தேடுதல்

திருத்தந்தையர்களின் மறைமாவட்ட பெருங்கோவில் - ஜான் இலாத்ரன் திருத்தந்தையர்களின் மறைமாவட்ட பெருங்கோவில் - ஜான் இலாத்ரன் 

திருத்தந்தையர் வரலாறு – மன்னர்களுடன் திருஅவையின் உறவு

கிரேக்கர்களுக்கும் லொம்பார்தியர்களுக்கும் இடையே இத்தாலிய மக்கள் நசுக்கப்பட்டபோது, அவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர், புனித திருத்தந்தை இரண்டாம் கிறகரி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருத்தந்தையர்களின் சுருக்கமான வரலாறுகளை நோக்கிவந்த நாம், இன்று மூன்று திருத்தந்தையர்களின் சுவையான வரலாற்றைக் காண்போம்.

கி.பி.715ம் ஆண்டு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் புனித இரண்டாம் கிறகரி. இளவயதிலேயே உரோமைத் திருஅவையின் இசைக்கல்விக் கூடத்தில் பயின்றார் இவர். அருள்பணியாளரானபோது, உரோமைத் திருஅவை நூலகத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். திருஅவையின் விதிமுறைகள் குறித்து பேரரசர் இரண்டாம் ஜஸ்டீனியனுடன் விவாதிக்க, திருத்தந்தை Constantine அவர்கள் சென்றபோது, அவருடன் சென்று, பேரரசரின் கேள்விகளுக்கு சரியான விளக்கம் கொடுத்து, திருஅவையின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியது, அப்போது தியாக்கோனாக இருந்த புனித இரண்டாம் கிறகரியே. இவர் திருத்தந்தையாக பதவி ஏற்றபோது செய்த முதல் காரியம், உரோம் நகர் காவல் சுவரை சீர்படுத்தியதுதான். ஏனெனில், மத்திய தரைக்கடல் பகுதியின் இஸ்லாமியர்கள் உரோம் நகரை அழிக்கலாம் என்ற அச்சம் அப்போது நிலவிவந்தது. ஆனால், இந்த சீரமைப்பை அவரால் நிறைவுசெய்ய முடியவில்லை. ஏனெனில், டைபர் நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுற்றுச் சுவர் சீரமைப்புப்பணி பாதிக்கப்பட்டது.

ஜெர்மனியின் Bavaria பகுதியின் மனமாற்றத்திற்கென, நற்செய்தியை அறிவிக்க புனித பொனிபாசை அங்கு அனுப்பியவர் திருத்தந்தை இரண்டாம் கிறகரியே. கிரேக்க பேரரசர் மூன்றாம் லியோ, இத்தாலியர்கள் மீது புதிய வரிச்சுமைகளைச் சுமத்தியபோது துணிந்து எதிர்த்தவரும் இத்திருத்தந்தையே. அரசியல் சதுரங்க ஆட்டத்தில் இத்திருத்தந்தைக்கு எதிராக பல சதிவலைகள் பின்னப்பட்டன. ஆனால், அனைத்திலும் இறைத்துணையுடன் வெற்றிகண்டார் புனிதரான இத்திருத்தந்தை. கிரேக்கர்களுக்கும் லொம்பார்தியர்களுக்கும் இடையே இத்தாலிய மக்கள் நசுக்கப்பட்டபோது, திருத்தந்தை அவர்களுக்காக முதலில் குரல் கொடுப்பவராக இருந்தார். இவ்வுறுதி நிறைந்த திருத்தந்தை, 731ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இறைபதம் சேர்ந்தார். இவரது உடல் புனித பேதுரு பெருங்கோவிலில் அடக்கம் செய்யப்பட்டது.

திருஅவை என்ற தொன்மை வாய்ந்த ஆலமரத்தின் 90வது விழுதாக உதித்தார், திருத்தந்தை 3ம் கிறகரி. 731 முதல் 741வரை, 11 ஆண்டுகளுக்கு, 3 அல்லது 4 மாதங்கள் குறைய திருஅவையை வழிநடத்திச் சென்ற இத்திருத்தந்தையின் தேர்வு கொஞ்சம் வித்தியாசமாகவே இருந்தது. திருத்தந்தை இரண்டாம் கிறகரி இறந்து, அவரின் உடல் அடக்கம் செய்யப்படுவதற்காகப் பவனியாய் எடுத்துச் செல்லப்பட்டபோது, மக்கள் கூட்டம் திருத்தந்தை 3ம் கிறகரியின் பெயரைச் சொல்லி, இவரே நம் திருத்தந்தை என தேர்ந்துகொண்டது. ஏனெனில் மிகச்சிறந்த கல்வியாளராகவும், புனிதம் நிறைந்தவராகவும், ஏற்கனவே அனைவராலும் அறியப்பட்டவராகவும் இருந்தார் இத்திருத்தந்தை.

