தேடுதல்

Vatican News
10ம் ஆண்டு நினைவு நாளில், சுனாமி உருவான ஃபுக்குஷிமா கடலை நோக்கி மக்களின் மௌன அஞ்சலி 10ம் ஆண்டு நினைவு நாளில், சுனாமி உருவான ஃபுக்குஷிமா கடலை நோக்கி மக்களின் மௌன அஞ்சலி  (AFP or licensors)

ஃபுக்குஷிமா அணுஉலை பேரிடரின் 10ம் ஆண்டு

வாழ்வைப் பாதுகாக்கும்பொருட்டு, நாட்டிலுள்ள அனைத்து அணுசக்தி நிலையங்களும் அகற்றப்படவேண்டும் - ஜப்பான் ஆயர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஐப்பானில் ஃபுக்குஷிமா அணு உலை பேரிடர் இடம்பெற்றதன் பத்தாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள், மார்ச் 11, இவ்வியாழனன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த பேரிடரில் இறந்தவர்களுக்காக இறைவேண்டலை எழுப்பியுள்ள ஜப்பான் ஆயர்கள், அந்த பேரிடர் நடைபெற்ற பகுதியில் திருஅவை ஆற்றிவரும் மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளை, தொடர்ந்து ஆற்றும் என்று உறுதி கூறியுள்ளனர்.

பாதிக்கப்பட்டுள்ள Tohoku பகுதி மக்களுக்கு, பொருளாதார அளவில் உதவிகளை ஆற்றுவதோடு, தோழமையுணர்வு, மற்றும், நம்பிக்கையை வளர்ப்பதற்கு, ஜப்பான் திருஅவை தொடர்ந்து செயலாற்றும் என்றும், ஆயர்களின் அறிக்கை கூறுகின்றது.

அணு உலை பேரிடர் ஏற்பட்டவுடனேயே, பாதிக்கப்பட்ட பகுதியின் மீள்கட்டமைப்புப் பணிக்கென்று, ஜப்பான் கத்தோலிக்கத் திருஅவை, செந்தை மறைமாவட்டத்தில், மையம் ஒன்றை உருவாக்கியது என்றும், இந்தப் பணிக்கு, அடுத்த பத்து ஆண்டுகளுக்கு, ஜப்பானின் 16 மறைமாவட்டங்களும் இணைந்து உதவிசெய்யும் என்றும், ஆயர்களின் அறிக்கை கூறுகின்றது.   

தங்களின் மீள்கட்டமைப்பு நடவடிக்கைக்கு உதவுகின்ற தன்னார்வலர்கள், மற்றும், பன்னாட்டு ஆதரவாளர்களுக்கும், ஜப்பான் ஆயர்கள் தங்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

மேலும், வாழ்வைப் பாதுகாக்கும்பொருட்டு, நாட்டிலுள்ள அனைத்து அணுசக்தி நிலையங்களும் அகற்றப்படவேண்டும் என்று, 2011ம் ஆண்டில் விடுத்த அழைப்பை, மார்ச் 11, இவ்வியாழனன்று, ஜப்பான் ஆயர்கள், தங்கள் அறிக்கையில் மீண்டும் வலியுறுத்திக் குறிப்பிட்டுள்ளனர்.

2011ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி, ஜப்பான் கடலில் ஏற்பட்ட 9.0 ரிக்டர் அளவு நிலநடுக்கம் மற்றும், சுனாமியால், ஃபுக்குஷிமா அணுஉலை பேரழிவுக்குள்ளாகியது. இந்தப் பேரிடரில் ஏறத்தாழ இருபதாயிரம் பேர் இறந்தனர்.

மிகப்பெரிய அணுக் கதிர்வீச்சு மாசுபாட்டைத் தோற்றுவித்த ஃபுக்குஷிமா அணுஉலை விபத்து, உலகில், செர்னோபில் அணுமின்நிலைய விபத்துக்குப்பின் நடந்த மிகப்பெரிய அணு உலை விபத்து என்று கருதப்படுகிறது. (Agencies)

12 March 2021, 15:12