தேடுதல்

மியான்மார் இராணுவம், காவல்துறையினர் முன் மண்டியிட்டு மன்றாடும் அருள்சகோதரி Ann Rosa Nu Tawng மியான்மார் இராணுவம், காவல்துறையினர் முன் மண்டியிட்டு மன்றாடும் அருள்சகோதரி Ann Rosa Nu Tawng 

மியான்மார் இராணுவத்தை சந்தித்த அருள்சகோதரி

அருள்சகோதரி ஆன் ரோசா அவர்கள் இராணுவத்தினர் முன் மண்டியிட்டு செபித்தபோது, தன்னைச் சுடும்படியும், ஆயுதம் ஏதுமின்றி போராடும் இளையோரைச் சுடவேண்டாம் என்றும் வேண்டிக்கொண்டார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிப்ரவரி 28, கடந்த ஞாயிறன்று, மியான்மார் நாட்டு இராணுவமும், காவல்துறையும், போராட்டக்காரர்கள் மீது கடுமையான அடக்குமுறைகளை மேற்கொண்ட வேளையில், அந்நாட்டின் அருள்சகோதரி ஒருவர், இராணுவத்தினர் முன், மண்டியிட்டு விண்ணப்பித்த காட்சி, ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகின்றது.

மியான்மார் நாட்டின் மியீத்கியீனா (Myitkyina) என்ற நகரில் பணியாற்றிவரும் புனித பிரான்சிஸ் சேவியர் அருள் சகோதரிகள் சபையைச் சேர்ந்த அருள்சகோதரி Ann Rosa Nu Tawng அவர்கள், கண்ணீர் புகை, மற்றும் துப்பாக்கிச் சூடு ஆகிய தாக்குதல்களில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் முன் மண்டியிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோரைக் கொல்லவேண்டாம் என்று வேண்டிக்கொண்டார்.

மியீத்கியீனா நகரில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தை ஒடுக்க, இராணுவத்தினர் தாக்குதல்களை மேற்கொண்ட வேளையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 100க்கும் மேற்பட்ட இளையோர், அருள்சகோதரி ஆன் ரோசா அவர்கள் பணியாற்றிவந்த மருத்துவமனையில் தஞ்சம் புகுந்ததையடுத்து, அச்சகோதரி இராணுவத்தினரைச் சந்திக்கச் சென்றார்.

45 வயது நிறைந்த அருள்சகோதரி ஆன் ரோசா அவர்கள் இராணுவத்தினர் முன் மண்டியிட்டு செபித்தபோது, இராணுவத்தினருக்கு சுட விருப்பமானால் தன்னைச் சுடும்படியும், ஆயுதம் ஏதுமின்றி போராடும் இளையோரைச் சுடவேண்டாம் என்றும் வேண்டிக்கொண்டார்.

அருள்சகோதரி ஆன் ரோசா அவர்கள் மீண்டும் மீண்டும் எழுப்பிய வேண்டுதலையடுத்து, இராணுவம் தங்கள் தாக்குதலை நிறுத்திய வேளையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் அவ்விடத்தை விட்டு தப்பித்துச்செல்ல முடிந்தது என்று UCA செய்திக்குறிப்பு கூறுகிறது.

பிப்ரவரி 1ம் தேதி, மியான்மார் இராணுவம், அந்நாட்டின் தலைவர்கள் பலரை கைது செய்து, ஆட்சியைக் கவிழ்த்து, நாட்டில் அவசரகால நிலையை அறிவித்த்தையடுத்து நாடெங்கும் போராட்டங்கள் எழுந்த வேளையில், அருள்சகோதரி ஆன் ரோசா அவர்கள் மியீத்கியீனா நகரில் நடந்த அமைதிப் போராட்டத்தில் பங்கேற்றார். (UCAN/ Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 March 2021, 14:37