தேடுதல்

Vatican News
திருத்தந்தையர் புதைக்கப்பட்டிருக்கும்  அடிநிலக் கல்லறையை பார்வையிடும் திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தையர் புதைக்கப்பட்டிருக்கும் அடிநிலக் கல்லறையை பார்வையிடும் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

திருத்தந்தையர் வரலாறு - குறுகிய வரலாறுகள் - இரண்டாம் பாகம்

இத்தாலியர்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளானபோது, போர்க்கைதிகளை விடுவிக்க, திருஅவை, பணத்தைக் கொடுத்தனுப்பி, அவர்களை மீட்டார் திருத்தந்தை 6ம் யோவான்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

வரலாற்றில், துல்லிய விவரங்களுடன் பதிவு செய்யப்படாத 4 திருத்தந்தையரின் சுருக்கமான வரலாறுகளை கடந்த வாரம் நோக்கிய நாம், இவ்வாரம், அதன் தொடர்ச்சியை நோக்குவோம்.

திருஅவை வரலாற்றில் 81வது திருத்தந்தையாக பதவியேற்றவர், புனித இரண்டாம் பெனடிக்ட். முந்தைய திருத்தந்தை இரண்டாம் லியோ அவர்கள் இறந்த 11 மாதங்களுக்குப் பின்னரே, திருத்தந்தை இரண்டாம் பெனடிக்ட் அவர்கள், 684ம் ஆண்டு ஜூன் 26ந்தேதி பதவியேற்க முடிந்தது. எந்த ஒரு திருத்தந்தையும், பேரரசரின் ஒப்புதல் பெற்றபின்னரே பதவியேற்க முடியும் என்ற சட்டம், அவ்வப்போது கடுமையாக அமல்படுத்தப்பட்டது என்பதை, இவ்வரலாற்றை தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருபவர்களுக்குத் தெரிந்திருக்கும். அச்சட்டத்தை நீக்கவேண்டும், அல்லது, அரசப் பிரதிநிதியிடம் இருந்து அவ்வொப்புதலை  பெறுவதில் திருத்தம் கொண்டுவரவேண்டும் என, பேரரசரை வற்புறுத்தி, அதில் வெற்றியும் கண்டார், திருத்தந்தை புனித இரண்டாம் பெனடிக்ட். உரோம் நகரின் பல கோவில்களை புதுப்பித்ததோடு, ஏழைகள்பால் அக்கறையுடன் செயல்பட்டார், திருத்தந்தை இரண்டாம் பெனடிக்ட் என்பதை, வரலாற்றிலிருந்து அறிகிறோம்.

684ம் ஆண்டு பதவியேற்று 685ம் ஆண்டு மே மாதம் 8ம் தேதி, திருத்தந்தை இரண்டாம் பெனடிக்ட் அவர்கள் உயிர் துறந்ததைத் தொடர்ந்து, பதவிக்கு வந்தவர், திருத்தந்தை ஐந்தாம் யோவான். திருத்தொண்டராக இருந்தபோது, கான்ஸ்தாந்திநோபிளின் 6வது பொதுச்சங்கத்தில் திருப்பீடத்தின் சார்பில் பங்கு பெற்ற இவர்தான், அப்பொதுச்சங்கத்தின் தீர்மானங்களை உரோம் நகருக்கு கொண்டு வந்தவர். இவரின் அறிவாற்றலால் கவரப்பட்ட பேரரசர் கான்ஸ்டன்டைன் போகோநாத்துஸ் (Constatine Pogonatus), அவர்கள், சிசிலியிலும், கலாப்ரியாவிலும், திருஅவை சொத்துக்கள் மீது விதிக்கப்பட்டிருந்த அரசு வரிகளை குறைத்தது மட்டுமின்றி, திருஅவையின் பொருளாதாரச் சுமைகளைக் குறைக்க, பல்வேறு உதவிகளையும் வழங்கினார். ஏற்கெனவே, திருத்தந்தையின் பதவியேற்புக்கு, பேரரசின் நேரடி ஒப்புதல் தேவையில்வை என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்ததால், திருத்தந்தை ஐந்தாம் யோவான் அவர்கள், 685ம் ஆண்டு பாப்பிறையாகத் தேர்வு செய்யப்பட்ட, ஜூலை 23ம் தேதியே பதவியேற்றுக் கொண்டார். ஓராண்டிற்கும் சிறிது அதிகமானதாக பணியாற்றிய இவர் சிரியாவைச் சேர்ந்தவர், மற்றும், ஏழைகள்பால் மிகுந்த தாராள குணமுடையவராக இருந்தார். மிக நீண்ட காலம் நோயுற்றிருந்த திருத்தந்தை 5ம் யோவான் அவர்கள், 686ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ந்தேதி உயிர் துறந்தார்.

