தேடுதல்

Vatican News
“தம் ஒரே மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.” - யோவான் 3: 16 “தம் ஒரே மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.” - யோவான் 3: 16 

தவக்காலம் 4ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை

பாவங்களால் சிறைப்பட்ட உலகை மீட்பது எப்படி என்ற கேள்வியும், பரிதவிப்பும் எழுந்தபோது, இறைவன் அதற்கு விடை பகர்ந்தார். தன் மகனை, மனிதரில் ஒருவராக அனுப்பிவைத்தார்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

தவக்காலம் 4ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

2013ம் ஆண்டு, மார்ச் 13ம் தேதி, கர்தினால் ஹோர்கே மாரியோ பெர்கோலியோ அவர்கள், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ‘பிரான்சிஸ்’ என்ற பெயருடன், தன் பணியைத் துவக்கினார். இச்சனிக்கிழமையன்று, திருஅவையின் தலைமைப்பணியில் எட்டு ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, இறைவன், உடல், உள்ள நலன்களை வழங்கி, நிறைவாக ஆசீர்வதிக்க மன்றாடுவோம்.

தவக்காலத்தின் 4ம் ஞாயிறை, 'அகமகிழ்தல்' (Laetare) ஞாயிறெனக் கொண்டாடுகிறோம். இன்றையத் திருப்பலியின் வருகைப்பல்லவியில், எருசலேமுடன் இணைந்து அகமகிழவும், அக்களிக்கவும் நம்மை அழைக்கும் சொற்களின் அடிப்படையில், (காண்க எசாயா 66:10), இந்த ஞாயிறு, 'அகமகிழ்தல்' ஞாயிறு என்ற பெயரைப் பெற்றுள்ளது.

அகமகிழ்தல், (அகம் + மகிழ்தல்) அல்லது, அக்களித்தல் (அகம் + களித்தல்) என்ற இரு சொற்களிலும், 'அகம்' என்ற சொல் அடிப்படையானது. நமது அகம், அதாவது, நமது உள்ளம், நிறைவடையும்போது உருவாவதே, உண்மையான மகிழ்வு. இதற்கு மாறாக, உள்ளத்தில் வெற்றிடம், வெறுப்பு, வேதனை, ஆகியவை நிறைந்திருக்கும்போது, வெளிப்புறமாக சிரித்து, குதித்து, கும்மாளமிட்டு, மகிழ்வை வெளிப்படுத்துவது, போலியான மகிழ்வாக அமையும். தவக்காலத்தில், மன்னிப்பு, ஒப்புரவு ஆகிய அனுபவங்களால், நமது உள்ளங்கள் நிறைவடையும்போது உருவாகும் உண்மையான மகிழ்வைக் கொண்டாட, தாய் திருஅவை இன்று நம்மை அழைக்கிறார்.

மன்னிப்பினாலும், ஒப்புரவு அடைவதாலும் உருவாகும் உண்மையான மகிழ்வின் ஆழத்தைப் புரிந்துகொள்ள, நாம் ஒரு சிறைச்சாலைக்குச் செல்வோம்... சில ஆண்டுகளுக்கு முன், 'நியூ யார்க் டைம்ஸ்' செய்தித்தாளில், ஒரு சிறைச்சாலையை மையப்படுத்தி வெளியான ஒரு செய்தி, உண்மையான மகிழ்வைப் புரிந்துகொள்ளவும், இன்றைய நற்செய்தி சொல்லும் உண்மைகளை உணர்ந்துகொள்ளவும் உதவியாக இருக்கும். அமெரிக்காவின், கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஒரு சிறைக்கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு மாற்று முயற்சியைப் பற்றிய செய்தி அது.

அந்த கடுங்காவல் சிறைக்கூடத்தில் உள்ளவர்கள் அனைவரும், கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு, தண்டனை அனுபவிப்பவர்கள். அவர்களில் ஒருவர் Sacel Montgomery. போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையான Sacel அவர்கள், போதைப்பொருள் வாங்க பணம் கேட்டபோது, அதைத் தரமறுத்த தன் அண்ணியை பல முறை கத்தியால் குத்தி, கொலை செய்தவர். 25 ஆண்டுகளாக, அந்தக் கடுங்காவல் சிறையில் அவர் இருக்கிறார்.

