தேடுதல்

Vatican News
பாத்திமா மரியன்னை திருவுருவம் பாத்திமா மரியன்னை திருவுருவம்  (Lazaro Gutierrez fotografo della archidiocesi di Managua )

போர்த்துக்கல்லின் பாத்திமா திருத்தலம் மீண்டும் திறப்பு

ஐரோப்பாவில் கொரோனா நோய்க்குப் பலியானவர்களின் ஆன்ம இளைப்பற்றிக்கென, ஒரு நாளின் அனைத்துத் திருப்பலிகளும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

ஐரோப்பாவில் மீண்டும் பரவிவரும் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக இவ்வாண்டு சனவரி 23ம் தேதி முதல், திருப்பயணிகளுக்கு மூடப்பட்டிருந்த போர்த்துக்கல் நாட்டின் பாத்திமா அன்னை திருத்தலம், இவ்வாரம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய 50 நாள் இடைவெளிக்குப்பின் இத்திங்கள் முதல் பொதுமக்களுக்கென திறக்கப்பட்டுள்ள இத்திருத்தலத்தில், மார்ச் 16, இச்செவ்வாயன்று நிறைவேற்றப்பட்ட ஆறு திருப்பலிகளும், ஐரோப்பாவில் கொரோனா நோய்க்குப் பலியானவர்களின் ஆன்ம இளைப்பற்றிக்கென, ஐரோப்பிய ஆயர்கள் பேரவை கேட்டுக்கொண்டதன்பேரில் ஒப்புக்கொடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்றால் ஐரோப்பாவில் 8 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில்,  அவர்களுக்கென, இச்செவ்வாய்க்கிழமையன்று, பாத்திமா அன்னை திருத்தலத்தில் அனைத்து திருப்பலிகளும் ஒப்புக்கொடுக்கப்பட்டதாகவும், போர்த்துக்கல்லின் அனைத்து துறவு சபைகளும் அன்னைமரியா திருத்தலத்தோடு இணைந்து, இந்நோய்க்குப் பலியானோரின் ஆன்ம இளைப்பற்றிக்காக இந்நாளில் செபித்தனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தோர், மற்றும், அவர்களின் குடும்பங்கள், நோயுற்றுள்ளோர், நலப்பணியாளர்கள், சுயவிருப்பப் பணியாளர்கள் என, அனைவருடனும் தங்கள் ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் விதமாக, ஐரோப்பிய திருஅவைகளின் இந்த முயற்சி உள்ளது என்று கூறிய பாத்திமா திருத்தல அருள்பணி Miguel Sottomayor அவர்கள், இதுவரை, விசுவாசிகளின் நேரடி பங்கேற்பு இல்லாமல், திருப்பலியை, இணையம் வழியாக நிறைவேற்றிக் கொண்டிருந்த நிலை தற்போது மாறி, திருப்பயணிகளை திருத்தலத்திற்குள் வரவேற்க முடிந்தது மகிழ்ச்சியைத் தருகின்றது என உரைத்தார்.

16 March 2021, 14:53