தேடுதல்

Vatican News
திருப்பயண தயாரிப்பில் ஈராக் நாடு திருப்பயண தயாரிப்பில் ஈராக் நாடு  (ANSA)

நம்பிக்கை, ஒருமைப்பாடு, அமைதியைத் தர உள்ள பயணம்

CRS அதிகாரி: ஈராக் நாட்டில் திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம், மதங்களிடையே நல்லிணக்கத்தைப் புதுப்பிக்க உதவும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வார இறுதியில் ஈராக் நாட்டில் மேற்கொள்ளவுள்ள திருத்தூதுப் பயணத்திற்குத் தயாரிப்பாக, மதங்களிடையே ஒப்புரவுப் பணிகளை ஊக்குவித்து வருவதாக, CRS எனப்படும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் கத்தோலிக்க துயர் துடைப்பு அமைப்பு அறிவித்துள்ளது

ஈராக் நாட்டின் கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே நம்பிக்கைகளையும் மத நல்லிணக்கப் பணிகளையும் ஊக்குவித்து வருவதாகத் தெரிவித்த CRS அமைப்பின்  திட்ட செயல்பாட்டு அதிகாரி Hassan Amer Abdullah அவர்கள், பல ஆண்டுகளாக மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள ஈராக் நாட்டிற்கு, திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம், மதங்களிடையே நல்லிணக்கத்தைப் புதுப்பிக்க உதவும் ஒரு வாய்ப்பாக அமையும் என்று கூறினார்.

ஈராக் மக்கள் அனைவரும் கொண்டிருக்கும் பொதுப் பாரம்பரியத்தையும், அவர்களிடையே நிலவவேண்டிய உடன்பிறந்த உணர்வையும் ஊக்குவிப்பதாக திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம் அமையும் என்றுரைத்த Amer அவர்கள், எந்த மதத்தைச் சார்ந்தவர் என்பதை கருத்தில் கொள்ளாமல், மக்களுக்காகவே மக்கள் என்பது வலியுறுத்தப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

எந்த மத பின்னணியிலிருந்து வந்தாலும், அனைத்து ஈராக் மக்களும், சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதிலும், அமைதியை நிலைநாட்டுவதிலும் இணைந்து, ஈடுபாட்டுடன் செயல்படுவதைக் காணமுடிகிறது என்ற மகிழ்ச்சியை வெளியிட்ட CRS அதிகாரி, திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம் மக்களுக்கு நம்பிக்கை, ஒருமைப்பாடு, அமைதி என்ற செய்திகளை வழங்குவதாக இருக்கும் என்றார்.

திருத்தந்தை ஒருவரால் முதன் முதலில் மேற்கொள்ளப்படும் இத்திருத்தூதுப் பயணம், அந்நாட்டின் இன்றைய நிலைகளையும், அதன் வரலாற்றையும் உலக மக்கள் அறிந்துகொள்ள உதவுவதாக இருக்கும் என மேலும் கூறினார், அதிகாரி Amer.

2003ம் ஆண்டில், ஈராக் மீது, அமெரிக்க தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாலும், 2014ம் ஆண்டு, இஸ்லாமிய தீவிரவாதக் குழுவின் எழுச்சியாலும், பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள ஈராக் நாட்டில், அமைதியையும் ஒப்புரவையும் கட்டியெழுப்ப, பல்வேறு நிறுவனங்கள் முயன்று உழைத்துவரும் சூழலில், இம்மாதம் 5 முதல் 8ம் தேதி வரை இடம்பெற உள்ள திருத்தந்தையின் திருத்தூதுப்பயணம், இம்முயற்சிகளுக்கு பெரும் ஊக்கத்தை வழங்குவதாக இருக்கும் என்றார், CRS கத்தோலிக்க துயர் துடைப்பு அமைப்பின் அதிகாரி Amer.

02 March 2021, 15:19