தேடுதல்

“கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்.” (யோவான் 12: 24) “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்.” (யோவான் 12: 24) 

தவக்காலம் 5ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை

கோதுமை மணி படைக்கப்பட்டதற்கு முக்கியமான இரு காரணங்கள் உண்டு. ஒன்று, அது, உணவாக மாறி, ஏனைய உயிர்களை வளர்க்கவேண்டும். அல்லது, விதையாக மாறி, தன் இனத்தைப் பெருக்கவேண்டும்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

ஞாயிறு சிந்தனை 210321

"மார்ச் 20, சனிக்கிழமை, வசந்தக்காலம் அதிகாரப்பூர்வமாக வந்துசேர்கிறது" என்று ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் வானிலை அறிக்கைகள் கூறியுள்ளன. அதிலும், வானிலையை துல்லியமாக அளப்பதாக தன்னையே விளம்பரப்படுத்திக்கொள்ளும்  AccuWeather.com என்ற இணையதளத்தில் வெளிவந்த ஓர் அறிக்கையில், "மார்ச் 20, சனிக்கிழமை, காலை 5:37 மணிக்கு வசந்தம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகிறது" (Spring will officially begin at the vernal equinox, which will occur at 5:37 a.m. EST on March 20, 2021 - AccuWeather.com) என்ற அறிக்கையை வாசிக்கும்போது, சற்று வேடிக்கையாக உள்ளது.

ஒரு விமானம், ஒரு தொடர்வண்டி, அல்லது, ஒரு பேருந்து, எந்த நேரத்தில் வரும் அல்லது புறப்படும் என்பதை அறிவிப்பதற்கு, நாள், மணி, நிமிடம் ஆகியவற்றை, குறிப்பிட்டுச் சொல்லலாம். ஆனால், அதே பாணியில், வசந்தக்காலம் வரும் என்று சொல்வது, இயற்கையை நம் கட்டுப்பாட்டிற்குள் கொணரும் முயற்சியாகத் தெரிகிறது. பருவக்காலங்களை, இயற்கைச் சுழற்சிகளை நமது கட்டுப்பாட்டிற்குள் கொணர்வதற்குப் பதில், அவற்றுடன் இணைந்து நாம் வாழப் பழகிக்கொண்டால், நமது பூமிக்கோளம் இன்னும் பல யுகங்கள் தடையின்றி சுழன்றுவரும்.

இயற்கையை, இயற்கையின் சுழற்சியை இறைவன் தரும் கொடையாக, பணிவோடு ஏற்று, இயற்கையோடு வாழப் பழகியிருந்தால், இப்போது நாம் சந்தித்துவரும், சுற்றுச்சூழல் சீரழிவு, அதன் விளைவாக நிகழும் இயற்கைப் பேரிடர்கள், இப்பேரிடர்களின் சிகரமாக, கடந்த ஆண்டு முதல் நம்மை வதைத்துவரும் கோவிட்-19 பெருந்தொற்று போன்ற ஆபத்துக்களைத் தவிர்த்து, நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம். இவ்வளவு நடந்தும், மனிதர்களாகிய நாம், நமக்குத் தேவையான பாடங்களை பயின்றுள்ளோமா என்ற ஆய்வை, வசந்தகாலத்தில் அடியெடுத்து வைக்கும் வேளையில் மேற்கொள்வோம்.

இயற்கையின் சுழற்சியில் உள்ள நான்கு பருவக்காலங்களில், வசந்தக்காலத்திற்குத் தனியொரு அழகும், அர்த்தமும் உண்டு. பனியில் புதைந்து, இறந்துபோனதாய் நாம் நினைக்கும் தாவர உயிர்கள், வசந்தம் வந்ததும், மீண்டும் உயிர்பெற்று எழுவது, இயற்கை நமக்குச் சொல்லித்தரும் நம்பிக்கை பாடம். நம்பிக்கை தரும் வசந்தக்காலத்தில், தவக்காலத்தை நாம் கொண்டாடுகிறோம்.

