தேடுதல்

திருத்தந்தையின் ஈராக் பயணம் குறித்து செய்தியாளர்களுடன் பேசும் கர்தினால் சாக்கோ திருத்தந்தையின் ஈராக் பயணம் குறித்து செய்தியாளர்களுடன் பேசும் கர்தினால் சாக்கோ 

திருத்தந்தையை வரவேற்க காத்திருக்கும் ஈராக் மக்கள்

கிறிஸ்தவ-இஸ்லாமிய உரையாடலின் முக்கியத்துவத்தை உலகறியச் செய்வது, ஈராக் திருத்தூதுப் பயணத்தின் ஒரு முக்கிய நோக்கம் - கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மார்ச் 5, இவ்வெள்ளியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை தங்கள் நாட்டில் வரவேற்க, அனைத்து மத நம்பிக்கையாளர்களும் ஈராக்கில் காத்துக்கொண்டிருக்கின்றனர் என்று, கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை, கர்தினால் லூயிஸ் இரஃபேல் சாக்கோ அவர்கள், வத்திக்கான் செய்தித்துறையுடன் மேற்கொண்ட ஒரு நேர்காணலில் கூறினார்.

திருத்தந்தையின் வருகையால் அனைவரிலும் மாற்றங்கள்

திருத்தந்தையின் வருகையைப் பற்றிய செய்தி, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர் அனைவரிலும் மாற்றங்களை உருவாக்கியுள்ளதை காணமுடிகிறது என்று கூறிய கர்தினால் சாக்கோ அவர்கள், திருத்தந்தையை வரவேற்கும் வாசகங்கள் அடங்கிய விளம்பரப் பதாகைகளைப் பொருத்துவதில், இருதரப்பினரும் முழு மூச்சில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறினார்.

தங்கள் நாட்டை நல்லதொரு எதிர்காலத்திற்கு அழைத்துச்செல்ல, திருத்தந்தையின் வருகை, மிகப்பெரும் நம்பிக்கையை வழங்கும் என்று தான் நம்புவதாக, தன்னிடம் ஒரு இஸ்லாமியப் பெண்மணி கூறியதை, கர்தினால் சாக்கோ அவர்கள், தன் பேட்டியில் நினைவுகூர்ந்தார்.

உரையாடலின் முக்கியத்துவத்தை உணர்த்த...

கிறிஸ்தவ-இஸ்லாமிய உரையாடலின் முக்கியத்துவத்தை உலகறியச் செய்வது, இத்திருத்தூதுப் பயணத்தின் ஒரு முக்கிய நோக்கம் என்பதை, சுட்டிக்காட்டிய கர்தினால் சாக்கோ அவர்கள், இஸ்லாமியத் தலைவர், பெரும் அயத்தொல்லா அலி அல்-சிஸ்தானி அவர்களை, திருத்தந்தை சந்திக்கும் நிகழ்வு, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர் இருவரிடையிலும் பெரும் தாக்கத்தை உருவாக்கும் என்று எடுத்துரைத்தார்.

ஈராக் அரசு அதிகாரிகள், இஸ்லாமிய சமுதாயத்தில் உள்ள Sunni மற்றும் Shia பிரிவுகளைச் சேர்ந்தவர்கள், கிறிஸ்தவர்கள், மற்றும், ஈராக் நாட்டில் உள்ள அனைவருமே, தங்கள் நாட்டுக்கு முதன்முறையாக வருகைதரும் ஒரு திருத்தந்தையைச் சந்திக்க, மிக ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்று, முதுபெரும் தந்தை, கர்தினால் சாக்கோ அவர்கள், தன் பேட்டியின் இறுதியில் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 March 2021, 15:03