தேடுதல்

துவக்க கால திருத்தந்தையர் வாழ்ந்த இலாத்ரன் மாளிகை துவக்க கால திருத்தந்தையர் வாழ்ந்த இலாத்ரன் மாளிகை 

திருத்தந்தையர் வரலாறு – பேரரசரின் திடீர் மனமாற்றம்

திருத்தந்தையின் கப்பல், வழியில் எங்கெங்கு நின்றதோ, அங்கெல்லாம் ஒரு பேரரசருக்குரிய மரியாதையை அங்குள்ள அதிகாரிகளும் மக்களும் திருத்தந்தைக்கு கொடுக்க வேண்டும் என கட்டளையிட்டார் பேரரசர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருத்தந்தை செர்ஜியுஸ் அவர்களின் மரணத்தோடு, கடந்த வாரம் உங்களிடமிருந்து விடை பெற்றோம். திருத்தந்தை செர்ஜியுஸ் அவர்களுக்குப்பின் 701ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ந்தேதி பொறுப்பேற்ற திருத்தந்தை 6ம் யோவான், இத்தாலியர்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளானபோது, போர்க்கைதிகளை விடுவிக்க  திருஅவையின் பணத்தை கொடுத்தனுப்பி, அவர்களை மீட்டார். திருத்தந்தை 6ம் யோவான் 705ம் ஆண்டு ஜனவரி 11ல் காலமானார். அடுத்து, 705ம் ஆண்டு மார்ச் முதல் தேதி பொறுப்பேற்ற திருத்தந்தை 7ம் யோவான் அவர்கள், முந்தைய திருத்தந்தை 6ம் யோவான்போல், கிரேக்கத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் அறிவாற்றல் மிகுந்தவராகவும், பேச்சுத்திறன் கொண்டவராகவும், பக்தி நிறைந்தவராகவும் விளங்கினார். அதேவேளை, பேரரசரின் நியாயமற்ற கட்டளைகளை உறுதியுடன் எதிர்த்தார் இத்திருத்தந்தை. 707ம் ஆண்டு அக்டோபர் 18ம்தேதி திருத்தந்தை 7ம் யோவான் இறைபதம் சேர்ந்தார்.

திருத்தந்தை 7ம் யோவான் அவர்களுக்குப்பின் தேர்ந்தெடுக்கப்பட்டு, 708ம் ஆண்டு ஜனவரி 15ந்தேதி பதவியேற்ற திருத்தந்தை Sisinnius அவர்கள், மூன்று வாரங்களே அப்பொறுப்பிலிருந்தார். சிரியாவை பூர்வீகமாக் கொண்ட இவர், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். தனக்குத்தானே உணவை ஊட்ட முடியாத நிலையில்கூட இருந்தார். ஆனால், மிகவும் நேர்மையானவராக, அதேவேளை, திருத்தந்தையாக பதவியேற்பதற்கு முன்னர்கூட நகர் மக்களின் நலனில் மிகவும் ஆர்வமுடையவராக இருந்தார்.

இந்த 3 திருத்தந்தையர்களின் குறுகிய வரலாறுகளைத் தொடர்ந்து, அடுத்த திருத்தந்தையாக, அதாவது, திருஅவையின் 88வது திருத்தந்தையாக பொறுப்பேற்றுக்கொண்டவர் திருத்தந்தை கான்ஸ்டன்டைன்.

708ம் ஆண்டு மார்ச் மாதம் 25ந்தேதி பதவியேற்ற இவர், தன் வழிநடத்தல் காலத்தில் பல்வேறு பிரச்சனைகளை பலமுனைகளில் இருந்தும் சந்திக்க வேண்டியிருந்தது. இவரின் 7 ஆண்டுகால ஆட்சியின் முதல் பாகத்தில் உரோம் நகரை பெரும் பஞ்சம் தாக்கியது. மேலும், ரவென்னா ஆயர் திருத்தந்தைக்கு அடிபணிய மறுத்ததாலும் பிரசனைகள் தொடர்ந்தன. நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம், உரோம் நகரை தன் கீழ் கொண்டிருந்த கான்ஸ்டான்டிநோபில்  பேரரசின் பிரதிநிதி ரவென்னாவிலிருந்து செயல்பட்டார் என்று. எவ்வாறு, பேரரசர் வாழ்ந்த இடமான கான்ஸ்டான்டிநோபிலின் திருஅவை உரோம் நகரோடு அவ்வப்போது முரண்பாடு கண்டுவந்ததோ, அதுபோல் பேரரசரின் பிரதிநிதி வாழ்ந்த ரவென்னாவின் ஆயரும் திருத்தந்தையின் கட்டளைகளுக்கு பணிய மறுத்தது அவ்வப்போது இடம் பெற்றது. திருத்தந்தை கான்ஸ்டன்டைன் காலத்தில் இருந்த ரவென்னா ஆயர் பெலிக்ஸ், இத்தகைய  ஒரு மோதல் போக்கை முதலில் கடைப்பிடித்தாலும், பின்னர் திருத்தந்தையை முழமையாக ஏற்றுக்கொண்டார்.

