தேடுதல்

Cabo Delgado மாநிலத்தில் பதட்டநிலை Cabo Delgado மாநிலத்தில் பதட்டநிலை 

மொசாம்பிக் மக்களுக்காக இறைவேண்டல்

குடிமக்களுக்கு நீதியை உறுதிசெய்யவேண்டியது மொசாம்பிக் நாட்டுத் தலைவர்களின் கடமை - மொசாம்பிக் ஆயர் António

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மொசாம்பிக் நாட்டின் வடக்கேயுள்ள Cabo Delgado மாநிலத்தில் இடம்பெறும் வன்முறை முடிவுக்குக் கொணரப்படுமாறு, மார்ச் 28, குருத்தோலை ஞாயிறு திருப்பலியில், Pemba மறைமாவட்ட அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் António Juliasse அவர்கள், அழைப்பு விடுத்தார்.

Cabo Delgado மாநிலத்தில், ஜிகாதி கெரில்லாக்கள் நடத்திவரும் கடுமையான வன்முறைத் தாக்குதல்களில், குறைந்தது இரண்டாயிரம் பேர் இறந்துள்ளனர், மற்றும், ஏழு இலட்சத்திற்கு மேற்பட்டோர் புலம்பெயர்ந்துள்ளனர்.

குருத்தோலை ஞாயிறு திருப்பலியில் மறையுரையாற்றிய ஆயர் António அவர்கள், இந்தப் போர் பற்றி எவருமே புரிந்துகொள்வதில்லை என்றும், அனைவரையும் வேதனைப்படுத்தும் இந்தப் போர் நிறுத்தப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

குடிமக்களுக்கு நீதியை உறுதிசெய்யவேண்டியது மொசாம்பிக் நாட்டுத் தலைவர்களின் கடமை என்பதை நினைவுபடுத்தியுள்ள ஆயர் António அவர்கள், நீதியை நடைமுறைப்படுத்தாத ஒரு தலைவர், உண்மையான தலைவராக ஒருபோதும் இருக்க இயலாது என்று கூறியுள்ளார்.

சமுதாயத்தில் மிகவும் வறியநிலையில் உள்ள மக்கள் மீது அரசு கவனம் செலுத்தி, அவர்கள் அந்நிலையிலிருந்து மீண்டெழ அரசு உதவிபுரியவேண்டும் என்றும், இதில், மதம், அரசியல், இனம் அல்லது மாநிலம் என, எக்காரணத்தை முன்னிட்டும் எவரும் புறக்கணிக்கப்படக் கூடாது என்றும், ஆயர் அந்தோனியோ அவர்கள் கூறியுள்ளார்.

Cabo Delgado மாநிலத்தில், 2017ம் ஆண்டில், Ansar al-Sunnah என்ற உள்ளூர் ஜிகாதி அமைப்பு, ஐஎஸ் இஸ்லாம் அரசோடு கூட்டமைப்பு கொண்டுள்ளோம் என்று அறிவித்து, வன்முறையை மேற்கொண்டது. மொசாம்பிக்கில் மிக வறிய மாநிலமான இங்கு, எரிவாயு மற்றும், மாணிக்க கற்கள் அதிகமாக உள்ளன. இந்த கனிமவளம் வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்த்துள்ளது. அதேநேரம், இந்த ஜிகாதி அமைப்பு, இப்பகுதியில் இஸ்லாமிய சட்டத்தை அமல்படுத்துவதற்காக கிராமங்களையும், ஆலயங்களையும் தாக்கி, மக்களைக் கொன்றுவருகிறது. (Fides)

30 March 2021, 14:33