தேடுதல்

குருத்தோலையுடன் இயேசுவை வரவேற்கும் எருசலேம் மக்கள் குருத்தோலையுடன் இயேசுவை வரவேற்கும் எருசலேம் மக்கள் 

குருத்தோலை ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

குருத்தோலை ஞாயிறென நாம் கொண்டாடும் இந்த விழாவில், இயேசு எருசலேம் நகரில் அமைதியின் மன்னனாக நுழைந்த நிகழ்வைக் கொண்டாடுகிறோம்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

குருத்தோலை ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

திருவழிபாட்டு ஆண்டின் மிக முக்கிய நாள்களை நாம் துவங்குகிறோம். குருத்தோலை ஞாயிறு அல்லது, பாடுகளின் ஞாயிறு என்றழைக்கப்படும் இஞ்ஞாயிறையடுத்துவரும் வாரத்தை, புனித வாரம் என்று சிறப்பிக்கிறோம். சென்ற ஆண்டு, தவக்காலம் துவங்கியவேளையில், படிப்படியாக மூடப்பட்ட நம் ஆலயங்கள், இன்றளவும் முழுமையாகத் திறக்கப்படாமல் கிடக்கின்றன. சென்ற ஆண்டைப்போலவே, இந்த ஆண்டும், உலகின் பல நாடுகளில், குருத்தோலை ஞாயிறு, புனித வாரம், மற்றும், உயிர்ப்புப் பெருவிழா ஆகிய முக்கிய விழாக்களை, இறைமக்களுடன் இணைந்து கொண்டாட முடியாதவண்ணம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மனிதர்களாகிய நாம் உருவாக்கிக்கொண்ட, இனம், மொழி, மதம், சமுதாய நிலை, நாடுகளின் எல்லை என்ற  அனைத்து செயற்கையான பிரிவுகளையும் ஊடுருவி, கோவிட்-19 கிருமி அனைவரையும் பாதித்துள்ளது. இக்கிருமியைக் குறித்த தெளிவான, முழுமையான புரிதல், அறிவியலாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இல்லை என்பது மிகத் தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், அரசியல் தலைவர்கள், தங்கள் அறியாமையை மூடி மறைத்துவிட்டு, இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு விதித்திருக்கும் தடைகள், மக்களைப் பிரிப்பதற்கும், தனிமைப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மக்கள் கூடிவருவதைத் தடுக்க ஆணைகளை வழங்கும் அரசுகள், தங்களுக்குச் சாதகமான இடங்களிலும், நேரங்களிலும் மக்கள் கூடிவருவதை அனுமதித்துள்ளன. வர்த்தக மையங்களிலும், தேர்தல் கூட்டங்களிலும் மக்கள் கூடுவதை தடைசெய்யாத அரசியல்வாதிகள், வழிபாட்டுத்தலங்களில் மக்கள் கூடிவருவதை, மீண்டும், மீண்டும் தடைசெய்வது, வேதனையைத் தருகிறது.

கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் தேர்தல் கூட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. கோவிட் பெருந்தொற்று நேரத்தில், இத்தகையக் கூட்டங்கள், எவ்வித கட்டுப்பாடும் இன்றி நடைபெற்றுவருவது, நமக்கு கவலை அளிக்கிறது. பொதுவாகவே, அரசியல் கூட்டங்களில் மக்களைச் சேர்ப்பதற்கு, ஒரு சில விரும்பத்தகாத வழிகள் பின்பற்றப்படுவதை நாம் அறிவோம். உணவு, மதுபானம், கூடவே, கையில் பணம் என்ற காரணங்களுக்காக, ஆயிரக்கணக்கில் வறியோர் இந்தக் கூட்டங்களுக்காக திரட்டப்படுகின்றனர். அல்லது, கட்சிகளின் அடிமட்டத் தொண்டர்கள் இந்தக் கூட்டங்களில் கலந்துகொள்கின்றனர். எவ்வகையில் பார்த்தாலும், இக்கூட்டங்களில் கலந்துகொள்ளும் வறியோர், மற்றும், அடிமட்டத் தொண்டர்கள், பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டால், யாரும் அவர்களை பராமரிக்கப் போவதில்லை. தங்களுக்குத் தேவையானபோது மக்களைப் பயன்படுத்திவிட்டு, பின்னர் குப்பையென ஒதுக்கித்தள்ளும் அரசியல்வாதிகளின் சுயநலப் போக்கு, இந்தக் ‘கோவிட்-தேர்தல்’ காலத்தில், மிக அப்பட்டமாக அரங்கேறியுள்ளது. அரசியல் தலைவர்களுக்குத் தேவையானதெல்லாம், அவர்களது புகழைப்பாடும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கவேண்டும். அப்படி கூடிவரும் மக்களின் நலனைப்பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை.

