தேடுதல்

Vatican News
மியான்மார் இராணுவ அடக்குமுறைக்கு எதிராக யாங்கூனில் அமைதி போராட்டம் - மார்ச் 12, 2021 மியான்மார் இராணுவ அடக்குமுறைக்கு எதிராக யாங்கூனில் அமைதி போராட்டம் - மார்ச் 12, 2021  (AFP or licensors)

மியான்மார் மக்களுடன், தென் கொரிய கிறிஸ்தவர்கள் ஒருமைப்பாடு

மியான்மாரில், அமைதியான முறையில் போராடிவரும் மக்கள் மீது இராணுவம் நடத்திய அடக்குமுறையில் இதுவரை குறைந்தது 70 பேர் உயிரிழந்துள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மியான்மாரில் இடம்பெறும் இராணுவ அடக்குமுறை மற்றும், வன்முறைகளுக்கு எதிரான தங்களின் கண்டனங்களை வெளியிட்டுள்ள, தென் கொரிய கத்தோலிக்க ஆயர் பேரவையும், கிறிஸ்தவ சபைகள் அவையும், அந்நாட்டில் மக்களாட்சி கொணரப்படுமாறு அழைப்பு விடுத்துள்ளன.

மியான்மார் கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்களுக்கு, தனது தோழமையுணர்வைத் தெரிவித்து மடல் எழுதியுள்ள, தென் கொரியாவின் சோல் பேராயர், கர்தினால் Andrew Yeom Soo-jung அவர்கள், அந்நாட்டிற்கு ஐம்பதாயிரம் டாலரை, நன்கொடையாகவும் அனுப்பியுள்ளார்.

இராணுவ ஆட்சிக்கு அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களுக்கு எதிராக இடம்பெறும் அடக்குமுறைகளும், வன்முறையும் தங்களுக்கு மிகுந்த கவலையை அளித்துள்ளது என்றும், துன்புறும் மக்களோடு தங்களின் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கின்றோம் என்றும், கர்தினாலின் மடல் கூறுகின்றது.

மேலும், மியான்மார் நாட்டிற்கு எதிராக, பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு, தென் கொரிய கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள், ஐக்கிய நாடுகள் நிறுவனத்திற்கு விண்ணப்பம் ஒன்றையும் விடுத்துள்ளனர்.

இதற்கிடையே, பிலிப்பீன்ஸ் நாட்டில் இயேசு சபையினர் நடத்தும் ஐந்து பல்கலைக்கழகங்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மியான்மாரில் வன்முறை முடிவுக்குக் கொண்டுவரப்படுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மியான்மாரில், கடந்த பிப்ரவரி முதல் தேதி, இராணுவம் மேற்கொண்ட ஆட்சிக்கவிழ்ப்பை எதிர்த்து, அமைதியான முறையில் போராடிவரும் மக்கள் மீது இராணுவம் நடத்திய அடக்குமுறையில், இதுவரை, குறைந்தது, எழுபது பேர் உயிரிழந்துள்ளனர் என்று, ஐ.நா. நிறுவனம் கூறியுள்ளது. (AsiaNews /UCAN)

13 March 2021, 15:34