தவக்காலம் ஒரு கொண்டாட்டமா? ஆம்... ‘வாழ்வதற்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு உள்ளது’ என்ற நம்பிக்கையை வளர்க்கும் காலம் இது என்பதால், இது ஒரு கொண்டாட்டம்தான். தவக்காலத்தின் இந்த 5ம் ஞாயிறன்று, வசந்தக்காலத்தை நமக்கு நினைவுறுத்தும் அழகான ஒரு கூற்றை, இறைமகன் இயேசு, இன்றைய நற்செய்தியில், நமக்கு முன் வைக்கிறார்: “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.” (யோவான் 12: 24)

தாவர உலகம் மீண்டும் உயிர்பெற்று எழும் வசந்தக்காலத்தின் துவக்கத்தில், இயேசுவின் இந்தக் கூற்று, பல எண்ணங்களை உள்ளத்தில் விதைக்கின்றது.

வழிபாட்டுக்காகத் திருவிழாவுக்கு வந்தோருள் கிரேக்கர் சிலரும் இருந்தனர். இவர்கள் கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்பிடம் வந்து, “ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்” என்று கேட்டுக் கொண்டார்கள். (யோவான் 12: 20-21) என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. ஆர்வமாகத் தன்னைத் தேடிவந்த கிரேக்கர்களை வரவேற்று, அவர்களுக்கு நம்பிக்கை தரும் நாலு வார்த்தைகளை இயேசு சொல்லியிருக்கலாம். அதற்கு நேர்மாறாக, அவர் கூறும் வார்த்தைகள், கலக்கத்தை, அச்சத்தை உருவாக்கும் வார்த்தைகளாக ஒலிக்கின்றன.

எருசலேமுக்கு கிரேக்கர்கள் ஏன் வந்தார்கள்? அவர்கள் ஏன் இயேசுவைக் காண விழைந்தார்கள்? அவர்களிடம் இயேசு, ஏன் இப்படி ஒரு பதிலைத் தந்தார்? என்ற கேள்விகளுக்கு, அருள்பணி முனாச்சி என்பவர் (Fr Munachi E. Ezeogu) தன் மறையுரையில் தரும் விளக்கம் புதிதாக உள்ளது... புதிராகவும் உள்ளது. அவரது கூற்றைச் சிந்திப்பது, நமக்கு பயனளிக்கும்.

உரோமையர்களைவிட கலாச்சாரத்தில் உயர்ந்தவர்கள், கிரேக்கர்கள். அவர்கள் மத்தியில் வாழ்ந்த உலகப் புகழ்பெற்ற மேதை, சாக்ரடீசை, அவர்கள் கொன்றது, பெரும் தவறு என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். சாக்ரடீசின் கொலைக்குப் பின், எந்த ஒரு தனி மனிதரையும், அவர் பின்பற்றும் கொள்கைகளுக்கென, அவர் மக்களிடையே பரப்பிவரும் கருத்துக்களுக்கென கொல்வதில்லையென்று உறுதியான தீர்மானம் எடுத்தவர்கள், கிரேக்கர்கள். எனவே, அவர்கள் மத்தியில், பல்வேறு சிந்தனையாளர்கள், சுதந்திரமாக வாழமுடிந்தது, பேசமுடிந்தது. தங்கள் நாட்டு அறிஞர்களின் சிந்தனைகளை வளர்த்தது போதாதென்று, பல கிரேக்கர்கள், அண்டை நாடுகளுக்கும் சென்று, அங்குள்ள சிந்தனையாளர்களைச் சந்தித்து, தங்கள் அறிவைப் பெருக்கினர். சுதந்திரச் சிந்தனை கொண்ட இந்த கிரேக்கர்களில் ஒரு சிலர், இயேசுவைத் தேடி, எருசலேம் நகருக்கு வந்தனர்.

