தேடுதல்

ஈராக் மோசூல் நகரில் தீவிரவாதிகளால் அழிக்கப்பட்ட பேராலயம் ஈராக் மோசூல் நகரில் தீவிரவாதிகளால் அழிக்கப்பட்ட பேராலயம் 

ஈராக்கின் ஆலயங்களை மீண்டும் கட்டியெழுப்பும் UNESCO

UNESCO தலைமை இயக்குனரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் கலாச்சார அமைச்சரும், மோசூல் நகரின் மீள் கட்டமைப்புகளைப் பற்றிய ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

தீவிரவாதம், போர் ஆகியவற்றால் பெரும் அழிவுகளைச் சந்தித்துள்ள ஈராக் நாட்டின் மோசூல் நகரில், அமைதி, மன்னிப்பு ஆகியவற்றைப்பற்றி திருத்தந்தை பேசிவந்த அதே வேளையில், ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனமான UNESCO, மோசூல் நகரை மீண்டும் கட்டியெழுப்புவது குறித்து ஒப்பந்தங்களை நிறைவேற்றியது.

திருத்தந்தையின் ஈராக் திருத்தூதுப்பயணம் நிறைவுக்கு வந்ததையடுத்து, UNESCO தலைமை இயக்குனரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் கலாச்சார அமைச்சரும், மோசூல் நகரில் மேற்கொள்ளப்படவேண்டிய மீள் கட்டமைப்புகள் பற்றிய ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

UNESCOவின் ஈராக் ஒருங்கிணைப்பாளர், Paolo Fontani அவர்கள் வத்திக்கான் செய்திக்கு அளித்த ஒரு பேட்டியில், Basrah என்ற பழம்பெரும் நகரையும், எர்பில் நகரில் உள்ள பழமை வாய்ந்த கோட்டை ஒன்றையும் மீள் கட்டமைப்பது, UNESCOவின் முக்கிய இலக்குகளாக அமைந்துள்ளன என்று கூறினார்.

மோசூல் நகரில் தீவிரவாதிகளால் அழிக்கப்பட்ட பல வரலாற்று சிறப்பு மிக்க நினைவுச் சின்னங்களில், மிகப்பழமையான ஆலயங்களும், மசூதிகளும் முதலில் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று Fontani அவர்கள் சுட்டிக்காட்டினார்.

Mosul
Mosul

மோசூல் நகரை கட்டியெழுப்புவது வெறும் கற்களைக் கொண்டு மட்டும் நடக்கப்போகும் மீள் கட்டமைப்பு அல்ல, மாறாக, அப்பகுதியிலிருந்து வெளியேறிய மக்களை மீள் குடியமர்த்துவதன் வழியிலும் இந்த கட்டமைப்பு நடைபெறவேண்டும் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியது, UNESCO நிறுவனத்தின் நோக்கத்துடன் ஒத்திணங்கி செல்கிறது என்று Fontani அவர்கள் கூறினார்.

மோசூல் நகருக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சென்றது, அமைதி, ஒப்புரவு, உடன்பிறந்த நிலை ஆகியவை குறித்து, இவ்வுலகிற்கு சக்தி மிகுந்த ஒரு செய்தியாக அமைந்தது என்று, ஐக்கிய அரபு அமீரகத்தின் கலாச்சார அமைச்சர் Noura Al Kaabi அவர்களும், UNESCO நிறுவனத்தின் தலைமை இயக்குனர் Audrey Azoulay அவர்களும் கூறினர்.

10 March 2021, 14:39