மக்கள் நலனை மையப்படுத்தி, கடந்த ஓராண்டளவாக மக்கள், குறிப்பாக, இளையோர் திரண்டுவந்து, தங்கள் நியாயமான உரிமைகளுக்காகப் போராடி வருவதையும் நாம் அறிவோம். பிப்ரவரி மாதத் துவக்கத்திலிருந்து, மியான்மார் நாட்டில், இராணுவ ஆட்சி திணிக்கப்பட்டதை எதிர்த்து, அந்நாட்டு இளையோர் மேற்கொண்டுவரும் போராட்டங்களை நாம் அறிவோம். இந்தியாவின் தலைநகர் டில்லியில், விவசாயப் பெருமக்கள், தங்கள் வாழ்வுக்காகப் போராடியதை மறந்திருக்க வாய்ப்பில்லை.  சீன அரசின் அடக்குமுறையை எதிர்த்து, ஹாங்காங் மக்கள் நடத்திய போராட்டங்கள், இரஷ்ய அடக்குமுறைக்கு எதிராக எழுந்த போராட்டங்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டில், காவல்துறையின் அத்துமீறிய செயல்பாடுகளை எதிர்த்து நிகழ்ந்த கறுப்பின மக்களின் போராட்டங்கள் என்று, பல நாடுகளில், போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. மக்கள் சக்தியை உணர்த்தும் இந்தக் கூட்டங்கள், நம்பிக்கையை வளர்த்துள்ளன. அதிகார வர்க்கத்தை அச்சுறுத்தியுள்ளன. இத்தகையதொரு கூட்டம், ஓர் ஊர்வலம் அன்று, எருசலேம் நகரில் நடந்தது.

நம்பிக்கையை வளர்த்த அந்த ஊர்வலத்தை, இந்த ஞாயிறன்று நாம் கொண்டாட வந்திருக்கிறோம். குருத்தோலை ஞாயிறென நாம் கொண்டாடும் இந்த விழாவில், இயேசு எருசலேம் நகரில் அமைதியின் மன்னனாக நுழைந்த நிகழ்வைக் கொண்டாடுகிறோம்.

போருக்குப் புறப்படும் மன்னன் குதிரை மீதும், சமாதானத்தைக் கொணரும் மன்னன், கழுதையின் மீதும் அமர்ந்து வருவது, இஸ்ரயேல் சமுதாயத்தில் நிலவிய மரபு. தான் அமைதியின் மன்னன் என்பதை அடிக்கோடிட்டுக் காட்ட, இயேசு, ஒரு கழுதைக்குட்டியின் மீது அமர்ந்து, எருசலேம் நகருக்குள் நுழைந்தார். இயேசுவை தன் உதரத்தில் தாங்கிய மரியாவும், யோசேப்பும், பெத்லகேம் ஊருக்குப் பயணித்த காட்சியை சித்திரிக்கும் ஓவியங்களில், இளம்பெண் மரியா ஒரு கழுதை மீது அமர்ந்து செல்வதைக் காண்கிறோம். எனவே, கருவில் தோன்றியது முதல், அமைதியின் மன்னனாக வலம் வந்த இயேசு, எருசலேமில் இறுதி முறை நுழைந்தபோதும், அமைதியின் மன்னனாக நுழைந்தார்.

