தேடுதல்

Vatican News
தடுப்பூசிகளின் காப்புரிமை, இலாபம் இவற்றை எதிர்த்து தென் ஆப்ரிக்க மக்களின் போராட்டம் தடுப்பூசிகளின் காப்புரிமை, இலாபம் இவற்றை எதிர்த்து தென் ஆப்ரிக்க மக்களின் போராட்டம்  (ANSA)

அனைவருக்கும் தடுப்பூசிகள் - அமெரிக்க ஆயர்கள் அறிக்கை

மார்ச் 9, கோவிட்-19 பெருந்தொற்றின் உலகளாவிய பரவல் அறிவிக்கப்பட்டு ஓராண்டு நிறைவுற்றதையடுத்து, அமெரிக்க ஆயர்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

 

கோவிட்-19 பெருந்தொற்றின் உலகளாவியப் பரவல், நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும், நாம் ஒவ்வொருவரும் நம் அயலவருக்கு காப்பாளர்கள் என்பதையும் வலிமையாக உணர்த்தியுள்ளது என்று, அமெரிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.

மார்ச் 9, இச்சவ்வாயன்று, கோவிட்-19 பெருந்தொற்றின் உலகளாவிய பரவல் அறிவிக்கப்பட்டு ஓராண்டு நிறைவுற்றதையடுத்து, அமெரிக்க ஆயர்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், இந்த பெருந்தொற்று, நமது சக்தியற்ற நிலையையும், நாம் எவ்வளவு தூரம் கடவுளையும் அடுத்தவரையும் சார்ந்திருக்கிறோம் என்பதையும், தெளிவாக உணர்த்தியுள்ளது என்று கூறியுள்ளனர்.

இந்த நோய்க்கிருமிக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசி, நமக்கு நம்பிக்கை தரும் ஓர் அடையாளம் என்றும், இந்த நம்பிக்கை, உலகெங்கும் பரவ வேண்டுமெனில், தடுப்பூசிகள் அனைவரையும் சென்றடைவதை, அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும், ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.

கடந்த ஓராண்டளவாக, அமெரிக்க ஐக்கிய நாடு, மிகப்பெரும் இழப்புக்களை சந்தித்துள்ளது என்று, இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டும் ஆயர்கள், அதேவேளை, இந்தக் கடினமான நேரத்தில் உருவான தியாகங்களை, குறிப்பாக, நலப்பராமரிப்பில் ஈடுபட்ட மருத்துவத் துறையினர் காட்டிய தியாகத்தை, நன்றியோடு எண்ணிப்பார்க்கவேண்டும் என்று, அழைப்பு விடுத்துள்ளனர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில், கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியே 92 இலட்சம் என்றும், இவர்களில், இந்நோயினால் இறந்தோரின் எண்ணிக்கை, 5 இலட்சத்திற்கும் அதிகம் என்றும், இறந்தோரின் எண்ணிக்கை, உலகின் வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவு, மிக அதிகமாக உள்ளது என்றும், ஊடகங்கள் கூறுகின்றன.

11 March 2021, 13:05