இத்திருத்தந்தையும் மன்னர் 3ம் லியோவின் முரட்டுத்தனமான நடவடிக்கைகளால் சில பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. திருஉருவங்களை வணங்கக்கூடாது, திருப்பண்டங்களை புனிதப் பொருட்களாக போற்றி பாதுகாக்கக் கூடாது, என்ற மன்னரின் கட்டளைகளை, முந்தைய திருத்தந்தையைப்போல், இத்திருத்தந்தை 3ம் கிறகரியும் எதிர்த்ததால், கலாபிரியா, மற்றும், சிசிலியில் இருந்த திருஅவை சொத்துக்கள் அரசரால் பலவந்தமாக எடுத்துக்கொள்ளப்பட்டன. இத்தாலியில் திருத்தந்தையர்கள் கொண்டிருந்த பல நிர்வாக அதிகாரங்கள், அரசரால்  கான்ஸ்தாந்திநோபிள் முதுபெரும்தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால், அதைப்பற்றி எல்லாம் அதிகம் கவலைப்படாத திருத்தந்தை, இறைவன் முன்னிலையில் தனக்கு எது நல்லதெனத் தெரிகிறதோ அதையே ஆற்றிவந்தார். மேலும், ஜெர்மன் நாட்டை மனந்திருப்புவதில் வெற்றி கண்டுவந்த புனித பொனிபாசுக்கு துணையாக, அப்புனிதரின் உறவினரான Willibaldஐயும் அனுப்பிவைத்தார். உரோம் நகரைச்சுற்றி காவல் சுவர் அமைக்கவேண்டும் என்று, முந்தைய திருத்தந்தையர்கள் துவக்கிய பணி, இவராலேயே நிறைவுக்கு கொணரப்பட்டது.

திருஅவையின் 91வது திருத்தந்தையாக 741ம் ஆண்டு தேர்வுசெய்யப்பட்டார் திருத்தந்தை சக்கரியாஸ். இவரும் அனைவரின் ஒருமித்த குரலில் எவ்வித காலதாமதமும் இன்றி தேர்வு செய்யப்பட்டவர். இவர், தான் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் தன் பிரதிநிதிகள் வழியாக, கான்ஸ்தாந்திநோபிள் பேரரசர் 5ம் கான்ஸ்டன்டைனுக்கு, தன் தேர்வு குறித்து தெரிவித்து கடிதம் அனுப்பினார். பேரரசர் 3ம் லியோவின் மகனே 5ம் கான்ஸ்டன்டைன். உரோமிலிருந்து கான்ஸ்தாந்திநோபிளுக்கு கடிதம் வந்து சேருமுன் ஆட்சி மாறியிருந்தது. அதாவது, 5ம் கான்ஸ்டன்டைனின் சகோதரி கணவரான Artabasdus என்பவர், பேரரசருக்கு எதிராக எழும்பி, தன் ஆட்சியை கான்ஸ்தாந்திநோபிளில் நிறுவிக்கொண்டார். ஆகவே, வரலாற்றுக் குறிப்புகளில் இக்கடிதம் 5ம் கான்ஸ்டன்டைன்க்கு அனுப்பப்பட்டதாகவும், Artabasdus பேரரசர் காலத்தில் வந்தடைந்ததாகவும் உள்ளது. திருத்தந்தையின் பிரதிநிதிகள் இக்கடிதத்தை யாரிடம் ஒப்படைப்பது என குழம்பிக் கொண்டிருந்தவேளையில், எதிர்பாராத திருப்பம் ஒன்று நிகழ்ந்தது. பேரரசர் 5ம் கான்ஸ்டன்டைன் தன் எதிரியை தோற்கடித்து முடிசூட்டிக்கொண்டார். அதுமட்டுமல்ல திருஅவைக்கு பல்வேறு சலுகைகளையும், நிலங்களையும் வழங்கினார்.

மன்னர்களுடன் இத்திருத்தந்தையின் நெஞ்சுறுதியுடன் கூடிய செயல்பாடுகளுடன் அடுத்த வார பயணத்தைத் தொடர்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 March 2021, 15:21