தேடுதல்

Vatican News
மன்னார் மடுமாதா திருத்தலம் மன்னார் மடுமாதா திருத்தலம் 

மடு மாதா திருத்தலத்தில் தங்கும் விடுதிகளுக்கு இந்தியா உதவி

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையே நேரடி பயணத்தொடர்பை மீண்டும் உருவாக்க இலங்கை அரசு முயன்றுவருகிறது - இலங்கை சுற்றுலா அமைச்சர் இரணதுங்கா

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

இலங்கையின் வடகிழக்கில் உள்ள மடு மாதா திருத்தலத்திற்கு வரும் திருப்பயணிகள் தங்குவதற்கென 144 தங்கும் விடுதிகளைக் கட்டித் தர இந்திய அரசு முன்வந்துள்ளது.

இலங்கைக்கான இந்திய தூதுவர் Gopal Baglay, இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்னா இரணதுங்கா, மன்னார் ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தில், இந்திய அரசு, 15 இலட்சம் அமெரிக்க டாலர் செலவில், மடு மாதா திருத்தலத்தில், தங்கும் விடுதிகளை கட்ட உள்ளதாகவும், கோவிட் பெருந்தொற்று காலத்திற்குப்பின், சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே சுற்றுலாத் தொடர்புகள் மீண்டும் அதிகரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்திய அரசின் இந்த உதவி மிகவும் பயனுடையது என, தங்கள் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ள இலங்கை தமிழர்களும், திருப்பயணிகளும், இது ஒரு முக்கிய முன்னேற்றப் படி என தெரிவித்துள்ளனர்.

மன்னாரின் மடு மாதா திருத்தலத்திற்குள், பயணிகள் தங்கும் விடுதிகளைக் கட்ட, இந்தியா உதவ முன்வந்துள்ளதன் வழியாக, அங்கு திருப்பயணிகளாக வரும் பல்வேறு மதங்களின் மக்களுக்கு, இந்தியா உதவுகிறது என, இலங்கை கத்தோலிக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

திருப்பயணிகளுக்கு தங்கும் விடுதிகளைக் கட்டுவதில் உதவ இந்திய அரசு கடந்த வியாழனன்றே இசைவு அளித்ததைத் தொடர்ந்து, வருங்காலத்தில் மேலும் பல நல்ல திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக, இந்திய தூதர் Baglay அவர்கள் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையே நேரடி பயணத் தொடர்பை மீண்டும் உருவாக்க இலங்கை அரசு முயன்றுவருகிறது என்று கூறிய சுற்றுலா அமைச்சர் இரணதுங்கா அவர்கள், கொரோனா பெருந்தொற்றே இந்த முயற்சிக்கு பெரும் தடையாக உள்ளது எனவும் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள மடு மாதா திருத்தலம், கிறிஸ்தவர் அல்லாதோரும் விரும்பிச் செல்லும் திருத்தலமாக உள்ளது.

16 March 2021, 14:28