தேடுதல்

Vatican News
மியான்மாரில் போராடிவரும் இளையோர் மியான்மாரில் போராடிவரும் இளையோர் 

மியான்மார் மக்களோடு உடன்பிறந்த உணர்வு, ஒருமைப்பாடு

மக்களாட்சி மற்றும், அமைதியை வலியுறுத்தும் மியான்மார் மக்கள், சட்டத்திற்கு உட்பட்டு, அதை மதித்து, நீதி மற்றும், நல்லிணக்க உணர்வில் போராடி வருகின்றனர் – தாய்லாந்து ஆயர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மியான்மாரில், மக்களாட்சி, மற்றும், தங்களின் நியாயமான உரிமைகளுக்காகப் போராடிவருகின்ற, அமைதியை அன்புகூரும் அந்நாட்டு மக்களுக்கு எதிராக இடம்பெறும்  வன்முறைகள் மிகுந்த வேதனையளிக்கின்றது என்று, தாய்லாந்து நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.

மியான்மாரில், மிக அதிகமாக மக்கள் எதிர்கொள்ளும் காழ்ப்புணர்வு, இரத்தம் சிந்தல், மற்றும், கடுந்துன்பங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, திறந்த மடல் ஒன்றை வெளியிட்டுள்ள தாய்லாந்து ஆயர்கள், அந்நாட்டு மக்களுடன், தாய்லாந்து கத்தோலிக்கரின் அருகாமை, உடன்பிறந்த உணர்வு மற்றும், அக்கறையைக் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு சமுதாயத்தில், ஓர் உறுப்பினர் துன்புற்றால், அனைத்து மக்களுமே துன்புறுவர், ஓர் உறுப்பினர் மதிக்கப்பட்டால், அனைவருமே அவரோடு சேர்ந்து அகமகிழ்வர் என்று  கூறியுள்ள ஆயர்கள், நூற்றாண்டுகளாக, நம் திருஅவைகள், நல்ல உடன்பிறந்த உணர்வோடு அடுத்திருப்பவர்களாக வாழ்ந்து வருகின்றன என்றும், துன்புறும் உங்களோடு சேர்ந்து நாங்களும் துன்புறுகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மியான்மாரில் வன்முறை நிறுத்தப்பட்டு, உரையாடல் தொடங்கப்படுமாறு, அந்நாட்டுத் தெருக்களில் நானும் முழந்தாளிலிருந்து விண்ணப்பிக்கிறேன் என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களோடு, நாங்களும் இணைகிறோம் என்றும், தாய்லாந்து ஆயர்கள், தங்களின் செய்தியில் கூறியுள்ளனர்.

மக்களாட்சி மற்றும், அமைதியை வலியுறுத்தும் மியான்மார் மக்கள், சட்டத்திற்கு உட்பட்டு, அதை மதித்து, நீதி மற்றும், நல்லிணக்க உணர்வில், போராடி வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ள ஆயர்கள், ஆசியக் கண்டம், அமைதி, நம்பிக்கை, மற்றும், அன்பான குடும்பப் பிணைப்பைக் கொண்டது என்றும், நாம் அனைவரும் ஒரே குடும்பம், நாங்கள் உங்களுக்கு உதவிசெய்ய விரும்புகிறோம் என்றும் கூறியுள்ளனர்.

மியான்மாரில், இவ்வாண்டு பிப்ரவரி முதல் தேதி இடம்பெற்ற, இராணுவ ஆட்சியை எதிர்த்து, அந்நாட்டு மக்கள் தொடர்ந்து அமைதியான முறையில் போராடி வருகின்றனர். இம்மக்கள் மீது இராணுவம் நடத்திய வன்முறையில், 500க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன. (Fides)

30 March 2021, 15:12