தேடுதல்

Vatican News
கொழும்புவில் தாக்குதலுக்கு உள்ளான புனித அந்தோனியார் திருத்தலத்திற்கு முன் நினைவு போராட்டம் கொழும்புவில் தாக்குதலுக்கு உள்ளான புனித அந்தோனியார் திருத்தலத்திற்கு முன் நினைவு போராட்டம்  (AFP or licensors)

முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களைத் தடைசெய்க, இலங்கை திருஅவை

இலங்கைக்குள் கடத்திவைக்கப்பட்டுள்ள பல்வேறு விதமான ஆயுதங்களையும், தீவிரவாதிகளின் பயங்கரவாதச் செயல்களை அதிகரிக்க உதவும் அனைத்தையும் பறிமுதல் செய்ய தலத்திருஅவை அரசுக்கு அழைப்பு

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களைத் தடைசெய்யுமாறு, அந்நாட்டு கத்தோலிக்கத் தலைவர்கள், அரசுக்கு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளனர்.

நாட்டிற்குள் கடத்திவைக்கப்பட்டுள்ள பல்வேறு விதமான ஆயுதங்களையும், தீவிரவாதிகளின் பயங்கரவாதச் செயல்களை அதிகரிக்க உதவும், அசையும் மற்றும், அசையாச் சொத்துக்கள், நிதி வளங்கள் போன்றவற்றையும் பறிமுதல் செய்யுமாறு, தலத்திருஅவை, இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளது.

மார்ச் 29, இத்திங்களன்று, கொழும்பு உயர்மறைமாவட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெறுப்பை விதைக்கும் போதகர்கள் மற்றும், தீவிரவாதிகளுக்கு உதவும் வெளிநாட்டு நன்கொடையாளர்கள் ஆகியோரை, நாட்டைவிட்டு வெளியேற்றுமாறு, இலங்கை அரசு வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு உயர்மறைமாவட்ட பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித், துணை ஆயர்கள் மாக்ஸ்வெல் சில்வா, ஜே.டி.அந்தோனி, ஆன்டன் இரஞ்சித் ஆகிய நால்வரும் கையெழுத்திட்டுள்ள இவ்வறிக்கையில், கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவன்று பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டு ஈராண்டுகள் ஆகியும், இன்னும், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்த இரண்டாம் ஆண்டு நிறைவுக்குள், அரசு தங்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ள இத்தலைவர்கள், இந்த பயங்கரவாதத் தாக்குதல், கத்தோலிக்கரை மட்டுமல்ல, இந்துக்கள், முஸ்லிம்கள், புத்த மதத்தினர், மலேசியர்கள், வெளிநாட்டவர், தமிழர், சிங்களவர், Burgher போன்ற பலரையும் அழித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையின் தேசிய Thowheed Jamath (NTJ) இஸ்லாமிய தீவிரவாத அமைப்போடு தொடர்புடைய ஒன்பது தற்கொலை குண்டுதாரிகள், 2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள், மற்றும், மூன்று ஆடம்பர பயணியர் விடுதிகளைக் குறிவைத்து தாக்குதல்களை நடத்தினர். இவற்றில் 269 பேர் உயிரிழந்தனர், மற்றும், 500க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். (UCAN)

31 March 2021, 13:40