அடுத்து வந்த திருத்தந்தை Conon அவர்களும் நீண்ட காலம் நோயுற்றிருந்தே உயிரிழந்ததாக வரலாறு கூறுகிறது.  இவர்  சிசிலியில் கல்வி கற்று,  உரோம் நகரில் அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார். திருத்தந்தை ஐந்தாம் யோவானுக்குப்பின் பலரின் பெயர்கள் முன்மொழியப்பட்டு குழப்பம் சூழ்ந்த நிலையில், அனைவருக்கும் பொதுவான இவர் தேர்வு செய்யப்பட்டார். 686ம் ஆண்டு அக்டோபர் 21ல் பொறுப்பேற்ற இவர், 687ம் ஆண்டு செப்டம்பர் 21ல் காலமானார். 11 மாதங்களே திருஅவை தலைமைப் பணியிலிருந்த இத்திருத்தந்தையின் காலத்திலும், திருஅவை சொத்துக்கள் மீதான பல வரிகள், பேரரசரால் குறைக்கப்பட்டன.

இவ்வாறு, தொடர்ந்து, திருத்தந்தையர்கள் குறுகிய கால அளவில் உயிர் துறந்து கொண்டிருக்க, அடுத்து வந்த திருத்தந்தை முதலாம் செர்ஜியுஸ் அவர்கள், 687ம் ஆண்டு டிசம்பர் 15 முதல் 701ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி வரை திருஅவையை வழி நடத்தினார். முந்தைய திருத்தந்தை Conon மரணப்படுக்கையில் இருக்கும்போதே, தலைமைத் திருத்தொண்டராக இருந்த பாஸ்கால் என்பவர், பேரரசரின் பிரதிநிதிக்கு பணத்தை வாரி வழங்கி, தன்னை அடுத்த திருத்தந்தையாக தேர்ந்தெடுக்குமாறு வலியுறுத்த, அவரும் சில அருள்பணியாளர்களின் ஆதரவைப் பெற்றுத்தந்தார். அதேவேளை, திருத்தந்தை Conon இறந்தவுடன், உரோமை அருள்பணியாளர்களின் ஒரு பிரிவினர், Theodore என்ற தலைமை அருள்பணியாளரை, திருத்தந்தை பொறுப்புக்கு முன்னிறுத்தினர். பாஸ்கால் என்பவருக்கும் Theodoreக்கும் இடையே உருவானப் போட்டியில், இருவரையும் புறந்தள்ளிய பொதுமக்களும், அருள்பணியாளர்களும், அருள்பணி செர்ஜியுஸ் அவர்களை, திருத்தந்தையாகத் தேர்வு செய்தனர். அந்தியோக்கியாவைச் சேர்ந்த இவர், சிசிலியில் கல்வி கற்று, புனித இரண்டாம் லியோவால் அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டவர். இவர் காலத்தில், பேரரசர் இரண்டாம் ஜஸ்டினியனிடமிருந்து, திருஅவை, பலத்த எதிர்ப்பைச் சந்தித்தது. ஏனெனில், கிரேக்கத் திருஅவையில், அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்படுவதற்குமுன் திருமணம் புரிந்திருந்தவர்கள், திருநிலைப்பாட்டிற்கு பின்னரும், மனைவிகளை வைத்துக்கொள்ள அனுமதிக்கவேண்டும் எனவும், கான்ஸ்தாந்திநோபிள் முதுபெரும் தந்தையின் அதிகாரம், உரோமை ஆயரான திருத்தந்தைக்கு நிகராக இருக்கவேண்டும் எனவும், பேரரசர் இரண்டாம் ஜஸ்டினியன் வழியாக உரைக்கப்பட்டது. ஏனெனில், பேரரசரின் தலைமையின்கீழ், 692ம் ஆண்டு, 215 கீழை வழிபாட்டுமுறை ஆயர்கள் கூடி எடுத்த Trullan சங்கத்தின் தீர்மானங்களை ஏற்க மறுத்திருந்தார் திருத்தந்தை. திருஅவை சட்டத்தில் மாற்றத்தைக் கொணர மறுத்து, அதில் உறுதியாக இருந்தார் திருத்தந்தை செர்ஜியுஸ். இதனால் கோபமுற்ற கான்ஸ்தாந்திநோபிள் பேரரசர், திருத்தந்தையைக் கொண்டுவர, ஓர் அதிகாரியை உரோம் நகருக்கு அனுப்பினார். இதைக் கேள்வியுற்று கொதித்தெழுந்த மக்கள், பாப்பிறை இல்லத்தைச் சுற்றி வளைத்து நின்று, திருத்தந்தையைக் காப்பாற்றினர். பேரரசரின் எண்ணம் இதனால் ஈடேற முடியாமல்போயிற்று. அதேவேளை, இறைத்திட்டம் வேறுவிதமாய் இருந்தது. பேரரசர் ஜஸ்டினியனின் ஆட்சி கவிழ்ந்தது. ஏறக்குறைய 13 ஆண்டுகள் 9 மாதங்கள் பதவியிலிருந்தார் திருத்தந்தை புனித செர்ஜியுஸ். உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும், என்று, திருப்பலியில் திருவிருந்து சடங்கிற்கு முன் சொல்லப்படும் Agnus Dei இறைவேண்டலை புகுத்தியவர் இவரே.

17 March 2021, 15:35