2012ம் ஆண்டின் துவக்கத்தில், சிறை அதிகாரிகள் Sacel அவர்களிடம் ஒரு பொறுப்பைக் கொடுத்தனர். அவருக்கு மட்டுமல்ல... சிறையில், நல்ல உடல்நிலையில் இருந்த பலருக்கும், அந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அதே சிறையில், பல ஆண்டுகளாக அடைபட்டிருக்கும் ஒரு சில கைதிகள், Alzheimer's எனப்படும் நினைவுமறதி நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும் பொறுப்பு, Sacel அவர்களுக்கும், மற்ற கைதிகளுக்கும் கொடுக்கப்பட்டது. நோயுற்ற இந்த கைதிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், காலை முதல் மாலை வரை, இவர்கள் செய்தனர். உணவூட்டுதல், குளிப்பாட்டுதல், சக்கர நாற்காலியில் வைத்து அவர்களைத் தள்ளிச்செல்லுதல் என, பல உதவிகளை இவர்கள் செய்தனர். இந்தப் பணிகளால், கைதிகள் மத்தியில் உருவான தோழமை, அந்தச் சிறைக்கூடத்தில் வெளிப்பட்ட மகிழ்வு, அமைதி இவற்றைப்பற்றி அந்தச் செய்தி விளக்கமாகக் கூறியது.

சிறைக்கூடங்கள் என்றதுமே, குற்றம், தண்டனை, வெறுப்பு, கொடுமை, என்ற முற்சார்பு எண்ணங்களே (Prejudice) நம் மனதை அதிகம் ஆக்கிரமிக்கும். சிறைக்குள்ளும் கனிவு இருக்குமா? நிச்சயம் இருக்கிறது. மனித சமுதாயத்தை மேன்மைப்படுத்த அவசியமான கனிவு, பரிவு, பகிர்வு, சமத்துவம் ஆகிய பண்புகளை சிறையில் காணமுடியும் என்பதை, மும்பை, டலோஜா (Taloja)  சிறையில் இருக்கும் அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் நமக்கு உணர்த்தியுள்ளார். பழங்குடியினரின் நில உரிமைகளுக்காக போராடிவந்த அவர்மீது ஆத்திரமடைந்த இந்திய நடுவண் அரசு, அநீதியான, பொய்யான பழிகளை சுமத்தி, மும்பைச் சிறையில், கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக அவரை அடைத்துள்ளது.

கலிபோர்னியா சிறையில் நினைவுமறதி நோயினால் துன்புறுவோருக்கு, ஏனைய கைதிகள் உதவி செய்வதைப்போல், Parkinson's எனப்படும் நரம்புத்தளர்ச்சி நோயினால் துன்புறும் 84 வயதான அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களுக்கு, உணவூட்டுதல், குளிப்பாட்டுதல் போன்ற உதவிகளை, ஏனையக் கைதிகள் செய்வதாகவும், அவர்களுக்காக செபிக்கும்படியும், அருள்பணி ஸ்டான் அவர்கள், ஒரு மடலில் கூறியுள்ளார். அம்மடலில், தன் சிறை அனுபவத்தை ஒரு கவிதை வடிவில் அவர் பதிவுசெய்துள்ளார். “Prison life, a great leveller”, அதாவது, "அனைத்தையும் சமமாக்கும் சிறைவாழ்வு" என்று தலைப்பிடப்பட்டுள்ள அக்கவிதையில் கூறப்பட்டுள்ள உண்மைகள், சிறைகளைப்பற்றிய நம் எண்ணங்களை தூய்மையாக்குகின்றன.

அச்சுறுத்தும் இந்தச் சிறையின் கதவுகளுக்குப்பின், மிக அவசியமானவை தவிர,

மற்றெல்லா உடைமைகளும் அகற்றப்படுகின்றன

'நீ' என்பது முதலாகவும் 'நான்' என்பது அடுத்ததாகவும் மாறுகிறது

'நாம்' என்பதே இங்கு சுவாசிக்கப்படும் காற்று

எதுவும் என்னதில்லை எதுவும் உன்னதில்லை எல்லாமே நம்மது...

இதுதானே பொதுவுடைமைக் கோட்பாடு

இதோ, இங்கே, அத்தகையச் சமுதாயம் கட்டாயத்தின்பேரில் உருவாக்கப்பட்டுள்ளது

இந்நிலையை எல்லா மனிதர்களும் சுதந்திரமாக, விருப்பப்பட்டு அரவணைத்தால்

நாம் அனைவருமே, பூமித்தாயின் குழந்தைகளாவோம்

கலிபோர்னியா சிறையில், மும்பை டலோஜா சிறையில், இன்னும் உலகின் ஆயிரமாயிரம் சிறைகளில், உன்னதமான உண்மை நிகழ்வுகள், ஒவ்வொருநாளும் நடைபறுகின்றன. சிறைகளில் நடக்கும் கலவரங்களை, கொலைகளை தலைப்புச் செய்திகளாகத் தரும் நமது ஊடகங்கள், இத்தகைய ‘நற்செய்திகளை’ நமக்குச் சொல்வது, மிக, மிக அரிது.

