தேடுதல்

Vatican News
சிரியா போரினால், அலெப்போ நகரில், சிதைந்திருக்கும் இல்லம் சிரியா போரினால், அலெப்போ நகரில், சிதைந்திருக்கும் இல்லம்  (AFP or licensors)

"ஆண்டவரை மட்டுமே நம்பியுள்ளோம்" – சிரியா நாட்டுப் பேராயர்

சிரியாவின் போரினால் மிகப்பெரும் இழப்பைச் சந்தித்திருப்பது, கிறிஸ்தவ சமுதாயமே என்றும், அதிலும் குறிப்பாக, இளையோர் சிரியாவைவிட்டு வெளியேறியது, மிகப்பெரும் இழப்பு

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"உலக சமுதாயத்தால் கைவிடப்பட்டதைப்போல் உணரும் நாங்கள், ஆண்டவரை மட்டுமே நம்பியுள்ளோம்" என்ற வேதனை நிறைந்த சொற்களை, சிரியாவின் அலெப்போ நகரில் பணியாற்றும் மாரனைட் வழிபாட்டு முறை பேராயர் Joseph Tobji அவர்கள் கூறினார்.

மார்ச் 15 இத்திங்களன்று, சிரியாவின் உள்நாட்டுப்போர் துவங்கி பத்தாண்டுகளை கடந்துள்ள நிலையில், வத்திக்கான் செய்திக்கு வழங்கிய ஒரு நேர்காணலில், பேராயர் Tobji அவர்கள், இந்தப் போரினால் விளைந்துள்ள சமுதாய, மற்றும் பொருளாதார நெருக்கடிகளைக் குறித்து தன் வேதனைகளைப் பகிர்ந்துகொண்டார்.

இத்தகையைச் சூழலில், கடந்த ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மூவேளை செப உரையின் இறுதியில் சிரியா நாட்டிற்காக விடுத்த விண்ணப்பம் தங்களுக்கு ஓரளவு நம்பிக்கையை வழங்கியுள்ளது என்பதையும், பேராயர் Tobji அவர்கள் குறிப்பிட்டார்.

சிரியாவில் இன்று, 83 விழுக்காட்டினர், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர் என்று குறிப்பிட்ட பேராயர் Tobji அவர்கள், இந்தப் போரினால் மிகப்பெரும் இழப்பைச் சந்தித்திருப்பது, கிறிஸ்தவ சமுதாயமே என்றும், அதிலும் குறிப்பாக, இளையோர் சிரியாவைவிட்டு வெளியேறியது, மிகப்பெரும் இழப்பு என்றும் கூறினார்.

நாட்டை விட்டு வெளியேறியுள்ளவர்கள், தாங்கள் தஞ்சம் புகுந்த நாட்டிலும் துன்பங்கள் அடைந்துவருகின்றனர் என்றாலும், அவர்கள் மீண்டும் சிரியாவுக்குத் திரும்பும் எண்ணத்தில் இல்லை என்பதை, பேராயர் Tobji அவர்களின் நேர்காணல் உணர்த்தியது.

இருள் சூழ்ந்திருக்கும் இவ்வேளையில், அவ்வப்போது ஒளிக்கீற்றுகளைப்போல் நல்ல செய்திகள் வந்தவண்ணம் உள்ளன என்று குறிப்பிட்ட பேராயர் Tobji அவர்கள், வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் சீரமைக்கப்படுவதற்கு முயற்சிகள் துவங்கியிருப்பது, நம்பிக்கை தரும் ஓர் அடையாளம் என்று குறிப்பிட்டார்.

17 March 2021, 15:04