தேடுதல்

திருத்தந்தை இரண்டாம் லியோ திருத்தந்தை இரண்டாம் லியோ 

திருத்தந்தையர் வரலாறு - குறுகிய கால வரலாறுகள்

Ravenna மறைமாவட்டம், தனிச் சுதந்திரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்ததும், கிறிஸ்துவின் மனித, இறை இயல்புகள் குறித்த தவறான படிப்பினைகளும், முடிவுக்கு வந்த காலம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

கடந்த பல வாரங்களாக தொடர்ந்து திருத்தந்தையர்கள் வரலாறுகளை விரிவாகப் பார்த்து வந்த நாம், இவ்வாரம் கொஞ்சம் சுருக்கமான வரலாறுகளைப் பார்க்கப் போகிறோம். காரணம் என்னவென்றால், திருத்தந்தை புனித வித்தாலியன் (Vitalian)  அவர்கள், 672ல் இறந்த பின்னர், தொடர்ந்து வந்த சில திருத்தந்தையர்கள் குறித்த விரிவான விளக்கங்கள் வரலாற்றில் இல்லை.

   புனித வித்தாலியனுக்குப்பின் 672ம் ஆண்டு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புனித Adeodatus (672-676), நான்கு ஆண்டுகள் திருத்தந்தையாக இருந்தார். புனித Erasmus துறவுமடத்தின் துறவியாக இருந்த இவர், துறவற இல்லங்கள் வாழ்வைச் சீரமைப்பதில் அதிக கவனம் செலுத்தினார் என்பது தவிர இவரைக் குறித்து அதிகமாக எதுவும் தெரியவில்லை. இவரை இரண்டாம் Adeodatus என்றும், சிலவேளைகளில் அழைப்பதுண்டு. ஏனெனில், முன்னாள் திருத்தந்தை Deusdediu (615 - 618) என்பவர், முதலாம் Adeodatus என்றும் அறியப்பட்டிருந்தார்.

     676ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ந்தேதி திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் Donus. இவரை Domnus என்றும் அழைப்பர். இவர் ஓராண்டு ஐந்து மாதங்களே திருத்தந்தையாக பதவி வகித்தார். இவர் கோவில்களை சீரமைப்பதில் அதிக ஆர்வம் காட்டினார். இவர் காலத்தில்தான் இத்தாலியின் ரவென்னா மறைமாவட்ட பேராயர், திருஅவை தலைமைப்பீடத்துடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தது முடிவுக்கு வந்தது. இத்தாலிய மன்னர் வாழ்ந்துவந்த ரவென்னா பகுதியின் மறைமாவட்டம், தனிச் சுதந்திரம் பெற்றதாக இருக்கவேண்டும் என பேராயர்  Maurus  என்பவர் கொணர்ந்திருந்த சட்டம், பேராயர் Reparatus அவர்கள், திருத்தந்தை Donus தலைமையின் கீழ் இணைந்ததன் வழியாக முடிவுக்கு வந்தது. திருத்தந்தை Donus அவர்கள், 678ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ந்தேதி உயிரிழந்தபோது, அவரின் உடல் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