   692ம் ஆண்டு பேரரசர் இரண்டாம் ஜஸ்டினியன் தலைமையின்கீழ், கீழை வழிபாட்டுமுறை ஆயர்கள் கூடி எடுத்த Trullan சங்கத்தின் தீர்மானங்கள் குறித்தும் அதை திருத்தந்தை செர்ஜியுஸ் அவர்கள் ஏற்க மறுத்தது குறித்தும் கடந்த வாரம் கண்டோம். இவ்வவையில் 102 விதிமுறைகள் நிறைவேற்றப்பட்டன. இவ்வாறு நிறைவேற்றப்பட்டவைகளுள் பலவும் உரோமையத் திருஅவையின் படிப்பினைகளுக்கு எதிராக இருந்தன. உதாரணமாக, அருள்பணியாளர்கள் திருமணம் புரியக்கூடாது என்ற கட்டுப்பாடு, கிரேக்க திருஅவைக்கு தளர்த்தப்பட்டது. கான்ஸ்டான்டிநோபில் முதுபெரும் தந்தை, உரோமைய ஆயரின் அதிகாரத்திற்கு உட்படாதவராய் தனிச்சுதந்திரம் பெற்றவராக செயல்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த அவையில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் செயல்படுத்த ஆவல் கொண்டார் பேரரசர் இரண்டாம் ஜஸ்டினியன். ஆனால் இருபறமும் இழுபறி நீடித்ததால், தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, திருத்தந்தையை கான்ஸ்டான்டிநோபிலுக்கு வரும்படி பணித்தார் பேரரசர். திருத்தந்தையும் 709ம் ஆண்டு, கப்பலில் கான்ஸ்டான்டிநோபில் நோக்கி பயணம் செய்தார். பேரரசரின் மனதில் என்ன இருந்தது என தெரியவில்லை. ஏனெனில், திருத்தந்தையின் கப்பல், வழியில் எங்கெங்கு கரையில் ஓய்வெடுக்க நின்றதோ, அங்கெல்லாம் ஒரு பேரரசருக்குரிய மரியாதையை அங்குள்ள அதிகாரிகளும் மக்களும் திருத்தந்தைக்கு கொடுக்க வேண்டும் என கட்டளையிட்டார் அவர். கொடூரமானவர் என அறியப்பட்டிருந்த பேரரசர் ஜஸ்டினியன், திருத்தந்தையை தன் மாளிகையில் வரவேற்றுச் செய்த முதல் காரியம் என்ன தெரியுமா? அப்படியே நெடுஞ்சாண்கிடையாய் திருத்தந்தை கான்ஸ்டன்டைனின் காலில் விழுந்து முத்தி செய்தார். அது மட்டுமல்ல, திருஅவையிடமிருந்து பறிக்கப்பட்ட அனைத்து சலுகைகளையும் திருப்பிக் கொடுப்பதாக அறிவித்தார். யாரும் எதிர்பாராத ஒரு பெரும் மாற்றம் இடம்பெற்றது. அனைவருக்கும் ஆச்சரியம் தந்த நிகழ்ச்சி அது. பேரரசரின் இந்த செய்கை, திருத்தந்தையையும் சிறிது விட்டுக் கொடுக்கும் மன நிலைக்குத் தள்ளியது. உண்மை விசுவாசம், மற்றும் நன்னெறி தொடர்புடைய திருஅவை  படிப்பினைகளை எக்காலத்திலும் விட்டுக் கொடுக்க முடியாது என்ற பாப்பிறை, இவை தவிர ஏனைய மாற்றங்களுக்கு தான் இசைவு தருவதாக அறிவித்தார். ஆகவே Trullan அவையில் நிறைவேற்றப்பட்ட 102 விதிகளுள் பலவற்றிற்கு திருத்தந்தையின் ஒப்புதல் பெற்ற பேரரசர், அதனால் மனநிறைவும் அடைந்தார். 711ம் ஆண்டு அக்டோபர் மாதம் உரோமைக்குத் திரும்பினார் திருத்தந்தை கான்ஸ்டன்டைன். சிறிது காலத்திலேயே Philippicus Bardanes என்பவரால் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டார் பேரரசர் இரண்டாம் ஜஸ்டினியன். புதிய பேரரசர்  Philippicus திருஅவையுடன் மோதல் போக்கைக் கடைபிடித்தார். திருஅவையின் பல்வேறு அவைகளின் தீர்மானங்களையோ, படிப்பினைகளையோ ஏற்க மறுத்தார். உரோமை மக்களும் பதிலடி கொடுத்தனர். அவர் சிலையை பேரரசர்களின் சிலைகளின் வரிசையில் நிறுவ மறுத்தனர். கோவில் திருப்பலி ஜெபங்களில் பேரரசர் பெயரைச் சொல்லி செபிப்பதை நிறுத்தினர். இதனால் உரோமைய மக்களைத் தண்டிக்க தன் பிரதிநிதியை அனுப்பினார் பேரரசர்  Philippicus. ஆனால் உரோமையர்கள் தப்பிவிட்டனர். ஏனெனில் இந்த காலகட்டத்தில் அனஸ்தாசியுஸ் என்பவர் Philippicusன் ஆட்சியை கவிழ்த்து, அரியணை ஏறினார். ஏறிய உடனேயே திருத்தந்தைக்கு கடிதம் எழுதி உரோமைய திருஅவையுடனான தன் விசுவாசத்தை வெளிப்படுத்தினார். . கான்ஸ்டான்டிநோபில் முதுபெரும் தந்தை யோவானும் திருத்தந்தைக்கு கடிதம் எழுதி, தான் உரோமைய தலைமைப் பீடத்தை எவ்வித முன்நிபந்தனைகளும் இன்றி ஏற்பதாக அறிவித்தார். எல்லாமே ஒரு சுமுகமான முடிவுக்கு வந்தது. இத்தகைய எதிர்பாராத வெற்றிகளை, தன் காலத்தில் கண்ட திருத்தந்தை கான்ஸ்டன்டைன் 715ம் ஆண்டு ஏப்ரல் 9ந்தேதி இறைபதம் சேர்ந்தார்.

   இவருக்குப் பின் 715ம் ஆண்டு திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் புனித இரண்டாம் கிரகரி. இவரிலிருந்து நம் பயணத்தை அடுத்த வாரம் தொடர்வோம்.

24 March 2021, 16:24