கலிபோர்னியா சிறையில் நிகழ்ந்ததாக கூறப்பட்டுள்ள மாற்றம், இன்றைய நற்செய்திக்கு நம்மை அழைத்துச்செல்கிறது. குற்றம் புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள், அவர்களது வாழ்வில், தற்காலிகமான, மேலோட்டமான, மாற்றங்களைக் கொணரலாம். ஆனால், சிறைக்கூடங்களில், பரிவும், பாசமும், வெளிப்படும்போது, அவை, குற்றவாளிகளில், நிரந்தரமான மாற்றங்களை உருவாக்கி, அவர்கள் மீண்டும் மனிதர்களாக வாழ வழிசெய்துள்ளன என்பதை நாம் அறிவோம். இதையே, அவர்கள் அடையும் மீட்பு என நாம் கருதலாம்.

மீட்பு என்றதும், சட்டப்படி, தண்டனையிலிருந்து தப்பிப்பதை மட்டும் சொல்லவில்லை. சிலவேளைகளில், சிறையிலிருந்து விடுதலை கிடைக்காவிட்டாலும், சிறைக்குள்ளேயே அவர்கள் வாழ்வு பெருமளவு மாறியுள்ள உண்மைகளும் நாம் அறிந்ததே. இந்த வாழ்வு மாற்றம், அவர்களுக்குள்ளிருந்து வரலாம். அல்லது, வெளியிலிருந்து வரலாம். சிறைக்கு வெளியிலிருந்து, பார்வையாளர்களாக, அல்லது ஆலோசனை வழங்குபவர்களாகச் செல்வோர், பல்வேறு மேலான ஆலோசனைகளை வழங்கும்போது, சிறைக்குள் இருப்பவர்கள், "வெளியில இருந்துகிட்டு இப்படி பேசுறது ‘ஈசி’ங்க... நாங்க இருக்கிற நிலையில நீங்க இருந்து பாருங்க, அப்பத் தெரியும் எங்கப் பிரச்சனை, போராட்டம் எல்லாம்" என்று அவர்கள் சொல்லும் பதிலையும் நாம் கேட்டிருக்கிறோம்.

வெளியிலிருந்து வரும் போதனைகளால் பயனில்லையெனில், வேறு வழி என்ன? மற்றொரு வழியை, நாம் இவ்வாறு கற்பனைசெய்து பார்க்கலாம். குற்றமற்ற ஒருவர், சிறைப்பட்டோரைத் திருத்தவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், அவர்கள் மத்தியில் தானும் ஒரு கைதியாக வாழ முன்வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர்களில் ஒருவராகவே மாறிவிட்ட அவர், கைதிகள் மீது அன்பும், பாசமும் காட்டி, அவர்களை நல்வழிப்படுத்த முடியும். அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் பிரசன்னம், டலோஜா சிறையில், இத்தகையதொரு தாக்கத்தை உருவாக்கிவருகிறது என்பதை, நாம் நிச்சயம் நம்பலாம். அங்கிருக்கும் பல இளையோர், அவரிடம் மனம் திறந்து பேசிவருகின்றனர் என்பதை, அவர் பகிர்ந்துகொள்ளும் மடல்கள் வழியே புரிந்துகொள்ள முடிகிறது.

ஒருவர் தானே விருப்பப்பட்டு கைதியாக மாறமுடியும் என்பது, சட்டப்படி சாத்தியமா என்பது தெரியவில்லை. ஆனால், இதையொத்த ஓர் உண்மை, நம் மீட்பு வரலாற்றில் சாத்தியமானது. பாவங்களால் சிறைப்பட்ட உலகை மீட்பது எப்படி என்ற கேள்வியும், பரிதவிப்பும் எழுந்தபோது, இறைவன் அதற்கு விடை பகர்ந்தார். மனிதரின் மீட்பு மனிதரிடமிருந்தே வரவேண்டும் என்று தீர்மானித்தார். தன் மகனை, மனிதரில் ஒருவராக அனுப்பிவைத்தார். இந்த எண்ணத்தை வெளிப்படுத்தும் ஒரு விவிலிய வாக்கியம், இன்று, நமது நற்செய்தியில் பறைசாற்றப்பட்டுள்ளது. “தம் ஒரே மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.” (யோவான் 3: 16)

அடுத்தவர் மீது அன்பு கொள்வது, அடுத்தவருக்காக வாழ்வது, அடுத்தவரோடு வாழ்வது என்பதெல்லாம் அன்பின் பல பரிமாணங்கள். இவை அனைத்திலும் மிக உயர்ந்தது, அடுத்தவராகவே வாழ்வது. இதைத்தான் இந்த நற்செய்தி வாக்கியம் உணர்த்துகிறது. அன்பின் ஆழத்தைச் சொல்லும் ஓர் இலக்கணம் இது.