எருசலேமில் அவர்கள் இயேசுவைத் தேடியபோது, ஒரு கசப்பான உண்மையை முதலில் கண்டுபிடித்தனர். இயேசு என்ற அந்த இளையவருக்கு எதிராக, அந்நகரில் உருவாகிவந்த எதிர்ப்பு, வெறுப்பு ஆகியவை, அவர்களை அதிர்ச்சி அடையச் செய்திருக்கும். எனவே, அவர்கள் இயேசுவைச் சந்தித்ததும், தாங்கள் கண்டுபிடித்த உண்மைகளை அவருக்கு எடுத்துச்சொல்லி, சிந்தனைச் சுதந்திரம் உள்ள கிரேக்க நாட்டுக்கு, தங்களுடன் வரும்படி, அவரை அழைத்திருப்பார்கள். அவர்கள் தந்த அழைப்பை ஏற்க மறுத்த இயேசு, தன்னுடைய நேரம் வந்துவிட்டது என்று பேச ஆரம்பிக்கிறார்.

ஊருக்குப் புதிதாய் வந்த வேற்று நாட்டினரே, இயேசுவுக்கு வரப்போகும் ஆபத்தை உணர்ந்திருந்தார்கள் என்றால், இயேசுவுக்கு அது தெரியாமலா இருந்திருக்கும்? கட்டாயம் இயேசு இதை உணர்ந்திருப்பார். அந்த ஆபத்திலிருந்து தப்பித்துப் போகாமல், அதை நேருக்கு நேர் சந்திக்க அவர் முடிவெடுத்தார். அந்த கசப்பான முடிவை, இயேசு, இன்றைய நற்செய்தியில் பல விதங்களில் கூறுகிறார்.

அவர் சொன்ன முதல் வாக்கியம்: மானிட மகன் மாட்சி பெறவேண்டிய நேரம் வந்துவிட்டது. (யோவான் 12: 23) மாட்சி பெறும் நேரம் என்றால், அதைத் தொடர்ந்து அரியணை, மணிமகுடம், அரசாட்சி என்ற தோரணையில் இயேசு பேசியிருக்க வேண்டும். அதற்கு நேர் மாறாக, இயேசு கூறியவை மேலும் புதிராக உள்ளன. அவர் தொடர்ந்து கூறிய, “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” (யோவான் 12: 24) என்ற வார்த்தைகள், காலம் காலமாக, பலருடைய உள்ளங்களில், உறுதியை, வீரத்தை, தியாகத்தை விதைத்துள்ள வார்த்தைகள்.

இந்த உன்னத உள்ளங்களில் தலைசிறந்து நிற்பவர், அந்தியோக்கு நகர் புனித இஞ்ஞாசியார். கோதுமை மணி மாவாக அரைபட்டு அப்பமாக மாறுவதை, புனித இஞ்ஞாசியார் அழகாகக் கூறியுள்ளார். தான் சிங்கங்களின் பசி தீர்க்கும் உணவாகப் போகிறோம் என்பதை உணர்ந்த அவர் சொன்ன வார்த்தைகள் இவை: "இறைவனின் கோதுமை மணி நான். சிங்கத்தின் பற்களால் அரைக்கப்பட்டு, கிறிஸ்துவின் தூய்மையான அப்பமாக மாறுவதற்காக படைக்கப்பட்ட கோதுமை மணி நான்."

இயேசு கூறிய கோதுமை மணி உருவகம், புனித இஞ்ஞாசியாரைப்போல, பலருக்கு, உந்துசக்தியாக இருந்தது. கோதுமை மணி படைக்கப்பட்டதற்கு முக்கியமான இரு காரணங்கள் உண்டு. ஒன்று, அது, உணவாக மாறி, ஏனைய உயிர்களை வளர்க்கவேண்டும். அல்லது, விதையாக மாறி, தன் இனத்தைப் பெருக்கவேண்டும். இந்த இரு காரணங்களும் நிறைவேற, கோதுமை மணி, தன் சுய உருவை, உயிரை இழக்கவேண்டும்.

