாட்டு நீதி, மற்றும், மனித வளர்ச்சி பணிக்குழுவின் தலைவரான, Oklahoma நகரின் பேராயர் Paul S. Coakley அவர்களும், வெர்ஜீனியா மாநிலம், மரண தண்டனை சட்டத்தை இரத்துசெய்திருப்பதன் வழியாக, அந்நாட்டில், இச்சட்டத்தை இரத்து செய்துள்ள 23வது மாநிலமாக அது மாறியுள்ளது என்று கூறியுள்ளார்.

அதோடு, அந்நாட்டின் மற்ற மாநிலங்களும், மத்திய அரசும், இதேமாதிரியான தீர்மானத்தை மேற்கொள்ளுமாறும், பேராயர் Coakley அவர்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மார்ச் 24, இப்புதனன்று, வெர்ஜீனியா மாநிலத்தின் இந்த புதிய சட்டத்தில் கையெழுத்திட்டு கருத்து தெரிவித்த, அம்மாநிலத்தின் ஆளுனர் Ralph Northam அவர்கள், கடந்த நானூறு வருட வரலாற்றில், வெர்ஜீனியா மாநிலம், 1,300க்கும் மேற்பட்ட மரண தண்டனைகளை நிறைவேற்றியுள்ளது என்றும், மற்ற 22 மாநிலங்களோடு, இம்மாநிலமும் இணைந்து, இனிமேல் மனித வாழ்வை பறிக்கப்போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

1991ம் ஆண்டிலிருந்து 101 பேர், மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட, Jarratt நகரின் Greensville சிறைக்கு முன்பாக, இந்த கையெழுத்து நிகழ்வு நடைபெற்றது. இதில், மரண தண்டனைக்கு எதிராக குரல்கொடுத்த சட்ட அமைப்பாளர்களும், ஆர்வலர்களும் கலந்துகொண்டனர். (UCAN)

27 March 2021, 15:29