தேடுதல்

Vatican News
திருத்தந்தையின் வருகையை முன்னிட்டு கரக்கோஷ் நகரின் சாலையில் வரவேற்பு பதாகை திருத்தந்தையின் வருகையை முன்னிட்டு கரக்கோஷ் நகரின் சாலையில் வரவேற்பு பதாகை  (ANSA)

ஜெர்மனியில் வாழும் ஈராக் கிறிஸ்தவர்களின் மகிழ்ச்சி

பல ஆண்டுகளாக ஈராக் நாட்டில் துன்புற்றுவரும் கிறிஸ்தவ சமுதாயத்திற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூதுப் பயணம் பெரும் வரமாக அமையும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஈராக் நாட்டின் கொடுமைகளிலிருந்து தப்பி, ஜெர்மன் நாட்டில் தஞ்சம் புகுந்திருக்கும் கல்தேய வழிபாட்டுமுறை கிறிஸ்தவர்கள் நடுவே பணியாற்றிவரும் அருள்பணி ரெப்வர் பாஸா (Rebwar Basa) அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தங்கள் தாய்நாட்டிற்குச் செல்வது, நம்பிக்கை தரும் ஒரு பயணம் என்று கூறினார்.

பல ஆண்டுகளாக ஈராக் நாட்டில் துன்புற்றுவரும் கிறிஸ்தவ சமுதாயத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூதுப் பயணம், பெரும் வரமாக அமையும் என்றும், அத்துடன், கிறிஸ்தவ இஸ்லாமிய உரையாடலுக்கு வழிவகுக்கும் என்றும், அருள்பணி பாஸா அவர்கள் கூறினார்.

ஈராக் நாட்டில் பிறந்து, பின்னர் ஜெர்மனியில் பணியாற்றச் சென்றுள்ள அருள்பணி பாஸா அவர்கள், ஈராக்கிலிருந்து புலம்பெயர்ந்து, ஜெர்மன் நாட்டில் தஞ்சம் புகுந்திருக்கும் 8000த்திற்கும் அதிகமான கல்தேய வழிபாட்டுமுறை கிறிஸ்தவர்களுக்குப் பணியாற்றும் ஐந்து அருள்பாணியாளர்களில் ஒருவர்.

மோசூல் நகரில் உள்ள கல்தேய வழிபாட்டுமுறை கத்தோலிக்கப் பங்கு ஒன்றில் அருள்பணியாளராகப் பணியாற்றி வந்த அருள்பணி Ragheed Aziz Ganni அவர்களும், அவருக்கு உதவிசெய்த மூன்று திருத்தொண்டர்களும், 2007ம் ஆண்டு, ஆயுதம் தாங்கிய ஒரு அடிப்படைவாதக் குழுவினரால் கொல்லப்பட்டதையடுத்து, அருள்பணி Ganni அவர்களின் வாழ்க்கை வரலாற்றை, அருள்பணி பாஸா அவர்கள் வெளியிட்டார்.

ஜெர்மனியில் வாழும் பல நூறு கல்தேய வழிபாட்டுமுறை கிறிஸ்தவர்கள், ஈராக் சென்று திருத்தந்தையைச் சந்திக்க ஆவல் கொண்டிருந்தாலும், கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக, பயணங்களை மேற்கொள்ள இயலாமல் இருக்கின்றனர் என்று, அருள்பணி பாஸா அவர்கள் கூறினார்.

நிலையற்ற ஒரு சூழலையும், ஒவ்வொருநாளும் ஈராக் நாட்டில் நிகழும் பல்வேறு எதிர்பாராத தாக்குதல்களையும் உணர்ந்திருந்தாலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அந்நாட்டிற்குச் செல்ல முன்வந்திருப்பது தங்களுக்கு நம்பிக்கையை ஊட்டியுள்ளது என்று அருள்பணி பாஸா அவர்கள் குறிப்பிட்டுப் பேசினார்.

ஈராக்கில் வாழும் கிறிஸ்தவர்கள் மற்றும் அங்கு மீள் குடியமரச் செல்லும் கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உதவும் வண்ணம் ஜெர்மன் நாட்டில் வாழும் கல்தேய வழிபாட்டுமுறை கிறிஸ்தவர்கள் இயன்ற நிதி உதவிகள் செய்து வருவதாக, அருள்பணி பாஸா அவர்கள் எடுத்துரைத்தார்.

04 March 2021, 14:45