தன்னை இழந்து, மற்றவரை வாழ்விப்பது, கோதுமை மணிகளுக்கு மட்டுமல்ல; அனைத்து உயிரினங்களுக்கும், குறிப்பாக, மனிதர்களுக்கும் குறிக்கப்பட்டுள்ள முக்கிய இலக்கு. மண்ணில் விழும் விதைகளாக மாற நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதைச் சிந்திக்கும்போது, உவமைபோல சொல்லப்பட்டுள்ள கதையொன்று நினைவுக்கு வருகிறது.

உலக அமைதி எப்போது வரும் என்ற ஏக்கத்துடன் வாழ்ந்தனர், ஓர் இளைஞனும், இளம் பெண்ணும். ஆனால், இவ்வுலகம் ஒவ்வொரு நாளும் மோசமாகி வருகிறதே என்ற விரக்தியினால் மன அமைதியை இழந்து தவித்தனர்.

இருவரும் ஒருநாள், ஒரு கடைக்குச் சென்றனர். அந்தக் கடை சற்று வித்தியாசமாக இருந்தது. கடையின் உரிமையாளர் இயேசு என்பதை இருவரும் உணர்ந்து, அவரிடம் சென்று, "இங்கு நீங்கள் என்ன விற்கிறீர்கள்?" என்று கேட்டனர். இயேசு அவர்களிடம், "உங்களுக்கு விருப்பமான அனைத்தும் இங்கு உள்ளன. நீங்கள் கடையைச் சுற்றிப் பாருங்கள். உங்களுக்கு விருப்பமானவற்றைக் குறித்துக்கொண்டு என்னிடம் வாருங்கள்" என்று சொல்லி அனுப்பினார்.

இளைஞனும், இளம்பெண்ணும் கடை முழுவதும் சுற்றினர். அவர்கள் விரும்பித்தேடிய பல பொருள்கள் அங்கிருந்தன. அமைதியான உலகம், பசியில்லாத பூமி, போரற்ற சமுதாயம், அன்பு நிறைந்த குடும்பம் என்று அவர்கள் ஏங்கித்தவித்த அனைத்தும், அந்தக் கடையில் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. தாங்கள் அதுவரை தேடிய அனைத்தும் தங்களுக்கு உடனே கிடைத்துவிடும் என்ற ஆவலில், அக்கடையில் இருந்த அனைத்து நலன்களையும் ஒரு தாளில் குறித்துக்கொண்டு, இருவரும் இயேசுவிடம் திரும்பிச்சென்றனர்.

அவர்கள் தந்த பட்டியலைக் கண்ட இயேசு, புன்னகையோடு ஒரு சில பொட்டலங்களை அவர்களிடம் தந்தார். "இவை என்ன?" என்று அவர்கள் கேட்டபோது, இயேசு, "இவை அனைத்தும் விதைகள்" என்று சொன்னார். புரியாமல் அவரைப் பார்த்த இருவரிடமும் இயேசு, "இது கனவுகளின் கடை. நீங்கள் குறித்து வந்த கனவுகள் அனைத்திற்கும் தேவையான விதைகள், இந்தப் பொட்டலங்களில் உள்ளன. இவற்றை விதைத்து, வளர்ப்பது உங்கள் பொறுப்பு" என்று இயேசு சொன்னார். தாங்கள் விரும்பித் தேர்ந்தெடுத்த கனவுகள், 'ரெடிமேட்' நிலையில் கிடைக்காது, அவற்றை நட்டு வளர்ப்பது தங்கள் கடமை என்பதை இருவரும் உணர்ந்தனர்.

அவர்கள் கடையைவிட்டுக் கிளம்பும்போது, இயேசு அவர்களிடம், "இந்தக் கனவுகளை விதைப்பதும், வளர்ப்பதும் மட்டுமே உங்கள் பொறுப்பு. இவற்றின் பலன்களை, நீங்கள் அனுபவிக்காமல் போகலாம். ஆனால், அவற்றை, அடுத்தத் தலைமுறையினர் அனுபவிக்கப்போகின்றனர்" என்று சொல்லி அனுப்பினார்.

