தேடுதல்

Vatican News
அயர்லாந்து நாட்டின் Knock தேசியத் திருத்தலத்தில் செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அயர்லாந்து நாட்டின் Knock தேசியத் திருத்தலத்தில் செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

அயர்லாந்தின் Knock திருத்தலத்திற்கு புதிய அங்கீகாரம்

1879ம் ஆண்டு Knock என்ற கிராமத்தில், புனித யோசேப்பு, நற்செய்தியாளர் புனித யோவான், வானதூதர்கள், கடவுளின் செம்மறி ஆகியோர் புடைசூழ, அன்னை மரியா மௌனமாகத் தோன்றினார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அயர்லாந்து நாட்டின் Knock தேசியத் திருத்தலம், பன்னாட்டளவில், மரியா மற்றும், திருநற்கருணை திருத்தலமாக, அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படுவதற்கு, திருப்பீடம் இசைவு தெரிவித்திருப்பது, தலத்திருஅவைக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது என்று, அந்நாட்டு ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.

151 ஆண்டுகளுக்குமுன், புனித யோசேப்பு மற்றும், நற்செய்தியாளர் புனித யோவான் ஆகியோரோடு, அன்னை மரியா, காட்சியளித்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள Knock தேசியத் திருத்தலத்தை, மார்ச் 19, புனித யோசேப்பு திருநாளன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காணொளிச் செய்தி ஒன்றின் வழியாக, பன்னாட்டுத் திருத்தலம் என்று அறிவிக்கவுள்ளார்.

இந்த அறிவிப்பு தங்களுக்கு பெரும் மகிழ்வை அளிக்கின்றது என்று கூறியுள்ள, Knock திருத்தலத்திற்குப் பொறுப்பான, Tuam உயர்மறைமாவட்ட பேராயர் Michael Neary அவர்கள், அயர்லாந்தில், மக்கள் பெருமளவில் திருப்பயணம் மேற்கொள்ளும் இந்த திருத்தலத்திற்கு, உலகளாவிய நிலை வழங்கப்படவிருப்பது, வரலாற்றில் ஒரு மைல்கல் என்று கூறினார்.

அயர்லாந்து ஆயர்களின் விண்ணப்பத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், திருப்பீடமும் இசைவு தெரிவித்திருப்பதற்கு, நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்றும், பேராயர் Neary அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

1879ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி, Knock என்ற கிராமத்தில், புனித யோசேப்பு, நற்செய்தியாளர் புனித யோவான், வானதூதர்கள், கடவுளின் செம்மறி ஆகியோர் புடைசூழ, அன்னை மரியா மௌனமாகத் தோன்றிய காட்சியை 15 பேர் கண்டனர். அந்நேரத்தில் இடி மின்னலுடன் மழை பெய்துகொண்டிருக்க, இந்த 15 பேரும்,  செபமாலை செபித்துக்கொண்டு, இந்த காட்சியை, ஏறத்தாழ இரண்டு மணி நேரம் கண்டுள்ளனர். காட்சி முடிந்தபின்னர், அந்த இடத்தில் மழைபெய்த அறிகுறியே இல்லாமல் இருந்தது என்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. அன்னை மரியா காட்சியளித்த அந்த இடத்தில், Knock திருத்தலம் அமைக்கப்பட்டுள்ளது.

1879ம் ஆண்டுக்கும், 1936ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் இக்காட்சி பற்றி திருப்பீடம் ஆய்வுகளை மேற்கொண்டு, இக்காட்சி நம்பத்தகுந்தது என் அறிவித்தது. இந்த காட்சியைக் கண்ட 15 பேரில் வயதில் மூத்தவருக்கு அயர்லாந்து மொழி மட்டுமே தெரிந்திருந்தது. அவர்களில் இளையவராக இருந்த ஆறு வயது சிறுவன், அச்சமயத்தில் ஆங்கிலம் கற்றுவந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

1979ம் ஆண்டில், திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களும், 2018ம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், Knock தேசிய திருத்தலத்திற்குச் சென்றுள்ளனர்.

12 March 2021, 15:04