இயேசு எருசலேமில் நுழைந்தபோது, மக்கள், எதேச்சையாக, மானசீகமாக அவருக்குமுன் ஊர்வலமாக சென்றனர். திருவிழா நாட்களில், எருசலேமில், தானாகவே உருவாகும் இத்தகையக் கூட்டங்கள், மதத் தலைவர்களுக்கும், உரோமைய அரசுக்கும் அச்சத்தை உருவாக்கின. இயேசுவைச் சுற்றி உருவான இந்தக் கூட்டத்தைக் கண்டு, அதிகார வர்க்கம் ஆட்டம் கண்டிருக்கவேண்டும்.

இயேசு தன் பணிவாழ்வை ஆரம்பித்ததிலிருந்து, யூத மதத் தலைவர்களின் அதிகார வாழ்வு ஆட்டம் கண்டது. இந்தத் தலைகீழ் மாற்றங்களின் சிகரமாக, எருசலேம் நகரில் இயேசு ஊர்வலமாய் வந்தார். அதைத் தொடர்ந்து, மதத்தலைவர்களின் அரணாக இருந்த எருசலேம் கோவிலில் அவர் நுழைந்து, அங்கு குப்பையாய் குவிந்திருந்த அவலங்களை அப்புறப்படுத்தினார். எனவே, முதல் குருத்தோலை ஞாயிறு, அதிகார அமைப்புகளை, தலைகீழாகப் புரட்டிப் போட்ட ஒரு சூறாவளியாக அமைந்தது! இயேசு என்ற இளைஞன் உருவாக்கிய அந்தச் சூறாவளியை, இந்த ஞாயிறு கொண்டாட வந்திருக்கிறோம்.

அடுத்து, நமது சிந்தனைகளில் வலம்வரும் கருத்து, புனித வாரம். குருத்தோலை ஞாயிறு முதல், உயிர்ப்பு விழா வரை உள்ள இந்த எழுநாட்களையும், தாய் திருஅவை, புனிதவாரமாகக் கொண்டாட அழைக்கிறார். வருடத்தின் 52 வாரங்களில், இந்த வாரத்தை மட்டும் ஏன் புனிதவாரம் என்று அழைக்கவேண்டும்? இயேசு, இவ்வுலகில்  வாழ்ந்த இறுதி நாட்களை நாம் நினைவுகூர்வதால், இதை, புனித வாரம் என்றழைக்கிறோம். ஆனால், அந்த இறுதி நாட்களில் நடந்தவற்றில் புனிதம் எதுவும் வெளிப்படையாகத் தெரியவில்லையே!

நம்பிக்கைக்குரிய நண்பர் காட்டிக்கொடுத்தார். மற்றொரு நண்பர் மறுதலித்தார். ஏனைய நண்பர்கள் ஓடி, ஒளிந்துகொண்டனர். மனசாட்சி விலைபோனது. பொய்சாட்சிகள் சொல்லப்பட்டன. வழக்கு என்ற பெயரில், உண்மை உருகுலைந்தது. இயேசு என்ற இளைஞன், நல்லவர், குற்றமற்றவர் என்று தெரிந்தும், தவறாகத் தீர்ப்பு சொல்லப்பட்டது. இறுதியில், அந்த இளைஞனை அடித்து, கிழித்து, ஒரு கந்தல் துணியைப்போல் சிலுவையில் தொங்கவிட்டனர்.

நாம் இங்கே பட்டியலிட்டவற்றில் புனிதம் எங்காவது தெரிந்ததா? புனிதம் என்ற சொல்லுக்கு, வேறோர் இலக்கணம் எழுதப்பட்டது. கடவுள் என்ற மறையுண்மைக்கே மாற்று இலக்கணம் தந்தவர் இயேசு. கடவுள், துன்பப்படக் கூடியவர்தான். அதுவும், அன்புக்காக, எத்தகையத் துன்பமாயினும், எவ்வளவு துன்பமாயினும், மனமுவந்து ஏற்பவரே நம் கடவுள் என்று, கடவுளைப்பற்றி, வித்தியாசமான ஓர் இலக்கணத்தை, இயேசு, அந்தச் சிலுவையில் சொல்லித்தந்தார். புனிதவாரம் முழுவதும், நாம் கற்றுக்கொள்ளக்கூடிய, கற்றுக்கொள்ளவேண்டிய, வாழ்க்கைப் பாடங்கள் பல உள்ளன. கற்றுக்கொள்ளச் செல்வோம் கல்வாரிக்கு.

