தேடுதல்

Vatican News
தமாஸ்கு சந்தையில் மக்கள் தமாஸ்கு சந்தையில் மக்கள்  (ANSA)

சிரியாவின் மீள்கட்டமைப்புக்கு உதவித் திட்டங்கள்

சிரியாவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர், அந்நாட்டு மக்களின் அமைதியான வாழ்வையும், நம்பிக்கையையும் அழித்துள்ளது - கர்தினால் செனாரி

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பத்தாண்டுகள் உள்நாட்டுப் போரால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள சிரியா நாட்டு மக்களின் வறுமையை அகற்றுவதற்கு, பெருமளவில் உதவிகள் தேவைப்படுகின்றன என்று, அந்நாட்டில், 2008ம் ஆண்டிலிருந்து திருப்பீட தூதராகப் பணியாற்றும், கர்தினால் மாரியோ செனாரி அவர்கள் கூறினார்.

மார்ச் 15, இத்திங்களன்று, சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கி, பத்தாண்டுகள் நிறைவுற்றுள்ளதை முன்னிட்டு, வத்திக்கான் செய்தித் துறைக்குப் பேட்டியளித்த, கர்தினால் செனாரி அவர்கள், அந்நாட்டில் இடம்பெற்ற போர், நாட்டு மக்களின் அமைதியான வாழ்வையும், நம்பிக்கையையும் அழித்துள்ளது என்று கூறினார்.

ஆயுத மோதல்களால் பள்ளிகளும், மருத்துவமனைகளும் பெருமளவில் சேதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பெருமளவில் அம்மக்களுக்கு உதவிகள் தேவைப்படுகின்றன என்றும் கூறினார், கர்தினால் செனாரி.

ROACO அமைப்பின் உதவிகள்

மேலும், சிரியாவில் போர் தொடங்கி, பத்தாண்டுகள் நிறைவுற்றுள்ளதை முன்னிட்டு, கீழை வழிபாட்டுமுறை பேராயத்தின் ROACO அமைப்பின் செயலர் அருள்பணி Kuriacose Cherupuzhathottathil அவர்கள், வத்திக்கான் செய்தித் துறைக்கு அளித்த பேட்டியில், அந்த அமைப்பு, சிரியாவுக்கு ஆற்றிவரும் பணிகள் பற்றி விவரித்துள்ளார்.

கீழை வழிபாட்டுமுறை பேராயத்தின் மனிதாபிமான அமைப்பான ROACO, சிரியாவில், ஆலயங்கள், வீடுகள், பள்ளிகள், நலவாழ்வு அமைப்புகள் போன்றவற்றின் மீள்கட்டமைப்புப் பணிகளுக்கு, உதவித் திட்டங்களை அறிவித்துள்ளது என்று, அருள்பணி குரியாகோஸ் அவர்கள் கூறினார்.

சிரியாவின் மீள்கட்டமைப்புக்கு, ROACO அமைப்பு ஆற்றும் உதவிகள், அந்நாட்டு மக்களோடு திருஅவை கொண்டிருக்கும் தோழமையுணர்வின் வெளிப்பாடு மட்டுமல்ல, அம்மக்கள் மீது திருத்தந்தை கொண்டிருக்கும் அன்பை வெளிப்படுத்துவதாகவும் உள்ளன என்றும், அருள்பணி குரியாகோஸ் அவர்கள் கூறினார்.

சிறந்ததோர் வருங்காலத்தின் மீது, சிறாருக்கு நம்பிக்கையை உருவாக்கும்வண்ணம், ஏறத்தாழ 600 சிறாரின் கல்விக்கும், ROACO அமைப்பு உதவியுள்ளது என்று, அருள்பணி குரியாகோஸ் அவர்கள் எடுத்துரைத்தார். 

இதற்கிடையே, மார்ச் 14, இஞ்ஞாயிறு நண்பகலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் புனித பேதுரு பேராலய வளாகத்தில் குழுமியிருந்த மக்களுக்கு வழங்கிய மூவேளை செப உரைக்குப்பின், சிரியாவில் இடம்பெறும் பத்தாண்டுகால போர் முடிவுக்கு வரவேண்டும் என அழைப்புவிடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2011ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி சிரியா அரசுத்தலைவர் Bashar al-Assad அவர்களுக்கு எதிராக இடம்பெற்ற போராட்டங்கள், மற்றும், அது கொடுமையான முறையில் அடக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டில், ஆயுத மோதல்கள் ஆரம்பித்தன.

16 March 2021, 14:51