மிகத் தெளிவான, ஆழமான உண்மைகளைக் கூறும் உவமை இது. 'இன்ஸ்டன்ட்' உணவுவகைகள் உட்பட, அனைத்தும் 'ரெடிமேட்' வடிவத்தில் கிடைக்கும் இன்றைய உலகில், நம் கனவுகள் என்ற விதைகளை நட்டு, கண்ணும் கருத்துமாய் வளர்ப்பதற்கு, ஏராளமான பொறுமை தேவை. அத்தகையப் பொறுமை நமக்கு உள்ளதா என்பதை ஓர் ஆன்ம ஆய்வாக மேற்கொள்ளலாம்.

வசந்தம் கொணரும் மாற்றங்கள், பொறுமையாக, மிக, மிக மெதுவாக, கண்ணுக்குத் தெரியாத வண்ணம், பனிப் போர்வைக்குள் நிகழ்ந்ததால், அதன் வெளிப்பாடான தளிர்களையும், மலர்களையும் நாம் வசந்த விழாவாகக் கொண்டாட முடிகிறது. பனிக்குள் துவங்கிய மாற்றங்களையும் சேர்த்து கணக்கிட்டால், வசந்தம், மெதுவாக, பொறுமையாக, பல நாட்களாக வந்தவண்ணம் உள்ளது என்பதை உணரலாம். அதை மறந்துவிட்டு, அல்லது, அதை மறுத்துவிட்டு, அந்தப் பருவமாற்றம், சட்டென்று, மார்ச் 20, காலை 5:37 மணிக்கு வந்தது என்று சொல்வது, நம் பொறுமையின்மையையும், இயற்கையை அடக்கியாள விழையும் நம் ஆணவத்தையும் காட்டுகிறது! 

கோதுமை கதிர்
கோதுமை கதிர்

தவக்காலத்தின் உயிர் நாடியான மாற்றத்தை சிந்திக்கும்போது, நமக்குள்ளும், நம்மைச் சார்ந்திருப்போருக்குள்ளும் உருவாகும் மாற்றங்கள், ஒரே நாளில், ஓரிரவில் தோன்றுவதில்லை; மாற்றங்களைக் காண்பதற்கு பொறுமை மிக அவசியம் என்ற உண்மையை, முதலில் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். 

அடுத்ததாக, அன்பான, அமைதியான, உலகம் உருவாகவேண்டும் என்ற கனவு நம் அனைவருக்கும் உண்டு. இந்தக் கனவு, 'ரெடிமேட்' சரக்காக நம்மை வந்தடையாது. கடையின் உரிமையாளர் கடவுளே என்றாலும், அவர் நம் கனவுகளை, கடைச்சரக்கைப் போல், காகிதத்தில் சுற்றித் தரமாட்டார். அவர் தருவதெல்லாம் கனவு விதைகள். அந்த விதைகளை நட்டு, வளர்ப்பது நம் கடமை. நாம் நட்டு வளர்த்த விதைகளின் கனிகளை நாம் சுவைக்க முடியவில்லை என்றாலும், கனவுகளை நட்டோம், கண்ணும், கருத்துமாய் வளர்த்தோம் என்ற திருப்தியில் நாம் இவ்வுலகிலிருந்து விடைபெறும் பக்குவத்தை இறைவன் நமக்குத் தரவேண்டும் என்று மன்றாடுவோம்.

பலன்களை நாம் அனுபவிக்கவேண்டும் என்ற பேராசையின்றி, நல்ல கனவுகளை இவ்வுலகில் நட்டு, வளர்த்தால், நாமும், இயேசு சொன்னதுபோல், மிகுந்த விளைச்சலை அளிக்கும் கோதுமை மணிகளாக வாழ்ந்தவர்கள் என்ற பெருமையைப் பெறுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 March 2021, 11:35