கல்வாரி என்றதும் நம் சிந்தனைகளில் ஆழப்பதியும் ஓர் அடையாளம்... சிலுவை. உரோமையர்கள் கண்டுபிடித்த சித்ரவதைக் கருவிகளிலேயே மிகவும் கொடூரமானது, சிலுவை. மிகப்பெரும் பாதகம் செய்த குற்றவாளிகளை நிர்வாணமாக்கி, அவர் உள்ளங்களை அவமானத்தால் நொறுக்கி, உயிர்களைப் பறிக்கும் கொலைக் கருவிதான் சிலுவை. அந்த அவமானச் சின்னத்தை, அந்தக் கொலைக்கருவியை, நாம், கோவில் கோபுரங்களிலும், பீடங்களிலும் வைத்து வணங்குகிறோம் என்றால், அதற்கு ஒரே காரணம்... இயேசு. சிலுவையில் அறையுண்ட இயேசு, தன் கொடிய மரணத்தின் வழியே, கோடான கோடி மக்களுக்கு மீட்பைக் கொணர்ந்துள்ளார்.

சிலுவையில் அறையுண்ட இயேசு, ஒருவர் வாழ்வில் உருவாக்கும் மாற்றங்களை அழகுற உணர்த்தும் ஒரு கதை இது. இக்கதையின் நாயகனான ஆயர், சிறந்த மறையுரையாளர். இறைவனை நம்பாதவர்கள், திருஅவையை வெறுத்துப் பழிப்பவர்கள் ஆகியோரைத் தேடிச்சென்று, அவர்களிடம் பேசிவந்தார், இந்த ஆயர். தன் மறையுரைகளில், அடிக்கடி, ஒரு நிகழ்வை எடுத்துச் சொல்வது, இவர் வழக்கம்.

பாரிஸ் மாநகரில் புகழ்பெற்ற நோத்ரு தாம் (Notre Dame) பேராலயத்தின் வாசலில், ஒவ்வொரு ஞாயிறன்றும், இளைஞன் ஒருவர் நின்றுகொண்டு, ஞாயிறு திருப்பலிக்குச் செல்லும் அனைவரையும் முட்டாள்கள் என்றழைத்து, உரத்தக் குரலில் கேலிசெய்து வந்தார். கோவிலுக்குச் செல்பவர்கள் அவரைக்கண்டு பயந்து, ஒதுங்கி சென்றனர். ஒவ்வொரு வாரமும், அந்த இளைஞனின் ஆர்ப்பாட்டம் கூடிவந்தது.

ஒரு முறை, ஞாயிறு திருப்பலிக்கு முன், பங்குத்தந்தை, பேராலய வாசலுக்குச் சென்றார். அவரைக் கண்டதும், இளைஞனின் கேலிப்பேச்சு உச்சநிலையை அடைந்தது. இளைஞனின் கேலிகளை எல்லாம் பொறுமையுடன் கேட்ட பங்குத்தந்தை, அவரிடம், "நான் இப்போது உனக்கு விடுக்கும் சவாலை உன்னால் நிறைவேற்ற முடியாது. உனக்கு அவ்வளவு தூரம் வீரமில்லை" என்று கூறினார். இதைக்கேட்டதும், இளைஞனின் கோபம், கட்டுக்கடங்காமல் வெடித்தது. "முட்டாள் சாமியாரே! எனக்கேச் சவால் விடுகிறாயா? சொல், எதுவாயினும் செய்துகாட்டுகிறேன்" என்று அனைவரும் கேட்கும்படி கத்தினார், அவ்விளைஞர். பங்குத்தந்தை அமைதியாகத் தொடர்ந்தார்: "கோவிலுக்குள் வா. பீடத்திற்கு முன் நின்று, சிலுவையில் இருக்கும் இயேசுவை உற்றுப்பார். பின்னர், உன்னால் முடிந்த அளவு உரத்தக் குரலில், 'கிறிஸ்து எனக்காக சிலுவையில் இறந்தார். ஆனால், அதைப்பற்றி எனக்குச் சிறிதும் கவலையில்லை' என்று நீ கத்தவேண்டும். உன்னால் முடியுமா?" என்று பங்குத்தந்தை சவால் விடுத்தார்.

