தேடுதல்

Vatican News
ஈராக் திருத்தூதுப் பயணம் ஈராக் திருத்தூதுப் பயணம்  (AFP or licensors)

ஈராக் திருத்தூதுப் பயணம், உலகிற்கு முக்கியமான தருணம்

திருத்தந்தையின் ஈராக் திருத்தூதுப் பயணம், உரையாடல் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தது - கர்தினால் Miguel Ángel Ayuso

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈராக் நாட்டுக்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணம், உலகிற்கு முக்கியமானத் தருணம் என்று பாராட்டியுள்ளதோடு, இப்பயணம், மனிதகுல உடன்பிறப்புநிலையின் விழுமியங்கள் ஊக்குவிக்கப்படுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முக்கியமான முயற்சி என்று, மனித உடன்பிறப்புநிலையின் உயர் அவை வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகின்றது.

ஈராக்கில் திருத்தந்தை மேற்கொண்ட இந்த நான்கு நாள்கள் பயணத்தின்போது, பாக்தாத், நஜாஃப், எர்பில், மோசூல், ஊர் ஆகிய நகரங்களுக்குச் சென்ற திருத்தந்தை, ஊர் நகரில் நடைபெற்ற பல்சமய கூட்டத்தில், மனித உடன்பிறப்புநிலையை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு, அனைத்து மத நம்பிக்கையாளர்களும், மனித உடன்பிறப்புநிலையின் மதிப்பீடுகளுக்கு உயிர் கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஈராக் திருத்தூதுப் பயணத்தில் திருத்தந்தையோடு பயணித்தவரும், திருஅவையின், பல்சமய உரையாடல் அவையின் தலைவரும், மனித உடன்பிறப்புநிலையின் உயர் அவையின் உறுப்பினருமான கர்தினால் Miguel Ángel Ayuso அவர்கள் கூறுகையில், திருத்தந்தையின் இப்பயணம், உரையாடல் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

மனித உடன்பிறப்புநிலையின் உயர் அவையின் உறுப்பினரும், Al-Azhar பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான Mohamed al-Mahrasawi அவர்கள் கூறுகையில், பல ஆண்டுகள் போர் மற்றும், அழிவுகளுக்குப்பின், ஈராக் மக்களின் காயங்களைக் குணப்படுத்துவதாக, திருத்தந்தையின் ஈராக்  திருத்தூதுப் பயணம் அமைந்திருந்தது என்று கூறியுள்ளார்.

அனைத்து ஈராக்கியர்கள் மற்றும், அப்பகுதியின் அனைத்து மக்களுக்கு இடையே குடியுரிமை மற்றும், நல்லிணக்கத்தின் விழுமியங்களைச் சகித்துக்கொள்வதற்கு விடுக்கும் அழைப்பாக, திருத்தந்தையின் ஈராக் திருத்தூதுப் பயணம் இருந்தது என்றும், பேராசிரியர் al-Mahrasawi அவர்கள் கூறியுள்ளார்.

09 March 2021, 15:25