தேடுதல்

மியான்மாரில் நடைபெறும் போராட்டத்தைக் கலைக்க, கண்ணீர் புகை மியான்மாரில் நடைபெறும் போராட்டத்தைக் கலைக்க, கண்ணீர் புகை 

மியான்மார் அமைதிக்காக ஐரோப்பிய ஆயர்கள் விண்ணப்பம்

மியான்மார் நாட்டில் மீண்டும் மக்களாட்சி நிறுவப்படவேண்டும் என்று, ஐரோப்பிய கண்டத்தில் உள்ள 32 ஆயர் பேரவைகளின் நீதி, அமைதிப் பணிக்குழுக்கள் இணைந்து, அறிக்கையையொன்றை வெளியிட்டுள்ளன

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மியான்மார் நாட்டில் மீண்டும் மக்களாட்சி நிறுவப்படவேண்டும் என்று, ஐரோப்பிய கண்டத்தில் உள்ள 32 ஆயர் பேரவைகளின் நீதி, அமைதிப் பணிக்குழுக்கள் இணைந்து, அறிக்கையையொன்றை வெளியிட்டுள்ளன.

பிப்ரவரி 1ம் தேதி, மியான்மார் நாட்டில், அந்நாட்டு இராணுவம், ஆட்சியிலிருந்த Aung San Suu Kyi உட்பட, பல தலைவர்களை கைது செய்ததோடு, அந்நாட்டில் இராணுவ ஆட்சியை அமல்படுத்தியது.

பிப்ரவரி மாதம் முழுவதும், அந்நாட்டில் தொடர்ந்து இடம்பெற்றுவந்த போராட்டங்களின் உச்சகட்டமாக, பிப்ரவரி 28 கடந்த ஞாயிறன்று, இராணுவம் மேற்கொண்ட கடினமான அடக்குமுறையால், குறைந்தது 18 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதையடுத்து, ஐ.நா.அவையின் மனித உரிமைகள் அமைப்பு தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

கர்தினால் போ: 'கண்ணுக்குக் கண்' அனைவரையும் குருடாக்கும்

மியான்மார் ஆயர் பேரவையின் தலைவரும், ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவருமான கரத்தினால் சார்ல்ஸ் மாங் போ அவர்கள், ஒப்புரவுக்காகவும், உரையாடலுக்காகவும் மீண்டும் ஒருமுறை விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளார்.

கண்ணுக்குக் கண் என்ற கொள்கை உலகமனைத்தையும் பார்வையிழக்கச் செய்துவிடும் என்ற புகழ்பெற்ற கூற்றை தன் விண்ணப்பத்தில் சுட்டிக்காட்டியுள்ள யாங்கூன் பேராயர் கர்தினால் போ அவர்கள், வன்முறையை விடுத்து, உரையாடல் முயற்சிகளை அனைவரும் மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.

அண்மைய நாள்களில், மியான்மார் நாட்டில் கூடுதலாக பரவிவரும் வன்முறைகளைக் குறித்து தங்கள் கவலையை வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் நீதி, அமைதிப் பணிக்குழுக்கள், பிப்ரவரி 7, ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த விண்ணப்பத்துடன், தங்கள் குரலையும் இணைப்பதாகக் கூறியுள்ளன.

வன்முறையைக் களைந்து, உரையாடலை மேற்கொள்ள மியான்மார் ஆயர்கள் தங்கள் நாட்டு இராணுவத்திற்கு விடுத்துள்ள விண்ணப்பத்துடன் தாங்களும் இணைவதாகக் கூறியுள்ள ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் நீதி, அமைதிப் பணிக்குழுக்கள், சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியறுத்தியுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 March 2021, 15:15