அந்தச் சவாலைத் துச்சமாக மதித்த இளைஞன், பீடத்தை நெருங்கினார். பின்னர், உரத்தக் குரலில், "கிறிஸ்து எனக்காக சிலுவையில் இறந்தார். ஆனால், அதைப்பற்றி எனக்குச் சிறிதும் கவலையில்லை" என்று கத்தினார். பங்குத்தந்தை அவரிடம், "நன்றாகக் கத்தினாய். இன்னொரு முறை கத்து" என்றார். இரண்டாவது முறையும் இளைஞன் கத்தினார். ஆனால், இம்முறை, அவரது குரலில் கொஞ்சம் தடுமாற்றம் தெரிந்தது. பங்குத்தந்தை, இளைஞனிடம், "தயவுசெய்து, இறுதியாக ஒரு முறை மட்டும் கோவிலில் உள்ள அனைவரும் கேட்கும்படி கத்திவிட்டு, பின்னர் நீ போகலாம்" என்று கூறினார். இம்முறை, இளைஞன் சிலுவையை உற்றுப்பார்த்தார். அவர் கத்த முற்பட்டபோது, வார்த்தைகள் வரவில்லை. சிலுவையில் அறையப்பட்டிருந்த இயேசுவை அவரால் தொடர்ந்து பார்க்கவும் முடியவில்லை. கண்களைத் தாழ்த்தினார். கண்ணீர் வழிந்தோடியது.

இந்நிகழ்வை விவரித்துக் கூறிய ஆயர், சிறிதுநேரம் அமைதியாக இருந்தபின், தொடர்ந்தார்: "அந்த இளைஞன் நான்தான். கடவுள் எனக்குத் தேவையில்லை என்று வாழ்ந்தவன் நான். ஆனால், கடவுள் எனக்குத் தேவை என்பதை, சிலுவையில் தொங்கிய இயேசு எனக்கு உணர்த்தினார். அது மட்டுமல்ல, நான் கடவுளுக்குத் தேவை என்பதையும் அவர் எனக்குப் புரியவைத்தார்" என்று கூறினார் அந்த ஆயர்.

சிலுவையில் அறையுண்ட இயேசுவை இந்த புனித வாரம் முழுவதும் அடிக்கடி சந்திக்கவும், சிந்திக்கவும் அழைக்கப்படுகிறோம். நமக்குள் என்னென்ன மாற்றங்கள் உருவாகப் போகின்றன? அந்த இளைஞனை ஆட்கொண்டு, அவர் வாழ்வை மாற்றிய இறைவன், இன்றைய உலகில் வாழும் இளையோரின் வாழ்வில் மாற்றங்களை உருவாக்க வேண்டுவோம்.

எளிமையும், அமைதியும் கொண்ட மன்னராக இயேசு எருசலேமில் நுழைந்த குருத்தோலை ஞாயிறைக் கொண்டாடும் வேளையில், தமிழகத்தில், எளிமையையும், அமைதியையும் விரும்பும் தலைவர்களை மக்கள் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று மன்றாடுவோம். கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து மீண்டுவரும் இவ்வுலகின் நாடுகள் அனைத்திலும், மக்கள் நலனை முன்னிறுத்தும் தலைவர்கள் உருவாகவேண்டும் என்றும், குறிப்பாக, இளையோர், சமுதாயநலனில் அக்கறை கொண்டு, உழைப்பதற்கு முன்வரவேண்டும் என்றும் செபிப்போம்.

இறுதியாக நம் சிந்தனைகள் மீண்டும் ஒருமுறை நாம் வாழ்ந்துவரும் 'முழு அடைப்பு' அல்லது, ‘அரைகுறையான அடைப்பு’ என்ற எதார்த்தத்தை நோக்கித் திரும்புகிறது. தொற்றுக்கிருமி நம்மீது சுமத்தியிருக்கும் இந்த கட்டுப்பாட்டை, ஆன்மீக அளவில் வெற்றிகொண்டு, இயேசுவின் பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்பு ஆகிய மறையுண்மைகளில், பொருளுள்ள முறையில் பங்கேற்க, இறைவன் நமக்கு வழிகாட்டுவாராக!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 March 2021, 14:43