அன்பின் ஆழத்தைக் கூறும் பல நூறு கதைகளைக் கேட்டிருக்கிறோம். இந்தக் கதைகளில் சொல்லப்படுவதெல்லாம் ஒரு சில நாட்களில், மணித்துளிகளில் காட்டப்படும் ஆழமான அன்பு உணர்வுகள். இந்த உணர்வுகள் உண்மையானவை, உன்னதமானவைதான். ஆனால், கலிபோர்னியா சிறையில், டலோஜா சிறையில், ஒவ்வொரு நாளும், திரும்பத் திரும்ப நிகழும் அன்புச் செயல்கள், கதைகளாக, செய்திகளாக வெளிவருவதில்லை. அதேபோல், அன்பை வெளிப்படுத்தும் எத்தனையோ நிகழ்வுகள், நம் தனிப்பட்ட வாழ்விலும், நம் குடும்பங்களிலும், ஒவ்வொரு நாளும், நிகழ்ந்தவண்ணம் உள்ளன. இவை, கதைகளாகவோ, செய்திகளாகவோ மாறுவதில்லை.

'அகமகிழ்தல்' ஞாயிறன்று, நேரம் ஒதுக்கி, நமது குடும்பங்களில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை அசைபோடுவோம். ஒவ்வொரு நாளும் நடக்கும் இந்தச் சின்னச் சின்ன நிகழ்வுகளில் சொல்லாமல் சொல்லப்படும் உன்னத அன்பு உணர்வுகளை இன்று அசைபோடுவோம்.

பல குடும்பங்களில், உடல்நலம், மனநலம் குன்றிய குழந்தைகள், வாழ்க்கைத் துணை, பெற்றோர் என்று, எத்தனையோ பேருக்கு, ஒவ்வொரு நாளும், தாய், தந்தை, கணவன், மனைவி, உடன்பிறந்தோர் என்று, ஒவ்வொருவரும் செய்துவரும் பணிவிடைகள் அற்புதமானவை. பத்து, இருபது, முப்பது, நாற்பது என்று, பல ஆண்டுகள், ஒவ்வொரு நாளும் தொடரும் இந்த அன்புப் பணிகளை, கதைகளாக, ஒரு சில பக்கங்களில் சொல்லிவிடமுடியாது. வெளி உலகிற்கு தெரியாத வண்ணம், ஒவ்வொரு நாளும், அன்புப் பணியில் தங்களையே தகனமாக்கும் ஆயிரமாயிரம் அன்பு இதயங்களுக்காக, இறைவனிடம் இன்று சிறப்பாக நன்றி சொல்வோம்.

'அன்பு' என்ற இந்த உன்னதமான உண்மைக்கு, பல விபரீதமான இலக்கணங்களைப் புகட்டிவரும் உலகப் போக்கையும் இன்று சிந்திக்காமல் இருக்கமுடியவில்லை. உண்மையான அன்பை, மகிழ்வை வெளிச்சத்திற்கு வரவிடாமல் தடுத்து நிறுத்தும் இருளைக் குறித்து இன்றைய நற்செய்தியின் பிற்பகுதி இவ்வாறு சொல்கிறது:

யோவான் 3: 19-20

ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர்... தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை.

ஒளியை நெருங்க அஞ்சி, இருளில் வாழப் பழகிக்கொண்டால், தீமையில் ஊறிக்கிடக்கும் நம் எண்ணங்கள் சரியென்றே தோன்றும். இதற்கு நேர் மாறாக, உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள். (யோவான் 3: 21) என்று இன்றைய நற்செய்தியின் இறுதியில் ஓரு சவாலை, இறைமகன் கிறிஸ்து நமக்கு விடுக்கிறார்.

ஒளியாக விளங்கும் கிறிஸ்துவை நெருங்கிச் செல்ல, அவரைப்போல் ஒளியாக மாற, நமக்கு விடுக்கப்படும் அழைப்பை ஏற்கப்போகிறோமா? அல்லது இருளில் நம்மேயே புதைத்துக்கொண்டு, சுகம் காணப்போகிறோமா? எது நம்மை உண்மையில் அகமகிழ்வோடு வாழவைக்கும் என்ற ஆன்ம ஆய்வை மேற்கொள்ள, தவக்காலம் தகுந்ததொரு காலம்.

13 March 2021, 15:24