   6ம் நூற்றாண்டின் இறுதியில், சிசிலி தீவில் பிறந்த Agatho என்பவர், 678ம் ஆண்டு திருத்தந்தையாகத் தேர்வு செய்யப்பட்டார். திருத்தந்தையாகத் தேர்வு செய்யப்பட்டபோது இவரின் வயது 100க்கு மேல் இருக்கலாம் என வரலாற்று ஏடுகள் கூறுகின்றன. இங்கிலாந்தின் யார்க் பேராயர் புனித வில்ஃபிரட் அவர்கள், அநியாயமாக பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு இவர் காலத்தில்தான் தீர்வு காணப்பட்டது. திருத்தந்தை புனித Agathoதான் ஆயர் மன்றத்தைக் கூட்டி யார்க் பேராயராக, புனித வில்ஃபிரட்டை மீண்டும் பதவியிலமர்த்தினார். இவர் காலத்தில்தான் 680ம் ஆண்டு கான்ஸ்தாந்திநோபுளில், கிறிஸ்துவின் மனித, இறை இயல்புகள் குறித்த, ஆறாவது கிறிஸ்தவ ஒன்றிப்பு பொதுச் சங்கம் இடம் பெற்றது. தவறான படிப்பினைகளுக்கு முடிவு கண்ட இப்பொதுச்சங்கத்தின் தீர்மானங்கள் திருத்தந்தையின் ஒப்புதலுக்கு வருமுன்னரே, திருத்தந்தை Agatho, 681ம் ஆண்டு துவக்கத்தில் இறைபதம் சேர்ந்தார். புனித பேதுரு பெருங்கோவிலில் அதே ஆண்டு ஜனவரி 10ம் நாள் அடக்கம் செய்யப்பட்ட திருத்தந்தை Agatho அவர்கள், பிறரன்பு நடவடிக்கைகளுக்கும், புதுமைகள் ஆற்றுவதற்கும் பெயர் போனவர் என வரலாறு உரைக்கிறது.

    681ம் ஆண்டு ஜனவரி மாதத்திலேயே திருஅவையின் தலைமைப்பீடத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை இரண்டாம் லியோ அவர்கள், அப்பொறுப்பை ஏற்க, அதாவது, உரோமை ஆயராக திருநிலைப்படுத்தப்பட, ஓராண்டு ஏழு மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஏனெனில், முந்தைய திருத்தந்தை Agatho காலத்திலேயே, திருத்தந்தையை தேர்ந்தெடுப்பது தொடர்புடையவைகள் குறித்தும், கான்ஸ்தாந்திநோபிள் Byzantine வழிபாட்டுமுறை மன்றத்திற்கும் உரோமைக்கும் இடையேயான உறவுகள் குறித்தும், பேரரசர் Constantine  Pogonatus அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் துவங்கிவிட்டன. ஒவ்வொரு திருத்தந்தையும் பதவியேற்கும்போது, மன்னருக்கு ஒரு பெரும் தொகையை வரியாகச் செலுத்தவேண்டும் என்று, நூறாண்டுகளாக இருந்த சட்டம் நீக்கப்பட்டுவிடும் என முன்னாள் திருத்தந்தை Agathoவிடம் பேரரசர் வாக்குறுதியும் அளித்திருந்தார். இத்தகைய ஒரு காலக்கட்டத்தில், திருத்தந்தை Agatho இறந்த பின்னரும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கொண்டிருந்ததால், திருத்தந்தை இரண்டாம் லியோ அவர்கள் பதவியேற்பது காலதாமதமாகியது. இறுதியில், 682ம் ஆண்டு ஆகஸ்ட் 17ல் பதவியேற்ற திருத்தந்தை, அடுத்த ஆண்டு ஜூன் 28ல் காலமானார், அதாவது, பொறுப்பேற்ற பத்தே மாதங்களில். இத்திருத்தந்தைதான் திருஅவையின் ஆறாம் பொதுச்சங்கத்தின் தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளித்து உலகின் ஆயர்களுக்கு அனுப்பிவைத்தார். இவர் நீதிமானாகவும், அறிவுக்கூர்மையுடையவராகவும் செயல்பட்டார் என வரலாறு உரைக்கிறது.

       திருஅவை வரலாறு, அதிலும் திருத்தந்தையர் வரலாறு சில காலங்களில் சோகம் நிறைந்ததாகவும், சில காலங்களில் பெருமையுடையதாகவும் இருந்து வந்துள்ளதைத் தொடர்ந்து நோக்கி வருகிறோம். வரும் வாரம், 7 திருத்தந்தையர்கள் குறித்து காண்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 March 2021, 08:04